இன்னும் ஓயாத புயல்
கஜா புயலால் மக்களுக்கு நேர்ந்த பாதிப்பின் வீச்சு வெளிப்படத் தொடங்கியிருக்கும் நிலையில், கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது தமிழக அரசு. புயல் கரையைக் கடந்து இத்தனை நாட்கள் ஆன பிறகும்கூட வீடுகளின் மீதும், சாலைகளிலும் விழுந்து கிடக்கும் மரங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை. போக்குவரத்து சீர்செய்யப்படாததால் நிவாரணப் பணிகளில் சுணக்கம் காணப்படுகிறது. இதே வேகத்தில் பணிகள் தொடர்ந்தால் மின் விநியோகம் சரிசெய்யப்படுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள்கூட ஆகலாம் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கஜா புயலின் நகர்வைப் பேரிடர் மேலாண்மைத் துறை அவ்வப்போது அறிவித்துக்கொண்டிருந்தது. அதன் காரணமாக ஊடகங்களும் அதை மக்களிடம் தொடர்ச்சியாக எடுத்துச்செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று. வானிலை ஆராய்ச்சி மையமும்கூட முந்தைய காலங்களைப் போல் அல்லாமல் அவ்வப்போது ஊடகங்களைச் சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறியது. இவை யாவும் அரசு திறம்படச் செயல்படுகிறது என்பதுபோன்ற மாயையை உருவாக்கின. ‘தொடுதிரை யுகத்தின்’ செல்வாக்கில் சிக்கியிருக்கும் நாம், தொழில்நுட்ப உதவியோடு கட்டமைக்கப்பட்ட அந்த மெய்நிகர் யதார்த்தத்தை உண்மையென நம்பினோம். எதிர்க்கட்சிகளும்கூட அதன் காரணமாகவே தமிழக அரசுக்கு அவசரம் அவசரமாகப் பாராட்டுத் தெரிவித்தன.
வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 82 ஆயிரம் பேர் 471 முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாகவும், மின்கம்பங்கள் சேதமடைந்தால் சரிசெய்வதற்காக 7,000 மின்கம்பங்கள் புயல் பாதிப்பு நேரும் மாவட்டங்களுக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டதாகவும்; 216 மருத்துவ முகாம்களும் நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டதாகவும்; 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்தது. புயல் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவைப் பார்க்கும்போது அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள் போதுமானவை இல்லை எனத் தெரிகிறது.
தகிக்கும் யதார்த்தம்
2018 நவம்பர் 18-ல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘347 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 39,938 மின்கம்பங்கள் விழுந்துள்ளன. 3,559 கி.மீ. நீளமுள்ள மின்வயர்கள் சேதமடைந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ள மின்கம்பங்களின் எண்ணிக்கைக்கும் அரசு முன்கூட்டியே தயார்நிலையில் வைத்திருந்த மின்கம்பங்களின் எண்ணிக்கைக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டைப் பார்த்தாலே கஜா புயலால் நேரப்போகும் பாதிப்பை அரசு அலட்சியமாகக் கருதியிருப்பதை உணரலாம்.
‘2,49,083 நபர்கள் 493 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்’ என அரசு இப்போது கூறுகிறது. புயல் அடிப்பதற்கு முன்னர் 471 முகாம்களில் 82 ஆயிரம் பேர் இருந்தனர். புயல் அடித்த பின்னர் அதே அளவு முகாம்களில் இரண்டரை லட்சம் பேர் உள்ளனர். அப்படியானால், அந்த முகாம்களில் எந்த அளவு நெருக்கடி இருக்கும் என்பதை நாம் யூகிக்கலாம். முகாம்களில் உள்ளவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், குடும்பம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுவருவதாகவும் அரசின் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால், முகாம்களில் உள்ளவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிசியைக் கொண்டு சமைத்துச் சாப்பிடுவதாகவும், சமைப்பதற்குத் தண்ணீர்கூட இல்லாத நிலையில் குளம் குட்டைகளில் இருக்கும் நீரை மொண்டுவந்து சமைப்பதாகவும் முகாம்களைப் பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் என்னிடம் தெரிவித்தார். குடிப்பதற்குப் பாதுகாக்கப்பட்ட நீரும், விளக்கெரிக்க மண்ணெண்ணெயும் முகாம்களில் உள்ளவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நிவாரணங்களுக்கான நெறிமுறைகள்
ஒவ்வொரு மாநில அரசும் பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் என்னென்ன நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மக்களுக்கு ஏற்படும் இழப்பு ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு, மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை 2015 ஏப்ரல் 8-ல் ஒரு ஆணையைப் பிறப்பித்துள்ளது (எண் 32-7/2014 - தேசியப் பேரிடர் மேலாண்மை -1) அதன் அடிப்படையில், தமிழக அரசு ஒரு அரசாணையை (எண் 380, வருவாய்த் துறை, 27.10.2015) வெளியிட்டுள்ளது. முகாம்கள் அமைத்தல், உணவு வழங்குதல், மருத்துவ உதவிகள் வழங்குதல், உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்குதல் முதலானவற்றை அந்த ஆணையில் பட்டியலிட்டுள்ளனர்.
அரசாணையை மீறும் அரசு
பேரிடர் காலங்களில் கால்நடைகளுக்குத் தீவனம் முதலானவை வாங்குவதற்காக, பெரிய கால்நடைக்கு நாளொன்றுக்கு ரூ.70-ம், கன்றுகளுக்கு நாளொன்றுக்கு ரூ.35-ம் வழங்கப்பட வேண்டும். தீவனம் அல்லது புல் கொண்டுவருவதற்கான வாகன வாடகையையும் அரசு தர வேண்டும் என அரசாணை கூறுகிறது. ஆனால், இதை எந்த அரசும் நடைமுறைப்படுத்துவதில்லை.
முழுமையாகச் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு ரூ.4,100 இழப்பீடு தர வேண்டும் எனவும், ஓட்டு வீடுகள் 15% சேதமடைந்தால் ரூ.3,200 தர வேண்டும் எனவும், நிரந்தர வீடுகள் சேதமடைந்தால் ரூ.95,100 தர வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்படி வீடுகளை வகைப்படுத்திப் பார்க்காமல் பொத்தாம் பொதுவாக ஒரு தொகையை நிவாரணமாக அறிவிப்பதே அரசாங்கத்தின் வழக்கமாக இருந்துவருகிறது.
குடிசை வீட்டில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்கு நிவாரணமாக ஆடைகளுக்கென ரூ.1,800, பாத்திரங்களுக்காக ரூ.2,000, வீட்டுக்காக ரூ.4,100, முகாமில் தங்காவிட்டால் சாப்பாட்டுக்கான தொகை என எல்லாமாகச் சேர்த்து சுமார் ரூ.10,000 இழப்பீடு தர வேண்டும் என அரசாணை கூறுகிறது. இந்தத் தொகையே மிகவும் குறைவுதான். ஆனால், அதைக்கூட அரசு கொடுப்பதில்லை. இரண்டாயிரமோ, மூவாயிரமோ அறிவித்துவிட்டு அத்துடன் விட்டுவிடுகிறார்கள். தான் வெளியிட்ட அரசாணையைத் தமிழக அரசே மதிப்பதில்லை என்பது வேதனையளிக்கும் உண்மை.
தற்போது அடித்த புயலில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் முழுதுமாக நாசமடைந்துள்ளன. தென்னைக்கான இழப்பீடு அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. சென்னை சேலம் எட்டுவழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது நன்கு வளர்ந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு தரப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதே தொகையை இங்கு கொடுக்க அரசு முன்வர வேண்டும்.
நிவாரணத்துக்குப் பதில் நிரந்தர வீடு
இந்தியாவிலேயே குடிசை வீடுகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தேன். எனது கோரிக்கை ஏற்கப்பட்டு அன்றைய முதல்வர் கருணாநிதி, தமிழ்நாட்டில் உள்ள குடிசைகளைக் கணக்கெடுக்கச் செய்து 21 லட்சம் குடிசைகள் இருப்பதாகக் கண்டறிந்து, அவற்றை ஏழு ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை 2010-ல் அறிவித்தார். இரண்டு ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன. அது தொடரவில்லை. அதன் காரணமாகத் தமிழ்நாட்டில் குடிசைகள் அதிகம் உள்ள மாவட்டம் நாகப்பட்டினம் என்னும் அவலநிலை இப்போதும் தொடர்கிறது.
‘கஜா புயல் காரணமாக 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 30,404 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 30,328 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன’ என அரசு தெரிவித்துள்ளது. அவற்றுக்குரிய நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எவ்வளவுதான் நிவாரணம் வழங்கினாலும் அதைக் கொண்டு மீண்டும் ஒரு வீட்டைக் கட்ட முடியாது. எனவே, சேதமடைந்த குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்குப் பதிலாக நிரந்தரமான கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருவதற்கு சிறப்புத் திட்டம் ஒன்றைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. தங்களது கண்ணீரைத் துடைக்க நீளாத கரங்கள் வாக்கு கேட்டு நீளுமேயானால், அதற்கான ’பரிசை’ மக்கள் வழங்குவார்கள். இதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வது நல்லது!
- ரவிக்குமார், எழுத்தாளர், வழக்கறிஞர்.
------------------------------------------------------------------------------------------------------------
தலை உடைந்து தொங்கும் எதிர்காலம்...
வீழ்ந்து கிடக்கும் தென்னந்தோப்புகள் அனைத்தும் வெறும் மரங்கள் அல்ல... அது இப்பகுதி இளைஞர்களின் 20 ஆண்டுகால உழைப்பு.
ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வளைகுடா நாடுகளிலும் சிங்கப்பூரிலும் பணிபுரிகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்வது ஒரு வாழ்க்கை முறையாகவே மாறியிருக்கிறது. பெரும்பாலும் உடலுழைப்புத் தொழிலாளர்கள்தான்.
வெளிநாடுகளில் பத்துப் பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து உழைப்பது, அந்தப் பணத்தைக்கொண்டு உள்ளூரில் தென்னந்தோப்புகளை உருவாக்குவது என்று அவர்களின் வாழ்க்கை இருக்கிறது. ஒரு ஏக்கர் தென்னந்தோப்பிலிருந்து ஒரு ஆண்டுக்குத் தோராயமாக ஒரு லட்சம் ரூபாய். அந்தத் தோப்பை உருவாக்குவதற்குக் குறைந்தது பத்தாண்டு காலம் தேவைப்படுகிறது. பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் இருக்கக்கூடிய தென்னை மரங்கள் பாளை விடுவதற்கே ஏழெட்டு ஆண்டுகளாகிவிடும். மரம் முதிர்ந்து நல்ல காய்ப்பு காண வேண்டும் என்றால், பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
இந்த தென்னந்தோப்புகளை உருவாக்குவதற்காக ஒரு தலைமுறை தங்கள் வாழ்க்கையையே செலவிட்டிருக்கிறது. அவர்களின் மொத்த முதலீடும் இப்போது நிர்மூலமாகி விட்டது. வெட்டுக்குத் தயாராக இருந்த தென்னை மரங்கள் எல்லாம் இப்போது தலை உடைந்து தொங்கி நிற்கின்றன.