கஜா

ஏ புயலே
கஜா எனப் பெயரிட்டதால்
உனக்கு மதம் பிடித்துவிட்டதோ?

மதம் பிடித்தால்
நீ கோயிலுக்குத்தானே
செல்லவேண்டும்
ஏன் எங்கள் ஏழைக் குடிசைக்குள்
நுழைந்தாய்?

இறைவா
பயிர்களை
இரவில் முயலாய் வந்து
அழித்தது போதவில்லை என்றா
உயிர்களை
புயலாய் வந்து அழித்தாய்?

சூறாவளியே ஏழைக்கு
ஏன் கொடுத்தாய் தீரா வலியே ?

காற்றே
தென்னை உன்னை தடுத்தது
சாய்த்தாய்
என் அன்னை உன்னை என்ன
செய்தாள் மாய்த்தாய்?

தென்றல் என்று போற்ற
மறந்துவிட்டோம் என்றா
தென்னை மரத்தை
மறைத்தாய்?

போதிகையில்தானே பிறப்பாய்
ஏன் பாயில் படுக்க கூரையைப்
பிரித்து வந்தாய்?

கஜா எங்கள் இதயத்தில்
ஏன் எடுத்தாய் காஜா

வயலின் கயல்
கலைத்தது புயல்

வானத்திலிருந்து நீ
எங்களை பார்க்க வந்ததால்
அனைவரும் வானத்தில் இருந்தே
எங்களை பார்க்கின்றனர்

எங்களுக்கு நிழல் கொடுக்க
வருவோரில் பாதிபேர்
நிழல் படம் எடுக்கவே விரும்புகின்றனர்

இயற்கையே உன்னால்
எனக்கில்லை இரு கையே
இனி எங்களிடம் தேடாதே
நீ அமர இருக்கையே

புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (29-Nov-18, 3:20 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 92

மேலே