சோகங்களல்ல சொர்க்கங்களே
எரிமலை நிகர்த்த இளையவனே – நீ
இன்னும் ஏனிங்கு உறங்குகிறாய்
கடமைகள் கோடி கிடக்கையிலே – உன்
கண்மூடி எதற்கு பதுங்குகிறாய்?
ஒன்றும் என்னிடம் இல்லையென – நீ
உளறித் திரிவது சரிதானா?
வென்றிட வையகம் இருக்கையிலே – நீ
வேதனை கொள்வது முறைதானா?
பாறையில் ஒன்றும் விளையாது - நீ
படுத்தே கிடந்தால் வாழ்வேது
மாலையின் பரிதியில் சூடேது – நீ
மலைத்தால் வெற்றியும் தீண்டாது
கால்கள் இரண்டையும் முன்னெடுத்து – நீ
கடலலை போன்று புறப்படு
தடுத்திடும் தடைகளை தவிடாக்கி – இந்த
தரணிக்கு யாரென காட்டிடு
பத்துவிரல் அதை படையாக்கு - வரும்
பழுதுகள் அனைத்தும் மடையாக்கு
சித்தத்தின் ரத்தத்தை புதிதாக்கு – நீ
சிதைத்திட முடியா கடுந்தேக்கு
பிழைத்திட ஒன்றும் வழியில்லை - எனும்
பல்லவி பாடும் நிலைவிடுத்து
உள்ளத்தின் சோம்பலை களையெடுத்து - உன்
ஊக்கத்தை உழைப்பின் வழிசெலுத்து
கைவிரல் பத்தும் கடப்பாரை – நீ
கலங்கிடச் செய்திடு தடுப்போரை
கட்டாந்தரை என நினைபோரை - நீ
காவென மாற்றி விடுநீரை
சிந்தையை தினமும் சீர்படுத்து – புது
சிறகுகள் முளைக்கும் வழிகிடைத்து
செய்கையை நாளும் மெருகேற்று – அது
சிகரத்தில் ஏற்றும் படியமைத்து
சீக்கிரம் எழுந்தால் போதுமடா – அந்த
சிகரம் உனக்கு சொந்தமடா
தாமதம் என்பது தீமையாடா – வீண்
தரித்திரம் உன்னைத் தீண்டுமடா
சுண்டு விரலால் இமயத்தை – நீ
சிண்டு முடிந்து அடக்கிடலாம்
சொன்னதை செய்தால் பூமியிலே – வாழ்வு
சோகங்கள் அல்ல சொர்க்கங்களே!
பாவலர். பாஸ்கரன்