தலையாயார் தங்கருமம் செய்வார் – நாலடியார் 52

நேரிசை வெண்பா

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல். 52

- துறவு, நாலடியார்

பொருளுரை:

நிலையாமையியல்பும், பல பிணிகளும், மூப்புத் தன்மையும், இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து சிறந்தவர்கள் தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள்;

கற்று முடிதலில்லாத இலக்கண நூலும் கோள் நூலும் என்று இவை போல்வன கூவிக்கொண்டிருக்கும் பித்தரைவிட அறிவிலாதவர் பிறர் இல்லை.

கருத்து:

இலக்கணம் முதலிய கருவி நூல்களையே என்றுங் கற்றுக்கொண்டிராமல் நிலையாமை முதலியன உணர்ந்து உடனே தவஞ்செய்ய வேண்டும்.

விளக்கம்:

முதலில் நிலையாமை கூறினமையின், நோய் மூப்புச் சாக்காடு என்பன அவற்றால் வருந் துன்பங்களை உணர்த்தி நின்றன.

தவம் உயிர்க்குரிய முயற்சியாதலின், தம் கருமம் எனப்பட்டது.

நல்வினை செய்யாமல் தீவினை செய்வார் கடையானவரும்,

மறுபிறவியின் நற்பயன் கருதி நல்வினை செய்வார் இடையானவரு மாகலின்,

பிறவியையே அஞ்சிப் பயன் கருதாது, தம் கடமையென்று கடைப்பிடித்துத் தவஞ்செய்வார் தலையானவரானார்.

கற்கக் கற்கத் துணிவு பெறாமல் பல்வேறு ஐயங்களுடன் முடிவின்றிச் செல்லுதலின், ‘தொலைவில்லாச் சத்தமும் சோதிடமும்' என்றார்.

‘கலகல கூஉந் துணை யல்லால்'2 என்றலின், இலக்கணம் இங்கே ‘சத்தம்' என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்டது;

இலக்கண நூல் உணர்ச்சியே நல்ல கல்வித் திறமாதலாலும் அக்கருவிக் கல்வியைத் தக்கவாறு கற்றுக் கொண்டு உடனே மெய்யுணர்விற் செல்லுதல் வேண்டுமாதலானும் ‘சத்தம்' என்பதையும்,

நடப்பன நடக்குமென்று துணிந்து தவமுயலாமல் வாழ்நாள் நலங்களையே மேலும் மேலும் விரும்பிக் கோள் நூலையே அலசிக் கொண்டிருத்தல் நன்றாகாதாதலால் ‘சோதிடம்' என்பதையுங் குறித்தார்.

என்றாங்கு இவை யென்பதற்கு ‘என்று இவை போல்வன' என்றுரைத்துக் கொள்க.

பிதற்றல் - அறிவின்றி இடைவிடாமற் கூறிக் கொண்டிருத்தல்.

கற்றும் மெய்யுணர்விற் செல்லாமையின் கல்லாதாரினும் இவர் பேதையார் என்றற்கு, ‘இவை பிதற்றும் பித்தரின் பேதையார் இல்' எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Oct-18, 3:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே