கடவுளே உனக்கே வெளிச்சம்
இறைவா, இயற்கையின் தலைவா !
உன்னை உள் வைத்து
உயர்ந்தன கோயில்கள்,
விண்தொட்டது கோபுரங்கள்,
வியந்தனர் பேரறிஞர்.
எழிற்தவழ் கற்பனையிற்
செழித்தது நுண்கலைகள்,
சிற்பமொடுச், சித்திரமும்,
இசையொடு, நாட்டியமும்.
இருத்தியுனை நாயகனாய்
பிறந்தன பெருங்காப்பியங்கள்.
இலக்கியத்தின் இலக்கானாய்
கவிதைக்கு விதையானாய்
நாடகத்தில் நடந்தாய் நீ
கொழித்தது மொழிவளம்.
இத்துணை ஏற்றமும்
இலங்கிட ஒருபுறம்,
மானுடம் ஏனின்று
முடமாகும் திசையில் ?
ஒன்றே குலம்
ஒருவனே இறையெனும்
ஒருமையின் தத்துவம்
சிறுமையிற் சிக்க
சமயங்கள் கிளைத்தன,
சாதிகள் முளைத்தன,
சடங்குகள் மலிந்தன.
முதலாளி என்றுன்னை
முன்வைத்து ஒரு கூட்டம்
பொருளுக் கருள்விற்க,
சிந்தைப் பொருளா முன்னை
சந்தைப் பொருளாக்கினர் சிலர்.
உன்பெயரில் வியாபாரம்
உன்பெயரில் பகற்கொள்ளை.
கண்மூடி பக்தர்கள்
மனம்நொந்த அடியாருன்
அருளுக்கு விலை பேசுவர்.
இறைவனின் வேட்பாளரென
இiயங்குவோர் ஏராளம்.
ஏமார்ந்தோர் எண்ணிலர்.
ஏனிந்த அழிவு ?
கிடைக்குமோ விளக்கம்?
ஆக்கல் உன்செயலெனில்
அவலம் நீக்கலும் நின்செயலே.
கண்மூடி கடலிரங்வோரைக்
காப்பது யார் பொறுப்போ ,
கடவுளே உனக்கே வெளிச்சம்