---- அறிவு --- 1

---- " அறிவு " - - - ( 1 ) - - -
*********************************************

கற்கும் முன்பு இருந்த அறிவு கற்ற பின்பும் இருந்தது
முன்பு பின்பு இரண்டும் அற்று என்றும் அறிவு இருந்தது
கற்குமுன்பு இருந்த அறிவு குறைந்திருந்த தில்லையே
கற்ற பின்பு அறிவின் அளவு கூடிப்போகவில்லையே
கல்லாதன கற்ற போதும் களங்கமாக வில்லையே
கற்ற கசடு அறிந்தபோதும் புனிதமாவ தில்லையே
கற்கும் பொருளில் ஒன்றும்போது கல்வியென்று ஆனது
கலந்து கூடிக் களிக்கும் போது கலவி என்றுஆனது
பாவத்தோடு கூடும்போது பக்தியென்று ஆனது
மோனத்தோடு சேரும்போது ஞான மென்று ஆனது
ஆதி என்று சொல்லும்போது அந்தமாகி நிற்பது
அந்தம் வந்து புரியும்போது ஆதியாகி மறைவது
உடலெடுத்துக் குறுகும்போதும் உயிர் கடந்து விரிவது
ஊனக்கண்கள் உறங்கும்போது ஞானக் கண்ணில் தெரிவது
பார்வை கொண்டு பார்க்கும் பொருளில் பாகுபட்டு நிற்பது

_ _ _ {மனம் அது வெளியாக்க " அறிவு " தொடரும் ) - - -

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Nov-18, 4:13 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 82

மேலே