மானிடப் பிறவி

மானிடப் பிறவி

வாடிய பயிருக் கெல்லாம்
வான்மழை போலக் கல்வி!
வாடிடும் வறியோர்க் கெல்லாம்
வழங்கிட வேண்டும்! இன்றே
சாடிட வேண்டும் கல்விச்
சந்தையாய் மாறும் போக்கை!
நாடிதை திருத்த நீயும்
நல்லதோர் வழிசொல்லாயோ?

பதவியில் இருப்போர் எல்லாம்
பணத்திற்கு அடிமையாகி
உதறிட லாமோ உலகை?
உண்மையை விற்கலாமோ?
சிதறினால் நாட்டின் சீர்கள்
சிறுமையே வந்து சேரும்!
கதறிடும் நெஞ்சம்! நாட்டின்
கண்களே வழிசொல் வீரோ ?

கோடிகள் வருவ தென்றால்
குற்றங்கள் புரியலாமோ ?
நாடிதை உயர்த்தும் கல்வி,
நாமதை விற்க லாமோ ?
தேடிட வேண்டும் செல்வம்
தேகத்தின் உழைப்பினாலே!
திருடிட வேண்டாம்! தீயோர்
திருந்திட வேண்டுமன்றோ ?

வாடிடும் மலரா னாலும்
வாசனை அளித்து வாழும் !
சூடிட மாலை தந்தே
சுயநல மில்லை என்றிடும் !
பிறந்தது பிறர்க்கு என்றே
பெரியதோர் உண்மை சொல்லும்!
மறந்திட லாமோ நாமும்
மானிடப் பிறவி அன்றோ ?

எழுதியவர் : கவி இராசன் (26-Sep-18, 11:53 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 113

மேலே