மனசு பேசுகிறது மீராவின் கடிதம்

இந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சினிமாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில் நிகழ்ந்திருந்தால்... அதுவும் நம் வாழ்க்கையாக இருந்திருந்தால்... எத்தனை பேர் இதைச் சிலாகிப்போம்.ஒரு இரவு ஆத்மார்த்தமான அன்புடன் நிறையப் பேசி மகிழ்ந்திருந்தாலும் அவர்களுக்குள் வேறெதுவும் நிகழ்ந்திருந்தால் என்பதே நம் எண்ணமாக இருக்கும் இல்லையா... இப்படியான சந்திப்பு நிகழும் ஆங்கிலப் படங்களில் உதடுடன் உதடு மோதிக்கொள்ளும் முத்தமும் காமமும் அதன் பின்னான கலவியுமே காட்சிப்படுத்தப்படுகிறது.ராம் திருமணம் செய்யவில்லை... ஜானு உருகினாள்... சரி... இதையே மாற்றிப் பாருங்கள்... ராமுக்கு திருமணம் ஆகியிருந்தால் ஜானு உருகியிருப்பாளா..? இல்லை ராம்தான் ஜானுவுடன் சுற்றியிருப்பானா...? அப்படியே சுற்றினாலும் வீட்டுக்கு கூட்டிப் போயிருப்பானா..?இவர்கள் ஊர் சுற்றிய விவரம் எப்படியோ ராம் மனைவிக்கோ அல்லது ஜானுவின் கணவனுக்கோ தெரிய வரும்போது அந்தக் குடும்பங்களில் நிகழ்வது என்னவாக இருக்கும்... சூறாவளிதானே... நம்மில் எத்தனை பேர் இது போன்றதொரு நிகழ்வை டேக் இட் ஈஸியாக எடுத்துப்போம்.ஜானுவின் கடிதம் தட்ஸ் தமிழிலும்(One India - இணைப்பு இங்கே) பிரதிலிபியிலும் பகிரப்பட்டபோது பலர் ஆஹா ஓஹோ என்ன எழுத்து என்றார்கள். சிலர் மேலே சொன்னது போல் சிந்தித்திருந்தார்கள். சினிமா சினிமாதான்... எதார்த்தம் எப்போதும் வேறுதான்.அதன் பாதிப்புத்தான் இந்த மீராவின் கடிதம்...மதிப்பிற்குரிய ராம் சார்...நான் மீரா... உங்கள் பள்ளித் தோழி ஜானகியின் மகள்.உங்களை எந்த உறவு முறையில் அழைப்பது என்பதே மிகப்பெரிய குழப்பமாய் எனக்குள்... அதனாலயே 'மதிப்பிற்குரிய' என மரியாதைக்குரியவராக உங்களை மாற்றிக் கொண்டுள்ளேன்.உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும்...இவள் என்ன பேசப் போகிறாளென்று உங்களுக்குத் தோன்றலாம். நான் சிறுமி அல்ல... உலக விஷயங்கள்.. நல்லது கெட்டது என எல்லாம் அறிந்து அதற்கேற்றவாறு வாழக்கூடிய இளைஞிதான்... எனவே வாழ்க்கை குறித்தும் பேசலாம் தப்பில்லை.பெரும்பாலும் தோற்ற... இங்கே தோற்ற என்பதைவிட முழுமையடையாத என்பதே சரியாகும் என்பதால் முழுமையடையாத காதல்களின் பின்னே காலச் சூழலில் காதலர்கள் சந்திக்கும் பட்சத்தில் தன் குழந்தையிடம் ஒருவருக்கு ஒருவர் 'மாமா', 'அத்தை' எனத்தான் அறிமுகம் செய்து வைப்பார்கள்... இது அவர்களை ஏமாற்றிக் கொள்ளும் முயற்சி என்பது தெரிந்தும் சமூகத்தின் பார்வைக்காக அப்படித்தான் நடந்துகொள்ள முடியும்.சில மாதங்கள் முன்பு அம்மாவுக்கு நீங்க எழுதிய கடிதத்தில் மாமான்னு அறிமுகம் செய்து விடுவாயோ என்று பயந்தேன் எனச் சொல்லியிருந்தீர்கள். அதான் உங்களை முறை சொல்லி அழைக்க முடியாமல் தவிக்கிறேன். சார் என்பதே இருக்கட்டும் பொதுவாய்...அம்மாவுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை வாசித்தேனா என்றுதானே நினைக்கிறீர்கள்..?வாசித்தேன் சார்... நீங்ககூட என்னிடம் எல்லாம் சொல்லச் சொல்லியிருந்தீர்கள்தானே,,, அம்மா கடிதத்தை மட்டும் காட்டவில்லை... எல்லாம் சொன்னாள்... இங்கு காதல் குற்றமெல்லாம் இல்லை... அதெல்லாம் நம்மூரில்தான்... ஆணவக்கொலைகள் கூட நடப்பதுண்டுதானே... நேற்றுக் கூட ஒரு செய்தி பார்த்தேன் பள்ளிச் சீருடையுடன் பேருந்து நிலையத்தில் காதலனுடன் குலாவிய மாணவி என... இங்கு காதல் தவறில்லைதான் என்றாலும் பொது இடங்களில் எல்லை மீறல் எல்லாம் கிடையாது... ஒருவேளை அடைத்து வைத்தால் அதுபோல நிகழலாம்... என் வீட்டில் நான் சிறைப்பறவை அல்ல.எனக்கு அம்மாவைப் பிடிக்குமா..? அப்பாவைப் பிடிக்குமா..? என்றால் அம்மாதான். பெண் பிள்ளைகளுக்கு அப்பாவைத்தானே பிடிக்கும் என நீங்கள் நினைக்கலாம்... எனக்கு அம்மாவைத்தான் பிடிக்கும்... அப்பாவுக்கு எப்பவும் பிஸினஸ்தான்... ஆனாலும் அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்... அம்மாவையும்தான்...நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை..?என் அம்மாவிடம் சொல்லாத காதலையா இத்தனை வருடமாகத் தூக்கிச் சுமந்தீர்கள்...?எனக்கு அதை நினைத்தால் சிரிப்பாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது.அம்மா வேறு உங்களைப் புகழ்ந்து தள்ளுகிறாள்... இத்தனை வருடமாக நீங்க வெர்ஜினாமே... ஆம்பளை நாட்டுக்கட்டை என்று வேறு சொன்னாள்... எனக்கு நாட்டுக்கட்டைக்கு அர்த்தம் புரியலை.. அம்மாவே விளக்கினாள்.ஆமா அம்மாவைப் பத்தாவதோடு விட்டு விட்டுச் சென்னை போனவர் பின் தொடர்பே இல்லாமல் வருடங்கள் கடந்த நிலையில் காலேஜ் படிக்கும் போது தேடி வந்ததாய் சொல்லியிருக்கிறீர்கள்...அதுவரை உங்களை தஞ்சாவூருக்கு இழுக்காத அம்மா நினைவு திடீரென இழுத்தது எப்படி..? ஏன் தஞ்சாவூரில் இருந்து கிளம்பும் போது அம்மாவிடமோ உங்க நட்புக்களிடமோ சொல்லாமல் போனீர்கள்..?உங்க வாழ்கையில் எதுவும் மேஜிக் நிகழ்ந்ததா என்ன..?ஏதோ ஒரு பெண் உங்களைக் காதலித்ததாகவும் அவளிடம் அம்மா மீதான உங்கள் காதலைச் சொன்னதாய் அம்மாவிடம் சொன்னீர்களாம்... அம்மா விரும்பி விரும்பிக் கேட்டபோதெல்லாம் சொல்லாத காதலை எவளோ ஒருத்தியிடம் சொல்லியிருக்கிறீர்களே... அதெப்படி... கேட்டால் வயதும் வாழ்வும் மாற்றங்களைச் சந்தித்ததே காரணம் என நீங்கள் சொல்லலாம்...உண்மையில் பயம் உங்கள் காதலைத் தின்றிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வீர்களா..?அப்பாவுக்கு அம்மாவின் காதலும் அது நிறைவேறாமல் போனதும் தெரியும்... அவருக்குள்ளும் ஒரு நிறைவேறாத காதல் உண்டு... அதை அம்மாவும் அறிவார்... நானும் அறிவேன்... அவர் உங்களைப் போல் தூக்கிச் சுமக்கவில்லை.... இவ்வளவுக்கும் கல்லூரியில் படிக்கும் போது காதலைச் சொல்லி சில ஆண்டுகள் வாழ்ந்த காதல் என்றபோதிலும்...உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்... கோபப்பட மாட்டீங்கதானே... நான்தான் ஜானகியின் பொண்ணாச்சே... எப்படிக் கோபிப்பீங்க...?உங்களுக்குத் திருமணம் ஆகி என்னைப் போல் ஒரு பையனோ பெண்ணே இருந்திருந்தால் அம்மாவைப் பார்த்தபோது எப்படி நடந்து கொண்டிருப்பீர்கள்...?அம்மாவுடன் அந்த மழை இரவில் ஊர் சுற்றியிருப்பீர்களா..?அம்மாவை உங்க விட்டுக்கு கூட்டிப் போயிருப்பீர்களா...?உங்கள் மனைவி அதை ஏற்றுக் கொண்டிருப்பாங்களா..?அதையெல்லாம் விடுங்க... எனக்குள்ள ஒரு மறக்க முடியாத காதல் இருக்குன்னு உங்க மனைவிக்கிட்ட சொல்லி இருப்பீங்களா..?எங்கம்மாவை எங்கிட்ட சொல்லச் சொன்ன நீங்க உங்க பிள்ளைகளிடம் சொல்லியிருப்பீர்களா...?ஒருவேளை நான் காதலித்தால்... அப்படி எதுவும் செய்யமாட்டேன்... நான் ஜானகியின் வளர்ப்பு... அம்மாவின் காதல் வலி எனக்குத் தெரியும்... ஒருவேளை காதலித்தால் என் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள்... இருக்கும் நாடு அப்படி... இதே உங்க பிள்ளைங்க காதலிச்சா ஏத்துப்பீங்களா...?என்னடா இந்தப் பெண் இத்தனை கேள்விகளை முன் வைக்கிறாள் என்று உங்களுக்குத் தோன்றலாம்... இதெல்லாம் முடியுமா..? என்ற கேள்வியை உங்கள் முன் வைத்துப் பாருங்கள்... பதில் கிடைப்பதில் இருக்கும் சிக்கலை அறிவீர்கள்.எல்லாமே என்னால் முடியும் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாய் மட்டுமே வரலாம்...செயலாய் அதெல்லாம் அவ்வளவு எளிதாய் முடியாது சார்.நீங்க சிங்கப்பூர் வந்திருந்தால்... அம்மா உங்க கூட சுற்றியிருக்க முடியாது... வீட்டுக்கு வேண்டுமானால் அழைத்திருக்கலாம் அதுவும் நள்ளிரவில் அல்ல... பகலிலேயே சாத்தியமாகியிருக்கும்...அப்பாவுக்கும் அறிமுகம் செய்து வைத்திருக்கலாம்... பள்ளித் தோழனாக...இன்னொன்னு கேட்க மறந்துட்டேன் பாருங்க...அந்தப் பொக்கிஷப் பெட்டியை எவ்வளவு நாள் பத்திரப்படுத்துவீர்கள்...?உங்களுக்குத் திருமணம் ஆனால் அதைக் கொண்டாடுவீர்களா..?உங்கள் மனைவி முன் இன்னொருத்தியின் துப்பட்டாவையும்... குர்தாவையும்... ஜீன்ஸையும்... ஏன் காய்ந்து போன பூவையும் எடுத்து வைத்து நினைவுகளில் நீந்த உங்களால் முடியுமா..?அப்பாவின் முன் இதெல்லாம் செய்ய முடியாமல் மனசுக்குள்ளேயே தவிக்கிறாள் அம்மா.. இதுதான் உண்மை... பல நாள் யாருமற்ற தனிமையில் 'யமுனை ஆற்றிலே' பாடியிருக்கிறாள் கண்ணீரோடு... எனக்கான தாலாட்டே அதுதான் தெரியுமா..?தஞ்சாவூர் செல்லும் போதெல்லாம் நீங்க படித்த பள்ளியின் வாசலுக்கு ஓடிச் சென்று பார்த்து தன் நினைவுகளை மீட்டியிருக்கிறாள்.அம்மாவைச் சுமந்து திரிந்தேன் என்று சொல்லும் நீங்கள் எத்தனை முறை அந்தப் பள்ளிக்குப் போயிருக்கிறீர்கள்...?ஏதோ மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய சூழலாம் அந்த வழி சென்றீர்கள்... நினைவை மீட்டீர்கள்... இல்லையென்றால்...?நெருங்கிய நண்பர்கள் வாட்ஸ் அப் குழுமம் வைத்திருந்தும் அதில் உங்களை இணைக்கவில்லை... அம்மாவை இணைத்திருக்கிறார்கள்... இதெல்லாம் எப்படி... நம்பும்படியாகவா இருக்கிறது....இன்னொன்றும் கேட்கிறேன்..இதே ரீயூனியன்... இரவு முழுவது தனிமை ஊர் சுற்றல் என என் அப்பாவோ... உங்கள் மனைவியோ... செய்திருந்து தெரிய வந்தால் இதிலென்ன இருக்கு... அவங்க மனசுக்குள்ள வாழ நினைத்த வாழ்க்கைன்னு நீங்க ரெண்டு பேரும் ஏத்துக்கிட்டிருப்பீங்களா..? இல்லை எப்படி நானிருக்கும் போது இன்னொருத்தனுடன் / இன்னொருத்தியுடன் ஊர் சுற்றலாம் என மல்லுக்கு நின்றிருப்பீர்களா..?அம்மா... இப்போது மிகவும் சோர்ந்து... எப்போதும் எதையோ இழந்தது போல் இருக்கிறாள்... காரணம் மீண்டும் பார்க்க நேர்ந்த நீங்களும்... அந்த இரவுத் தனிமையும்...அந்த இரவில் எதை மீட்டுக் கொடுத்தீர்கள் அம்மாவிடம்... பால்யத்தையா... காதலின் வேதனையையா...முதலில் நீங்கள் ஒரு திருமணம் செய்யுங்கள்... உங்களுக்கான வாழ்வை வாழுங்கள்...அம்மா ஒன்றும் திருமணம் செய்ய மறுத்து... அப்பா அவரைக் கட்டாயப்படுத்தி... திருமணம் செய்து கொள்ளவில்லை. விருப்பத்துடந்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.தொலைந்த காதலை தூக்கிச் சுமக்காதீர்கள்... தொலைந்தது தொலைந்ததாகவே இருக்கட்டும்... அதைச் சுமந்தது போதும்.... உங்களுக்கான வாழ்வைச் சுமக்கப் பாருங்கள்.எனது கேள்விகளுக்கான பதிலெல்லாம் நீங்கள் எனக்கு எழுத வேண்டாம்...நீங்கள் திருமணம் செய்தால் மட்டுமே... எனக்கும் அப்பாவுக்குமான அம்மா கிடைப்பாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.... வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுக்கும் சார்...இறுதியாக, என்னைப் போல் உங்களுக்கு ஒரு மகனோ / மகளோ இருந்திருந்தால் என் அம்மாவுக்கு லெட்டர் எழுதுவார்களா இதுபோல...அதுவும் ஆண் பிள்ளை என்றால் என் அம்மாவை எவ்வளவு கேவலமாக பேசியிருக்கக் கூடும்..?எதார்த்தத்தை யோசியுங்கள்.வாழ்ந்து பாருங்கள்.... ராமாக இல்லை ராமச்சந்திரனாக...அம்மாவை நீங்கள் அழைப்பது போல் எழுதிவிடக் கூடாது என்பதாலே கடிதத்தில் அம்மாவின் முழுப் பெயரையும் எழுதினேன்.அப்பாவுக்கு அம்மா எப்போதும் அம்முதான்.... ஜானு என அழைப்பதை அவர் ஏனோ விரும்பவில்லை...அவரிடமும் அம்மாவுக்காக நிறைய காதல் இருக்கு சார்... பிஸினஸ் பிசியிலும் அவர் அதைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்... அம்மா பெற்றுக் கொண்டுதான் இருக்கிறாள்... திருப்பிக் கொடுக்காவிட்டாலும்...நினைவுகளை தூக்கி எறிந்துவிட்டு நிஜத்துடன் வாழப் பழகினால் எல்லாம் சுகமாகும்.நன்றி.

ஜானகியின் மகள் மீரா.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (21-Oct-18, 2:22 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 329

மேலே