பெண் படும் பாடு

அன்று
கள்ளிப்பால் ஊட்டப்பட்டு மறைந்தவள்
இன்று
கருவி கணிப்பால் காட்டப்பட்டு
கருவிலேயே கரைகின்றாள்

பெண் எனும் கவிதை
வேண்டாம் என்றுதான்
எல்லா விதைகளும்
விதைக்கப்படுகிறது பெண்ணுக்குள்

கள்ளிப் பாலில் தப்பித்த
குழந்தை
தினருகிறது
கள்வர்களின் காமத்துப்பாலில்
தப்பிக்க முடியாமல்

பால் குடி மறந்த பிள்ளை
ஆளாவதோ
அதிகம் பாலியல் தொல்லை

இவள் அழகிற்கு ஏற்றவாறு
ஆண்களுக்கு தட்சணை
கொடுப்பவள்

கல்யாணச் சந்தையில் மணமகனை
ஆயுட்கால ஏலம் எடுப்பவள்

சமைந்தவள் என்பதால்
சமைப்பதும் இவளே

பெண் தலையில்
பேன் கொடுமை
தலைநிமிரும்போது
வன்கொடுமை

ஆணியம் எனும் ஆணியால்
சமூகச் சிலுவையில்
மெல்லியவள் என அறியப்பட்டு
அறையப்பட்ட மலர்

இவள்
இமை அடியே மை
வைப்பதால்
அடிமைப்படுத்த நினைக்கிறது
சமூகம்

கணவன் இல்லை என்றால்
வெள்ளாடை அணிந்து
வெள்ளாடாய் உடன்கட்டை
ஏறியவள்

மாதாமாதம் துன்பம்
அடைவதால் இவள் மாது எனப்படுகிறாள்

செயல்பாட்டில் இல்லாது
எல்லோரும்
ஏட்டில் மட்டும் எழுதும்
மை பெண்மை

பெண் படும் பாடு
மனிதா நீ
அதை மாற்றப் பாடுபடு
அவளைப் போற்றிப் பாடு

பெண்மையைப் போற்றுவோம்

புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (9-Nov-18, 11:33 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : pen patum paadu
பார்வை : 142

மேலே