தாயன்பு
தமிழ்க் கவிதைப் பூங்கா
பாவரங்கம் -17
பொது தலைப்பு :- #அன்பில்_சிறந்தது
துணை தலைப்பு:- #தாயன்பு
============================================
#தமிழ் வணக்கம்
எடுப்போர்க்கு கைப்பிள்ளை
தொடுப்போர்க்கு மணக்கும் முல்லை
எடுக்க வற்றாது சுரக்கும் தமிழ்ப்பால் - தமிழே
உன்னை வணங்குகிறேன் வெகு அன்பால்..!
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
#தலைமை வணக்கம்
சீர் தூக்கும்
துலாக்கோல் ஆகி
நெறி நின்றே நீதி வழங்கும்
அவை தலைமைதனை
வணங்குகிறேன் இரு கரத்தால்..!
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
#அவை வணக்கம்
தமிழமுதம் அள்ளிப் பருகி
ஒளிர்ந்தே வளர்ந்திருக்கும்
இன்னுமின்னுமாய் பருக
காத்திருக்கும் சான்றோர் அவரை
வணங்குகிறேன் பெருமிதத்தால்..!
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
#தாயன்பு
கருவினுள்ளும் உணவளித்தாள்
உயிருடன் உருவும் அளித்தாள்
உந்தி வருடும் போதினிலும்
அன்பையதில் அள்ளி வைத்தாள்..!
கருவறையில் காலுதைக்க
தொட்டு தொட்டுத்தான் ரசித்தாள்
மரணவலி கண்டபோதும்
நம் ஜனனத்தில் சொர்கம் புகுந்தாள்..!
வந்துதித்த நாள் முதலாய்
அவளின் வையகமும் நாமானோம்
கொஞ்சிக் கொஞ்சி மடி சாய்த்தாள்
அவளன்பில் சிறை பிடித்தாள்..!
உறங்குதற்கு கண்விழிப்பாள் - நாம்
உண்பதற்கோ பசி மறப்பாள்
நம் கண்ணில் தூசி என்றால்
அவள் கண்கள் அழுதிருக்கும்
நம் மேனியில் கீறல் என்றால்
அவள் நெஞ்சம் குருதி கொட்டும்..!(56)
பிரிகின்ற நீள் பொழுதில்
பித்தாவாள்... பிதற்றிடுவாள்
பெற்றவளின் அன்பைப்போல்
பெரிதெதுவும் இல்லை உலகில்..!(65)
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
#நன்றி_நவிலல்
அன்பின் வழி சிறந்தவளாம்
அன்னை அன்னையவள்
என்றே நான் கவி பாட
செவிமடுத்த ஆன்றோர்க்கும்
தலைமைக்கும் ஏனையோர்க்கும்
வணக்கத்துடன்
நவில்கின்றேன் என் நன்றிகளை..!கள்