ஆசை ஆசையாய்

ஆசை ஆசையாய்...

====================================ருத்ரா இ பரமசிவன்



ஆசை ஆசையாய்

மனம் எனும்

இந்த ரப்பரை நீட்டி நீட்டி

எத்தனை ஆயிரம் மைல்கள்

நீட்டியிருப்பான்.

உயர உயரப்போய்

அந்த விண்ணின்

எத்தனை எத்தனை கோடி மைல்கள்

ஏறியிருப்பான்.

காதலுக்கு மட்டுமே

இப்படி

நுரைக்கோபுரங்கள் கட்டுவதில்

அவனுக்கு

மிக மிக ஆசை..

"கடல் நுரை போல்

நரைத்துப் போகும் வரைக்கும்

சாக்ரடீசும்"

அறிவுக்கோபுரம்

கட்டிக்கொண்டே போகச்சொன்னான்.

பாவம். இந்த

"கல்பொரு சிறு நுரைகள்"

என்ன செய்ய இயலும்?

இந்த பூச்சிமயிர்கள்

கட்டிய புழுக்கூடு

"வயதுக்கு வந்து"

மின்னல் குழம்பில்

விழுந்துவிட்ட விட்டில்கள் ஆனதால்

வாழ்க்கை வானம்

கசங்கிய காகிதம் ஆனது.


அன்று ஒருநாள்

அவள் ஓரக்கண்ணில்

உதய வானமும்

அந்தி வானமும்

மெகந்தி போட்டதில்

அவன்

அடி ஆழத்தில் கிடக்கின்றான்.

எங்கே வானம்?

எங்கே பூமி?

இனி

மீண்டும் ஒரு முறை

அவள் சிரிக்கும்போது தான் தெரியும்!


================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (28-Aug-18, 9:29 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 134

மேலே