நிறங்கள்
அம்மா நிறம் எனக்குத் தெரியாது, அப்பாவும் அக்காவும் அவள் நிறத்தை எவ்ளோ வர்ணித்தாலும், என் யூகங்களைத் தாண்டி அவளுடைய நிறம் பற்றி எனக்கு திருப்தியே இருந்ததில்லை.. விபரம் தெரியாத வயதின் பகலொன்றில், என் ரூம் படுக்கையில் ..சாஞ்சதுபோல அந்த ஆல்பம் பார்த்துக்கிட்டிருந்தேன்.. அப்பா அந்த சோஃபா ல உக்காந்து பேப்பர் படிச்சுக்கிட்டிருந்தாரு ..அந்த ஆல்பம தூக்கமுடியாம தூக்கிட்டு போயி .. அவளைக் காட்டி.. ஏன்பா இதெல்லாம் கருப்பு வெள்ளையா இருக்குன்னு கேட்டேன்... அதுக்கு அப்பா சொன்னாரு
"அப்போது நிறங்களெல்லாம் அங்கேயேதான் இருந்தன... நாங்கள்தான் பின்தங்கியிருந்தோம்" ன்னு...
அவரோட கடைசிக்காலம்வரைக்கும் ,, அம்மாவுடைய நிறம்பற்றி எனக்கு சரியா விவரிக்க முடியலையே என்கிற குறை அவர்கிட்டே இருந்துகிட்டேதான் இருந்துச்சு ம்ம்,,
அதிக காலம் கழிச்சு, எனக்கொரு மக பொறந்தா,,, குறுக்கும் நெடுக்குமா டெலிவரி வார்டுக்கு முன்னாடி நடந்துக்கிட்டிருந்த என்னை .. அந்த லேபர் வார்டு ல இருந்து வெளிய வந்த செவிலி ஒருத்தவங்க கூப்பிட்டு .. எனக்கு பெண் குழந்தைப் பிறந்திருக்கிறதா சொன்னாங்க,,
அவ அரைமயக்கத்துல இருந்தா ..
குழந்தையை தராசு தட்டுல வச்சிருந்தாங்க ,,,
குண்டா கொழுக் மொழுக் ன்னு நாவை அப்பப்போ வெளி நீட்டியபடி கண்களை மூடிக்கொண்டு மாநிறமா இருந்தவளை பார்க்கிறேன்..
எனக்கும் அவளுக்குமான முதல் சொந்தத்திற்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்..
கண்களில் தாரையாய் கண்ணீர்...
கனவுலகத்திலிருந்தும்,, கருமுட்டையின் கதகதப்பிலிருந்தும்,, வெளியேறாத மாயையில் இருந்திருப்பாளோ என்னவோ ..
மெல்ல சிரித்தபோது .. அருகில் இருந்த செவிலி ஒருவர் (மனைமக்கள் கொண்ட வயதானவர்) ..அவளைப் பார்த்து " கடவுள் சிரிக்கச் செய்கிறார்" என்றார் .. ஏதும் புரியவில்லை ...
தலை கொஞ்சம் குறுக்கு ,, குளிக்கவைக்கிறப்போ எண்ணெய் போட்டு தட்டி தலையை சரி செய்வார்களாம் .. இதெல்லாம் அப்போ .. எனக்கேதும் தெரியாதே ... பெண் குழந்தையாச்சே .. வளர்ந்தா தோழிகள் கேலி செய்வார்களே ... அவளுக்கு அந்த தாழ்வு மனப்பான்மை வராம வளர்க்கணுமே .. இதேதான் எனக்குள்ளான அவளைப்பற்றிய அலையோட்டம் ...
அடுத்தவருடம் அவள் தம்பியும் பிறந்தான் ..
அவன் அம்மா நிறம் ... ... எல்லோரையும்விட
அவளை மனம் கோணாதவாறு பார்த்துக்கொள்வேன் .. அவள் நிறத்தை யாரும் கருதாதவாறு அரவணைத்துக் கொள்வேன் ..இருவரும் ஒருசேர வளர ஆரமித்தார்கள் .. ஒருவரை விஞ்சி ஒருவர் அறிவாய் இருந்தார்கள் .. சிறு வாதங்களில் எல்லாம்.. அவளே எப்போதும் ஜெயிப்பாள் ...
ஆனா அவளை அவங்கம்மாவும் தம்பியும் "கருப்பி " ன்னு சொல்லும்போது மட்டும் அவ்விடத்தில் ஏதும் உரைக்க வார்த்தையில்லாமல் மௌனித்து குறுகிப்போகிறாள் ...
சோஃபாவில் அமர்ந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.. அழுவதுமாதிரி முகத்தைவைத்துக்கொண்டு வந்து அருகி "பாருங்கப்பா அம்மாவும் தம்பியும் என்னை கருப்பி ன்னு சொல்லுறாங்க ன்னு தொண்டைத் திண்மை குரல் பிடிக்கச் சொல்லி அழும்போது ,,
கண்கள் தாமரைப்போல விரியும்,,,
அப்போ நா சொல்லுவேன் .. அழாத கண்ணு "அப்பாகிட்ட ஒரு பெரிய மாயாஜாலம் இருக்கு .. அந்த மாயாஜாலத்தாலே உலகத்துல இருக்கிற, உனக்குப் பிடிச்ச எல்லாத்தையும் உன் நிறத்துக்கு மாத்திடறேன் "".. நீ அழாத தங்கம் ன்னு சொல்லுவேன்
அவளும் அவளோட அப்பா அவளுக்காக எதையும் செய்வார் என்ற நம்பிக்கையை அங்கே எடுத்துக் கொண்டு முகம் துடைத்து .. மீண்டும் அவர்களோடு சண்டையிட தயாராகிறாள் ....
""காலம் வற்றாத ஜீவநதி""... அவளுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒருபடி அழகாகிறாள் ... பூப்பெய்து பெரியமனிஷி ஆனா கொஞ்சநாளில் .. அதே சோஃபா வில் அமர்ந்திருக்கிறேன் .. அருகில் வந்து மடியில் படுத்துக்கொண்டாள் ... அற்பம் முன்னம் எட்டத் துவங்கிய என் வயிறை நீவி.. அப்பா ன்னு கூப்பிட்டா ... என்னடா தங்கம் ன்னு கேட்டேன் .... உங்க மாயாஜாலம் எனக்காக எதையெல்லாம் நிறம் மாத்துச்சோ இல்லையோ,,, ஆனா என்னை நிறம் மாத்திடுச்சு பார்த்திங்களா ன்னு சொன்னா...
நிறைய வளர்ந்துட்டா .. மொட்டைத்தலைக்கு பூ வைக்கணும்னு அழுத காலம் போயி .. அம்மாவிடம் சண்டைபோடுறா..முழம் பூவிற்காக..
இன்னைக்கு என்கூட சேர்ந்து உக்கார்றப்போ ... "அம்மாகிட்ட போயி உக்காருமா" ன்னு சொல்லும்போது
"நிறங்களெல்லாம் அங்கேயேதான் இருக்கின்றன ..ஆனால் நாம்தான் பின் தங்கியிருக்கிறோம்"
அனுசரன்