இரக்கன்

அப்பா நம்ம வீடுக்கு ஒரு ஆட்டுக்குட்டி வாங்குவோம் பா, என்னய்யா இது காலையில எந்திச்சதும் ஆட்டுக்குட்டி வாங்குவோம்ன்னு சொல்ற, இல்லப்பா நேத்து கனவுல ஒரு ஆட்டுக்குட்டி நம்ம வீட்டுல நிக்கிற மாதிரி கனவு வந்த்துச்சுப்பா, அது சரி “குத்தாலத்துல இடி இடிக்க கொடைக்கானல்ல மழ பெஞ்ச கதையா இருக்கு உன் கத." இதுக்காகலாம் ஆடு வாங்கு மாடு வாங்குன்னு சொல்ற போடா லூசுபய மவனே போயி பள்ளிடத்துக்கு கிளம்பி போய் படிக்க வழிய பாரு. ராசு அழுதுக்கொண்டே “ நா போகமாட்டேன் பா நீ வா ஆட்டுக்குட்டி வாங்க போலாம் வா பா. எனக்கு ஆட்டுக்குட்டி வேணும் நா சாப்பிட மாட்டேன் பள்ளிக்கூடம் போ மாட்டேன் "
“அடி செருப்பால கஞ்சிக்கு வழியில்ல நீ என்ன ஆட்டுக்குட்டி கேட்கிற அதுக்கு புல், புண்ணாக்கு கொடுத்து வளக்கனும் உன்ன வளக்கவே வழி இல்ல இதுல அது வேற வளக்கனுமா" என ராசுவை அடிக்க கை ஓங்கினார் ராசுவின் அப்பா.
ராசு அழுதுகொண்டே வெளியில் ஓடினான். அரக்கன் கறி கடை வாசலில் போய் நின்று ஆடு வெட்டுவதை பார்த்தான் ராசு. கையில் அய்யானரு ஆவேசமா அருவா பிடிச்சுட்டு இருக்க மாதிரி அரக்கன் அவசரமா ஆவேசமா ஆடு வெட்டி ஆட்டுகறி விற்பனைக்கு ஆட்டை தயார் செய்து கொண்டிருந்தான்.சிலர் கடையில் கறி வாங்க காத்து நின்றனர். ராசுவும் அவர்களை போல அரக்கன் செயல்பாடுகளை கவனித்தபடி ஆடுகளையும் பார்த்துக் கொண்டே நின்றான். உடனே அங்கு வந்த ராசு அப்பா பள்ளிகூடம் போக சொன்னா இங்க என்ன வந்து நிக்க வீட்டுக்கு போல போயி கஞ்சி குடிச்சுட்டு பள்ளிக்கூடம் போலேன்னு நாக்கை மடக்கி கண்களை உருட்டி கையை நீட்டி ராசுவின் பின் தலயில் தட்டினார். பதுங்கும் பாம்பை கண்ட தவளை சட்டென குளத்தில் தாவுவதை போல ராசு அரக்கன் கடைக்குள் பாய்ந்து சென்று பதுங்கிக் கொண்டான்.
கையி இருந்த கறி வெட்டும் அரிவாளினை கறி வெட்ட அடித்தளமாக இருக்கும் கட்டையில் ஒரு வெட்டு வெட்டி பதித்து வைத்து வைத்துவிட்டு. அருகில் இருந்த இரத்தம் படிந்து படிந்து நிறம்மாறிப்போன பல வருடங்கள் ஆனா பழைய துணியில் கையை துடைத்தும் துடைக்காமலுமே எழுந்து தன் கடைக்குள் பாய்ந்த ராசுவை கையில் பிடித்தான். " என்னலே ஆச்சு? ஏன் இப்படி வெட்டபோற ஆடு துள்ளுற மாதிரி துள்ளி வர , என்ன ஆறுமோ அண்ணாச்சி நீங்க என்ன இத்தன ஆத்திரமா இவன புடிக்க வர என்ன பிரச்சன " என்று அரக்கன் சிரித்தப்படி எதார்த்தமா கேட்டான். ராசு அரக்கன் பின்னால் ஒழிந்துக் கொண்டான். " “ஏலே இந்த பயலும் உன்ன மாதிரி ஆட்டுக்கறி கட வைக்க போறானா கேளுலே, கனவுல ஆட்டுக்குட்டி வந்துச்சு, ஆமக்குட்டி வந்துச்சுன்னு சொல்லிட்டு ஆட்டுக்குட்டி வாங்கி வளக்கனும் நிக்கான்லே பள்ளிகூடம் போ சொன்னா போ மாட்டேன்னு அழுது அடம் பிடிக்கான்லே எனக்கு ஆத்திரமா வருதுலே , படிச்சு நல்ல ஆளா வருவான் பாத்த இவ ஆடுலாலே கேட்க்கான்." என கடைத்தெருவே அதிர கத்திக் கொண்டு ராசுவை கடிந்தார். “ அட என்ன அண்ணாச்சி நீ இது ஒரு விசயமா இதுக்கு போயி இந்த பயல அடிக்க வர , ஆசைக்கு ஒரு ஆட்டுக்குட்டி வளக்க தான கேட்கான் வாங்கி கொடு அண்ணாச்சி "என அரக்கன் ராசுவின் முதுகில் தட்டி தன் இடுப்பில் ராசுவில் தலையை சாய்த்துக் கொண்டு சொன்னான். ஏலே நீயும் புரியாம பேசுத என்ட்ட குட்டி வாங்கவும் துட்டு இல்ல குட்டிக்கு தீனிப் போட்டு வளக்கவும் துட்டு இல்ல. இவனும் ஆடு மாதிரியே சாவ பள்ளிவாசல் இல்லாம அலையுறான்லே. நீ சும்மா இருலே அவன இங்க விடு நாலு மிதி மிதிச்சு நா இழுத்துட்டு போறேன் என ராசு மேல் இருந்த அரக்கன் கைய தட்டினான். " அட சும்மா இரு அண்ணாச்சி அவ சின்ன பய.
ஒரு குட்டி தானே அதும் வளக்க தான கேட்க்கான் . ஏலே ராசு நீ இப்ப பள்ளிக்கூடம் போலே நீ வீட்டுக்கு வரும் போது ஆட்டுக்குட்டி உங்க வீட்டுக்கு வரும்லேன்னு ராசு கண்ணீர துடச்சு அரக்கன் அவனை கடையில் இருந்து கொண்டு போய் நடுத்தெருவில் விட்டான். தப்பிச்சா போதும்ன்னு ராசுவும் வீட்டை தேடி ஓடிவிட்டான். ஆறுமோ அண்ணாச்சி “நேத்து கறிக்கு ஆடு புடிக்க போகும் போது முக்கூடல் சந்தையில ஒரு நல்ல குட்டி புடிச்சுட்டு வந்தேன் நம்ம கருப்பசாமி கொடைக்கு வெட்ட நம்ம ஊரு பெரிய ஆளு வீட்ல புடிச்சுவிட சொன்னாவ அத நா என்னோட வீட்ல விட்டு வளக்கனும் நம்ம கோயில் கொடை வர வரைக்கும். அத இவனே வளத்துட்டு போட்டும் என ராசுவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆறுமுகத்திடம் அரக்கன் யதார்த்த சிரிப்போடு சொன்னான். “ஏலே அது எப்படி சரிபட்டு வரும் என ஆறுமுகம் முகத்த சுழித்தான்.“ ஆடு கொடைக்கு கொழு கொழுன்னு வளரனும் இப்ப குட்டி ஆடா தா இருக்கு தீவனமும் நா தரேன் அத அக்கறையோட பாத்து பதனமா வளத்தா போதும் என்ககு இங்க கறி போடவும் , கிடா புடிக்கவும் தா நேரம் இருக்கு. அதுனால நம்ம ராசு வளக்கட்டுமே அவன் ஆசயும் நிறைவேறுமே " என நிதானமாய் ஆறுமுகத்திடம் சொன்னான்.
சரி என்னம்மோ போங்கலே உன் பாடு அவன் பாடு சாய்ந்தரம் குட்டிய அவுத்து வீட்டுல கொண்டுவந்து கட்டுலேன்னு சொல்லிட்டு ஆறுமுகம் நடந்தான். ராசு வீட்டுக்கு வரும் போது வேப்பமரத்து அடியிலே வெள்ளை பஞ்சு மேல் கருப்பு நூல் சிதறவிட்டது போல் ஒரு ஆட்டுக்குட்டி கழுத்தில் மணியுடன் சிதறிக்கிடந்த புல்லை தின்று அசைப்போட்டுக் கொண்டிருந்தது. அதை பார்த்த தாமதம் தான் ராசு கையில் இருந்த பையை கோழிக்கூட்டில் வீசி விட்டு ஆட்டுக்குட்டி அருகில் ஓடினான் குட்டியோ மெல்லி ஒலியுடன் மே என கதறியது பயத்தில். ராசு அதன் கழுத்தை கட்டி அதன் முன் கால் இரண்டும் மேல் இருக்குமாறு தூக்கினான். “ ஏலே ஏலே முரட்டுபயலே விடுலே இதுக்கு தாம்லே குட்டி வேண்டாம்னு அந்த அரக்க பயட்ட தலயால அடிச்சேன்.
கொன்றாதலே அதுக்கு தெண்டமழுவ நம்மட்ட துட்டு இல்லன்னு ராசுவை திட்டினான். " ராசு ஏப்பா இது யாது பா எங்க இருந்து வாங்குன் விலைக்கா புடிச்ச எம்புட்டு ரூவா, இல்ல அரக்க அண்ண கடையில வாங்குனயான்னு கேள்வியாய் கேட்டான் ஆறுமுகத்திடம். ஆறுமுகமோ இத பலி கொடுக்க தா இவன் வளக்க சொல்றோம் சொன்னா இவ வளக்க மாட்டான்னு நினைச்சு. “ குட்டி கேட்ட வாங்கியாச்சு இனி ஒழுங்கா அத பாத்துக்கோ நேரத்துக்கு புல் தண்ணிலாம் போடு அரக்கனும் அப்போ அப்போ வந்து குட்டிய பாத்துட்டு போவான்னு மட்டும் சொல்லிட்டு போயிடாரு.
ராசுவும் சரி நமக்கு
குட்டி கிடச்சுட்டு இனி நம்ம பேசாம இத வளப்போம்ன்னு சந்தோசத்தில குட்டிய வளத்தான். அரக்கன் கொடுத்த குட்டியாகத்தான் இது இருக்க வேண்டும் என்ற யூகத்தில் அதற்கு “இரக்கன் ”என பெயரிட்டு வளத்தான் ராசு.குட்டியும் கொழுத்த ஆடாகியது ஒரு வருடத்தில். அந்த வருட ஆடி மாதத்தில் கருப்பசாமி கொடைக்கு ஊரு தயாராகியது. அரக்கன் ஆறுமுகத்தை பார்த்து கடைக்கு வர சொன்னான் ஆட்ட நாளைக்கு கோவில்ல கொண்டு போயி கட்டனும் என்று ஆறுமுகத்திடம் ஆட்டைக் கேட்டான். ஆறுமுகமும் சரி அதுக்கு என்னலே புடிச்சுட்டு போலேன்னு சொல்லிட்டாரு. அரக்கன் மறுநாள் காலையில் ஆட்டை அவிழ்த்து கொண்டு சென்றான். கோவிலில் தன் வயது பசங்களோட நின்னு சாமி ஆடி விளையாடிக் கொண்டிருந்த ராசு தனது ஆட்டை கோவிலை நோக்கி அரக்கன் இழுத்து வருவதை கண்டு திகைத்தான். அரக்கன் அருகில் ஓடி சென்று “ஏம்னே எங்க இரக்கன நீங்க புடிச்சுட்டு வரீங்கன்னு கேட்டான். இது உங்க இரக்கன் இல்லலே நம்ம சாமி கருப்பனோட இரக்கன்லேன்னு சொன்னாரு. “ அது எப்படி இத நா தானே வளத்தேன் எது எங்க சொந்த ஆடு என வழிமறித்தான் ராசு. அட வழிய விடுலே இது உங்க சொந்த ஆடு இல்லலே கருப்பனுக்கு சொந்தம்லே அவரு தா நீ அழக்கூடாதுன்னு உனக்கு கொடுக்க சொல்லி என்கிட்ட குடுத்தாரு . இப்ப அவரு ஆட்ட அவரே கேட்காருலேன்னு ஆட்டை கோவில் பந்தலில் கட்டினான் அரக்கன். “ அப்படினா இத நீங்க இன்னைக்கு கோயில்ல வெட்டப் போறிங்களான்னு கண்ணீர் ததும்ப ராசு உடைந்த குரலில் கேட்டான். அரக்கன் ஆமாம்லேன்னு சொல்லி ராசு தோளில் தட்டிவிட்டு சென்றான். ராசுவும் அரக்கன் பின்னாடியே சென்றான் அழுதான் அரக்கனிடம் கெஞ்சினான்.ஆட்ட வெட்டாதிங்க அண்ணே எனக்கு என் இரக்கன் வேணும்னே.
நா படிச்சி வேற ஆடு கோயிலுக்கு புடிச்சு தரேன்னே விடுங்கன்னே என அழுது புலம்பினான். அரக்கன் அவனை கோபத்தில் கையை புடித்து இழுத்து அவன் வீட்டு வாசலில் விட்டு சென்றான். ராசு ஓயாது அழுதான். இரவு நேரம் கொடைக்கு கோயில் கூட்டம் கூடியது.மேளம் , நாதஸ்வரம் வானவேடிக்கை எல்லாம் ஒலிக்க ஆடு பயத்தில் மே மே மே என அலறியது. அப்பா கையில் இருக்க பிடித்து நின்ற ராசுவை ஆடு பாத்து பாத்து மேலும் கத்தியது துள்ளியது.
ராசு தாரை தாரையாய் கண்ணீர் ஒழுக கொடை நடைபெறும் கூட்டத்தில் நின்றான். ஆட்டை பலி கொடுக்க அரக்கன் அரிவாளை தாயார் செய்வது கண்டு ராசு ஓடினான அரக்கன் காலினை பற்றி அழுதான் வேண்டாம்னே வேண்டாம்னே என அழுதான். அரக்கன் அதிர்ந்து போய் “ஏலே விடுலே கால , காவு கொடுக்க வளத்த ஆட காலமெல்லாம் காப்பத்த முடியாதுலே.
அது தெய்வகுத்தம்லேன்னு ராசுவிடம் சினந்தார். “ கருப்பசாமி என்ன தண்டிக்கட்டும் எங்க ஆட விடுங்கன்னே என்றான். " ஏலே இன்னும் கொஞ்ச நேரம் தா அது செத்துரும் அதுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் அழுவ அப்புறம் பேசாம நீ போயி விளையாடுவ இதுக்காக நா ஆட விட முடியுமாலே ஊரு பெரியவ என்ன வெட்டிருவாங்கலேன்னு சொல்லிட்டு எழுந்தான் அரக்கன். எழுந்த அரக்கன் கை அரிவாளை தன் கையோடு பிடித்தபடி ஆட நீங்க வெட்டுனா நானும் செத்து போயிருவேன் என அழுதான். அரக்கன் ஒரு நிமிடம் பதறிப்போனான் என்ன இந்த பய இப்படி சொல்றானே என மனதில் குழம்பியபடி அங்கிருந்து பேசாமல் நகர்ந்தான். சாமக்கொடைக்கு ஆடு பலியிட நேரம் வந்தது அரக்கன் அரிவாளை ஏந்திய படி தயாராய் நின்றான் இரக்கன் தலை குனிந்து நிற்க அரக்கன் கம்பீரமாய் கையில் அரிவாளுடன் வெட்ட தயாரய் நின்றான். அரக்கன் காதில் ராசுவின் அழுகுரலும் அவன் நானும் செத்துருவேன் என சொன்ன வார்தையும் விழுந்துக் கொண்டே இருந்தது. ஆட்டின் தலையில் தண்ணீர் ஊற்ற ஆடு வேண்டாம் என்பது போல் தலையசைக்க ஆடு சம்மதித்தது என ஊரார் சொல்ல அரக்கன் தன் வலக் கையால் அரிவாளை ஓங்கி ஆட்டின் கழுத்தில் வெட்ட வரும் போது வெட்ட வந்த அரிவாளின் வேகத்தினை குறைத்து தனது இடக்கையை இடையில் விட்டு வெட்டினை தன் கையில் வாங்கினான் வெட்டு தவறி இரத்த பலியாகியதால் இந்த ஆட்டு கருப்பனுக்கு ஏற்றதல்ல அத வெட்ட வேண்டாம் விடுங்க என ஊரார் அரசல் புரசலாக பேசி முடிவு செய்தனர்.“இந்த ஆட்ட வுடுங்கப்பா அதுக்கு பதிலா பூசணிக்காய் இரத்த பலி கொடுங்கப்பா என கோவில் பெரியோரும் சாமி ஆடுபவர்களும் சொல்லவே. அரக்கன் பிடியில் இருந்து விடுபட்டு இரக்கன் ராசுவை நோக்கி சென்றது.
ராசு அழுத முகத்திலேயே சிரித்தபடி ஆட்டை கட்டி தழுவினான்.இதை பார்த்த அரக்கன் இத்தனை வருடம் ஆடு வெட்டும் வேலையில் எனக்கு இரக்கம் வந்ததில்லை. ஆனால் இந்த இரக்கனை மட்டும் என்னால் வெட்ட முடியவில்லையே. என அரக்கனிடமும் ஒரு இரக்கன்(ம்) இருப்பதை உணர்ந்து கண் கலங்கினான். மொத்ததில் அவனும் அரக்கன் அல்ல இரக்கன்.
சுட்டித்தோழி சுபகலா.