பாட முடியாத பாடல்
இன்றொரு பாடலை எழுதுகின்றேன்...
இது உனக்காக அல்ல,
எனக்கான பாடலும் அல்ல,
நமக்காகவும் எழுதவில்லை,
அறிமுகமில்லாத
அன்னியனுக்காகவும் இல்லை.
முகவரி தெரியாமல்
எழுதப்படும் பாடல் இது...
முதல் வரி இல்லாமல்
எழுதப்படும் பாடலும் இதுதான்!
இந்தப் பாடலிலே
பல்லவி இருக்காது-
சரணங்களும் இல்லை!
இந்தப்பாடலை இசைக்க
ராகங்கள் தேவையில்லை!
இந்தப்பாடலை
ராக தேவனாலும்
பாட முடியாது!
எத்தனையோ காற்றுக்கள்
இந்தப்பாடலைத் தடவிப் பார்த்தும்-
இதன் உருவத்தினை
உணர முடியவில்லை!
எத்தனையோ கண்கள்
இதை வாசித்தும்
இதைப் புரிந்து கொள்ளவில்லை!
இது-
சிந்தனைகளை ஒருங்கிணைத்து
எழுதப்பட்ட பாடல் அல்ல...
சிந்தனைகளை அலைய விட்டு
எழுதப்பட்ட பாடலும் அல்ல!
இந்தப் பாடல்
எதற்காக எழுதப்பட்டதென்று
எனக்குத் தெரியாது...
யாருக்காக எழுதப்பட்ட
பாடலென்றும் எனக்குத் தெரியாது!
இந்தப் பாடலின்
முதல் வரி மட்டுமல்ல -
கடைசி வரியும்
எனக்குத் தெரியாது!
இதில் விடுபட்டுப் போன
இன்னொரு வரியையும்
அறிய வேண்டுமெனில் -
இன்னொரு பாடலை
நானெழுதும் வரை
பொறுத்திரு!
- மனோ
25.07.1994