பெருஞ்சாலையைக் கடக்கின்ற பட்டாம்பூச்சிகள்

ஒரு மழை இரவில்
சிறு தோட்டம் விட்டொரு
பெரும் காட்டுக்குள் வழிதவறி
வந்து சேர்ந்தன சில பட்டாம்பூச்சிகள்..
மின்மினிகளின் துணையில்
எப்படியோ அடிபடாமல் இரவைக் கடத்தின..
இறக்கைக்கு ஓய்வு தேவையென
அவை நினைத்த வேளையில்
காட்டைக் கடந்திருந்தன..
சட்டென அவைகளின் செவிப்பறை கிழித்தது..
சர் சர்ரென கடக்கும் வாகனங்கள் கண்டு
தவித்துத்தான் போயின ஒரு கணம்..
ஆனால் சாலையின் மறுபக்கம் இருந்து
பெருமலர்த்தோட்டத்தின் சுகந்தமானது சுண்டியிழுத்தது..
கொஞ்சம் உயரம் போய்ப் பறந்தால் உயிரோடாவது இருக்கலாம்
என்பது கூட தெரியாமல்
சில கீழும் சில மேலும் சாலையைக் கடந்தன..
பட்டாம்பூச்சிகள் கடந்திருந்த நொடி
சாலையில் சவமாகிக் கிடந்தன பாதி சொந்தங்கள்..
இவற்றைக் கொன்றது மலரின் சுகந்தமா மனிதரின் சாலையா
என்ற கேள்வி மனதைக் குடைந்தாலும்
தப்பிப்பிழைத்து தாண்டிப்பறக்கும் பட்டாம்பூச்சிகளின் அழகில்
நான் சொக்கித்தான் நிற்கிறேன்..

எழுதியவர் : Velanganni A (14-Oct-18, 9:12 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 46

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே