அடிமறி மண்டில ஆசிரியப்பா

அடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இலக்கணம் :

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் யாவும் பொருந்தி இருக்க வேண்டும்.

அடிதோறும் நான்கு சீர்கள் அமைந்திருக்க வேண்டும்.

முதல், நடு, இறுதி என்ற எந்த அடியையும் எங்கு அமைத்துப் பாடினாலும் ஓசையும் பொருளும் சிதையாமல் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டுப் பாடல்கள் :

அழுக்கா றுடையவன் அழிவதோ உறுதியே
ஒழுக்க முடையான் உயர்வ துறுதியே
வழுக்கலில் ஊன்றுகோல் சான்றோர் வாய்ச்சொலே
விழிப்புடன் வாழ்பவன் வேண்டிய தடைவனே. - புலவர் அரங்க. நடராசனார்.

சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
வாரலை யெனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே. - யாப். காரிகை எடுத்துக்காட்டுப் பாடல்.

அன்பருள் உணர்வே ஆளுக உலகே
இன்பம் பிறர்துயர் இலாதே நீக்கலே
என்றும் நாடுக இனியநற் புகழே
நின்று பெயர்சொலும் நேர்மை உண்மையே. - த.ந.

இனி, அடிமறி மண்டில ஆசிரியப்பா எழுதலாமே.


இடுகையாளர் தமிழ நம்பி
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றியமை யாதது இளமையிற் கல்வியே
மென்பொருள் தேட மயங்குவாள் மனைவியே
சென்றிடும் செல்வம் செலவிடச் செல்வரே
குன்றிடாச் செல்வம் குன்றுறும் குமரனே!

'மென்பொருள் தேட' - மென்மையாக (அதாவது, அதிரடியும், 'பொருள் சேர்க்க வேண்டும்' என்ற வெறியுடனும் இல்லாமல் அவளுக்கும் உரிய நேரத்தை ஒதுக்கி அவளையும் மகிழ்வித்தபடி) பொருளைத் தேட, எந்த மனைவிதான் மயங்காமாட்டாள்?

மூன்றாமடி நான்காம் சீர் 'செல்வரே' மக்கட்செல்வத்தைக் குறிக்கும்.

அவனடிமை

----------------------------------------------

அவனடியாரின் பாடல்கள் அனைத்தும் அருமை. படித்து வியந்தேன். முதற்பாடல் ஆறு அடிகள் வருகின்றனவே! நான்கு நான்கு அடிகளே வரும். ஆறடிகள் வரலாமா? தமிழநம்பி அவர்கள் விளக்குவாராக....

அகரம் அமுதா

-----------------------------------------------
அகரம் அமுதா ஐயா,

அடிமறி மண்டில ஆசிரியப்பாவிற்கு அடி வரையறை ஏதும் கூறப் படவில்லை.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணப்படி,

ஆயிரம் அடிகளும் அதற்கு மேலும் கூட வரலாம்.

தமிழ நம்பி

எழுதியவர் : (22-Aug-18, 5:25 am)
பார்வை : 794

மேலே