ஈயுந் தலைமேல் மிதித்தேறி இருத்தலால் கதமின்மை நன்று – நாலடியார் 61
நேரிசை வெண்பா
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று. 61
- சினமின்மை, நாலடியார்
பொருளுரை:
தம்மைப் பொருள் செய்து நடப்பாரும் நடக்கட்டும்; அங்ஙனம் மதியாமல் கீழ்ப்படுத்தி நடப்பாரும் நடக்கட்டும்; ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் இருத்தலினால் அந் நிலைமையைத் தெரிந்து சிந்திக்குஞ் சான்றோர் எரிந்து விழுஞ் சினமிலராயிருப்பது நல்லது.
கருத்து:
பிறர் மதித்தாலும் மதிக்காவிட்டாலும் சான்றோர் சினம் கொள்ளலாகாது.
விளக்கம்:
இறத்தல் இங்கே ஒழுகுதல் என்னும் பொருட்டு.
தாழ்ந்ததென்று கூறும் பொருட்டு ஈயைக் கூறினார்.
கதம் இன்மை - சினம் உடையர் ஆகாமை.