தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் துறப்பவோ இளிவந்த போழ்தின் – நாலடியார் 62
நேரிசை வெண்பா
தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர். 62
- சினமின்மை, நாலடியார்
பொருளுரை:
அடர்ந்து அடிதவறாமல் அடுக்கி மிக்க இழிவு நேர்ந்த காலங்களில் தாம் மேற்கொண்ட காரியங்களை முடிக்கும் ஊக்கமுடைய நல்லோர்,
அழியாச் சிறப்பினையுடைய தமது இனிய உயிரை சிறிதே இடர் கண்ட நேரங்களில் எல்லாம் பொறுத்துத் தாங்கிக் கொண்டிராமல், சினந்து விட்டு விடுவார்களோ?
கருத்து:
இடர்கள் கண்டு சினத்தால் உயிரை விடுதல் ஆகாது.
விளக்கம்:
கண்டதற்கெல்லாம் உயிரை இழக்குமளவுக்குச் சினம் மிகுவாரை நோக்கிற்று இச்செய்யுள்.
வீடுபேறடையும் அழியாத பேரின்பச் சிறப்புக்குரிய இனிய உயிராதலின் ‘தண்டாச் சிறப்பின் இன் உயிர்' எனப்பட்டது.
அடிபெயராதென்றதனால், அடுக்கி வருதல் உணர்த்தினார்.
முடிகிற்கும் என்பதிற் ‘கில்' ஆற்றலுணர்த்துவதோர் இடைநிலையாகலின், இடத்திற்கேற்ப அது பயன்படுத்தப்பட்டது.
தெளிவு பெறுதற்குத் தோன்றிய, பிறவியை அந்நோக்கத்துக்கு மாறாக வீணே இழந்து விடலாகாமையின், இச்செய்யுள் அந்நோக்கத்தையும் எடுத்துக்காட்டி அவ்வுள்ளத்தவர் துறப்பரோ என அறிவுறுத்திற்று.