இரவு பகலென இரு தேசம்

இரவு பகலென இரு தேசம்

இரவின் நுனி தொடுகையில்
பகலவன் பணி செல்வான்
பகல் தேசம் தேடி

கயலின் தெறித்த செதில்களாய்
விண்மீன்கள்
நீலக்கடலில் நீந்தி திரியும்

வான் குழந்தையின் நெற்றியில்
திருஷ்டி பொட்டாய் நிலவவள்

கரம் இழந்த தாயாய்
கட்டிஅணைக்க முடியாமல்
வெட்கி நாணுகிறாள்

நட்சத்திர குழந்தைகளோ
நாலாபுறமும் சிதறிநின்று சிரிக்க

ஒன்று கண் சிமிட்டும்
மற்றொன்று மினுமினுக்கும்
வேறொன்று விரையும்
முத்தமிட எத்தனித்து முடியாமல் போகும்

சத்தமில்லா இந்த வித்தைகளை
ரசித்து நிற்கும் பூமியின் பூமரங்கள்
தலையாட்டி வழியனுப்பும் நிலவுக்கு
தலைமகளாம் நிலவவளோ
மழலைகளை அழைத்துச்சென்றாள்
மறுதேசம்

பட்டன்று புலர்ந்தது பகல் பனி காலை
நிலவவளோ நித்திரை கொண்டாள்
பகலவனோ பனிவிலக்கி - தன்
பணிதொடர்ந்தான்

எழுதியவர் : இளவல் (24-Sep-18, 4:36 pm)
பார்வை : 180

மேலே