கவிதை வகைமை------------1 திருகிசிவகுமார்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
யாப்பறிந்து பா இயற்றும் முறைகளை எடுத்துரைக்கின்றது. இசைப்பாக்களின் அமைப்பு முறைகளைக் குறிப்பிடுகின்றது. புதுக்கவிதை புனையும் முறைகளை விளக்குகின்றது. துளிப்பா வகைகள் குறித்து விவரிக்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
மரபுக் கவிதைகளை இயற்றும் திறன் பெறலாம்.
இசைப் பாக்களை அடையாளம் காணும் ஆற்றல் பெறலாம்.
புதுக்கவிதைகளின் பொருண்மைகளை உணர்ந்து சுவைக்கலாம்.
துளிப்பாக்களில் நயம்படக் கவிதை எழுதும் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.
2.0 பாட முன்னுரை
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலக்கிய வகைகளில் முதலிடம் பெறுவது கவிதையே ஆகும். கவிதையின் கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம்
ஆகியவற்றின் ஒருங்கமைவும், ஒழுங்கமைவும் இதற்கான காரணம் எனலாம். ‘ஒவ்வொரு கோணத்திலும் கவிதை என்பது உணர்ச்சிகளின் மொழி’ என்கிறார் வின்செஸ்டர். ‘கவிதை என்பது சொற்களில் இல்லை; சொற்களுக்கு இடையில்
இருக்கிறது’ என்னும் கருத்து, ‘உணர்த்தும் முறையே’ கவிதை இலக்கணம் என்பதைப் புலப்படுத்துகிறது. எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் கவிதை தோன்றும். கவிதை என்பது காணும் பொருள்களை வருணிப்பதில் இல்லை; அப்பொருள்களைக் காணும்பொழுது எழும் மனநிலையில்தான் உள்ளது. ‘கவிதையில் சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்துக் கோப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளைச் சரியான இடத்திற்குக் கொண்டு செல்கிறது’ என்பார் புதுமைப்பித்தன். மேலும், ‘கவிதை, மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்மை; மனித உள்ளம் யதார்த்த உலகத்துடன் ஒன்றுபட்டோ, பிரிந்தோ கண்ட கனவு; அது உள்ள நெகிழ்ச்சியிலே உணர்ச்சி வசப்பட்டு வேகத்துடன் வெளிப்படுவது’ எனவும் உரைப்பார்.
கவிதை முருகியல் (aesthetics) உணர்ச்சியைத் தரக்கூடியது. உயர்ந்த கவிதைகள் யாவும் அவற்றில் ஈடுபட்டுப் படிப்போரிடம் கவிஞர்களின் அனுபவத்தையே பெற வைத்துவிடுகின்றன. அவர்கள் உணர்த்த விரும்பும் உண்மைகளையும் உணர்த்தி விடுகின்றன. கவிதைகளில் பெரும்பாலானவை பயிலும்போது இன்பம் தருவதுடன் உள்ளத்தைத் திருத்தும் பண்பையும் பெற்றிருப்பதால், அவை படிப்போரின் வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவனவாக உள்ளன.
முழுமையாகவும் விரைவாகவும் உணர்த்தும் திறனும், மகிழ்வூட்டி வாழ்வை நெறிப்படுத்தும் பொருண்மையும் ஆகிய தன்மைகளைக் கொண்ட கவிதைகள் தமிழில் காலந்தோறும் தோன்றி வருகின்றன. அவற்றை மரபுக் கவிதை, இசைப்பா, புதுக்கவிதை, துளிப்பா என்பனவாக வகைப்படுத்திக் கொள்ளலாம். இக்கவிதை வகைமைகள் குறித்து இப்பாடத்தில் விரிவாகக் காண்போம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.1 மரபுக் கவிதை
கவிதை வகைமைகளில் தொன்மையானதாக அறியப்படுவது மரபுக் கவிதையாகும். தமிழில் உள்ள யாப்பிலக்கண நூல்கள் மரபுக் கவிதை இயற்றும் முறையை எடுத்துரைக்கத் தோன்றியனவேயாகும். யாப்பு வடிவத்திற்கு அடிப்படை சந்தமும் (Rhythm), தொடையும் ( Rhyme) ஆகும். சந்தம் என்பது அழுத்தமான ஓசையும் அழுத்தமில்லா ஓசையும் சீர்பட அடுக்கி வருவதைப் பொறுத்தது. அழுத்தமுள்ள ஓசையும் அழுத்தமில்லாத ஓசையும் மாறி மாறி இடம்பெறுவதால் ஒரு நயமான ஓசை பிறக்கிறது. மரபுக் கவிதைகள் ஒரு காலத்தில் இசையோடு பாடப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் இவை படிக்கப்படுவனவாக மட்டுமே அமைந்து விட்டன. பாக்களின் ஓசை நயத்துக்குக் காரணமான சொற்களை அளவிட்டுச் சீர் எனக் குறிப்பிட்டனர்.
குறில், நெடில், ஒற்று என்னும் எழுத்துகளால் அசையும், அசையால் சீரும், சீரால் அடியும், அடியால் பாடலும் முறையே அமைகின்றன. சீர்களுக்கு இடையிலான ஓசை தளை எனப்படுகின்றது. சீர், தளை, அடி ஆகியவற்றின் வேறுபாட்டால் பா வகைகள் அமைகின்றன.
சீர்களின் முதலெழுத்து ஒற்றுமை - மோனை; இரண்டாம் எழுத்து ஒற்றுமை - எதுகை; இறுதியில் அமையும் ஒலி ஒற்றுமை - இயைபு; சொல், பொருள் ஆகியவற்றில் காணும் முரண்பாடு - முரண்; ஓர் அடியின் எழுத்தோ அசையோ சீரோ அடுத்த அடியின் முதலாக அமைவது அந்தாதி - எனப் பாடல்கள் தொடுக்கப்படுவது தொடை எனப்படும். அடுத்த பாடத்தில் (மரபுக் கவிதை வடிவம்) இவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சங்க காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரையில் தமிழிலக்கிய நெடும்பரப்பில் செங்கோல் செலுத்தி வந்த பெருமை, மரபுக்கவிதைக்கே உரியது.
மரபுக் கவிதையைப் பா வகைகள், பாவினங்கள் என இரண்டாகப் பாகுபடுத்துவர்.
2.1.1 பா வகைகள்
செப்பலோசையை உடைய வெண்பா, அகவலோசையை உடைய ஆசிரியப்பா, துள்ளலோசையை உடைய கலிப்பா, தூங்கலோசையை உடைய வஞ்சிப்பா, வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா எனப் பாக்கள் ஐவகைப்படும்.
அவற்றுள் வெண்பாவும் ஆசிரியப்பாவும் பெருவழக்குடையனவும் தெரிந்துகொள்ள வேண்டியனவும் ஆகும்.
வெண்பா
ஈற்றடி முச்சீரும் ஏனைய அடி நாற்சீரும் பெற்று வரும். மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்பனவாகிய வெண்பாத் தளைகளையே பெற்று வரவேண்டும். ஈற்றுச் சீர் ஓரசையாலோ, ஓரசையுடன் குற்றியலுகரமோ பெற்று முடிதல் வேண்டும். இவ் வெண்பா குறைந்தது இரண்டு அடிகளைக் கொண்டது.
மேற்கண்ட இலக்கணங்கள் பொருந்த இரண்டடிகளில் வருவது - குறள்வெண்பா; மூன்றடிகளில் வருவது - சிந்தியல் வெண்பா; நான்கடிகளில் வருவது - இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா; ஐந்தடி முதல் 12 அடி வரை அமைவது - பஃறொடை வெண்பா; 12 அடிகளுக்குமேல் பல அடிகளைப் பெற்று வருவது - கலிவெண்பா என வகைப்படுத்துவர்.
அவற்றுள் குறள் வெண்பாவும், நேரிசை வெண்பாவும் பயிலத்தக்க சிறப்புடையன.
குறள் வெண்பா
குறள்வெண்பா யாப்பால் அமைந்து சிறப்புடன் திகழ்வது திருக்குறள்.
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் (குறள் - 294)
என்னும் குறட்பா எளிய நடையில் திகழ்வதைக் காண்கிறோம்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு (குறள் - 215)
என வரும் குறள், அழகிய உவமையைப் பெற்று விளங்குகின்றது.
(உலகு அவாம் எனப் பிரிக்க; ஊருணி = ஊரார் நீருண்ணும் குளம்)
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய் (குறள் - 946)
என்னும் குறளில், உணவின் செரிமானம் அறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைபெற்றிருப்பது போல, செரிமானம் ஆவதற்குமுன் அளவிற்கு அதிகமாய் உண்பவனிடம் நோயானது நிலைபெற்றிருக்கும் என இரண்டு கருத்துகள் உவமையடிப்படையில் ஒருங்கே அமைந்து விளங்கக் காண்கிறோம்.
நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா
அடைமொழி இன்றி வெண்பா என்று சொல்லும் அளவில் நினைவிற்கு வருவது நேரிசை வெண்பாவேயாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், பிற்கால நீதி நூல்கள் எனப் பல்வேறு நூல்களிலும் பயின்று வழங்கி வந்துள்ள சிறப்பினையுடையது இது.
நீக்கம் அறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்!
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம் (நன்னெறி - 5)
(நொய்தல் = அற்பம்; புல்லினும் = பொருந்தினாலும்; திண்மை = உறுதி; போம் = போகும், போய்விடும்)
என வரும் நேரிசை வெண்பா, நட்பில் பிரிவும் கருத்து வேற்றுமையும் வரக்கூடாது என்பதனை முன்னிரண்டடிகளிலும், அதற்கேற்ற உவமையைப் பின்னிரண்டடிகளிலும் அமைத்துக் கூறுகின்றது.
கள்ளம்என் பார்க்கும் துயிலில்லை; காதலிமாட்(டு)
உள்ளம்வைப் பார்க்கும் துயிலில்லை; ஒண்பொருள்
செய்வம்என் பார்க்கும் துயிலில்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்
என வரும் இன்னிசை வெண்பா, திருடர், காதலர், பொருளீட்ட விழைவோர், பொருளைப் பாதுகாப்போர் என்னும் நால்வருக்கும் தூக்கம் இல்லாமையை அழகுபட அடுக்கி எடுத்துரைக்கின்றது.
இவை வெண்பாப் பற்றியன. இனி ஆசிரியப்பாவைக் குறித்துக் காண்போம்.
ஆசிரியப்பா
உரைநடை போன்று அமைவதே ஆசிரியப்பா. ஈரசைச் சீர்கள் நான்கு கொண்ட அளவடிகளால் அமைவது இது. எதுகை, மோனைகளால் சிறப்புப் பெறுவது. குறைந்தது மூன்றடிகளைப் பெற்று வரும். அடி மிகுதிக்கு எல்லை இல்லை.
எல்லா அடிகளும் நாற்சீர் பெறுவது நிலைமண்டில ஆசிரியப்பா. சீரை மாற்றாமல் அடிகளை மாற்றிப் போட்டாலும் ஓசையும் பொருளும் மாறாதிருப்பது அடிமறிமண்டில ஆசிரியப்பா; ஈற்றடி முச்சீரும் ஏனைய அடிகள் நாற்சீரும் பெறுவது நேரிசை ஆசிரியப்பா; முதலடியும் ஈற்றடியும் நாற்சீர் பெற்று, இடையிலுள்ள அடிகள் இரு சீரோ, முச்சீரோ பெற்று வருவது இணைக்குறள் ஆசிரியப்பா ஆகும். இவ்வாறு ஆசிரியப்பா நால்வகைப்படும்.
அவற்றுள் நிலைமண்டில ஆசிரியப்பாவும், நேரிசை ஆசிரியப்பாவும் பெரிதும் பின்பற்றப்படுபவை. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, கல்லாடம் என்பன ஆசிரியப்பாவால் அமைந்தவை. வெண்பாவைக் காட்டிலும் காலத்தால் முற்பட்டது ஆசிரியப்பாவே ஆகும் (எனினும் யாப்பிலக்கண நூல்கள் வெண்பாவை முற்படக் கூறலின், இங்கும் அம்முறை பின்பற்றப்பட்டது).
நிலைமண்டில ஆசிரியப்பா
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ!
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ!
யாழிடைப் பிறவா இசையே என்கோ!
தாழிருங் கூந்தல் தையால்! நின்னைஎன்(று)
உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி
வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்கென்
(சிலப்பதிகாரம் -2 : 73-90)
(மாசு, காசு = குற்றம்; விரை = மணப்பொருள்)
என்பது சிலப்பதிகாரம். கோவலன், கண்ணகியைத் திருமணமான புதிதில் புகழ்ந்துரைக்கும் பகுதி இது.
நேரிசை ஆசிரியப்பா
உலகம் உன்னுடையது என்னும் தலைப்பில், பாவேந்தர் பாரதிதாசன் பாடும் பாடல் பின்வருமாறு:
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு! விடாமல் ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களை! (5)
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்தபட் டாளம்!
‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஓட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்; அகண்ட மாக்கு! (10)
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நான்என்று கூவு!
பிரிவிலை எங்கும் பேதம் இல்லை!
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்! (15)
புகல்வேன் ‘உடைமை மக்களுக் குப்பொது’
புவியை நடத்து; பொதுவில் நடத்து!
வானைப் போல மக்களைத் தாவும்
வெள்ளை அன்பால் இதனைக்
குள்ள மனிதர்க்கும் கூறடா தோழா! (20)
உலகம் என மானிட இனம் முழுவதையும் தழுவி, வேறுபாடற்ற சமுதாயம் காண உணர்ச்சி செறிந்த நடையில் பாவேந்தர் இப்பாடலை ஆக்கியுள்ளார். இடையிடையே எதுகைத் தொடை விடுபடினும் பொருண்மையும் உணர்ச்சியும் சிறந்து பாடலின் நடை சிறக்கக் காண்கிறோம்.
இனிப் பாவினங்கள் குறித்துக் காண்போம்.
2.1.2 பாவினங்கள்
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு பாக்களுக்கும், தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகைப் பாவினங்களும் அமைந்துள்ளன. ஆனால் பாவின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களைப் பொருத்தவரையில் சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்புமே கருத்தில் கொள்ளப் பெறுகின்றன.
தாழிசை
குறள் தாழிசை, வெள்ளொத் தாழிசை, வெண்டாழிசை, ஆசிரியத் தாழிசை, கலித்தாழிசை, வஞ்சித் தாழிசை என்பனவாகத் தாழிசையின் வகைகள் அமைகின்றன.
ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதல் என்பது தாழிசையின் தனிச் சிறப்பாகும். பெரும்பாலும் நாட்டுப்புறப் பாடல்கள் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும் தன்மையுடையன என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.
தாழிசைகளுள் வஞ்சித் தாழிசை பயன்பாட்டிற்குரியது.
வஞ்சித் தாழிசை
குறளடி (இரு சீர் அடி), நான்கு கொண்ட செய்யுள்கள் மூன்று ஒரு பொருள்மேல் அடுக்கி வருவது.
பாட்டாளர் நலம்பேணாத்
தேட்டாள ராய்வாழ்வார்
மாட்டாத மரமென்ன
நாட்டாரால் நகையுண்பர் (1)
எளியவர்க் கிரங்காமல்
ஒளியராய் உறவாழ்வார்
துளியிலா விசும்பென்ன
வெளியரால் இளிவுண்பர் (2)
உழவர்தம் உழைப்புண்டு
விழவராய் மிகவாழ்வார்
இழவராம் இவரென்னக்
கிழவரால் இழிவுண்பர் (3)
(பாட்டாளர் = உழைப்பாளி; தேட்டாளர் = செல்வ வசதியர்; மாட்டாத = பயன்தர இயலாத; நாட்டார் = உலகினர்; ஒளி = புகழ்; விழவு = மகிழ்வு; இழவர் = இழிவினர்; கிழவர் = உரிமையுடையவர்)
எனப் புலவர் குழந்தை இதற்குச் சான்று காட்டுகின்றார்.
துறை
குறள்வெண் செந்துறை, ஆசிரியத் துறை, கலித்துறை, கட்டளைக் கலித்துறை, வஞ்சித்துறை என்பன துறை வகைகள் ஆகும். இவற்றுள் கலித்துறை, கட்டளைக் கலித்துறை, வஞ்சித் துறை ஆகியன தெரிந்துணர வேண்டியவையாகும்.
கலித்துறை
நெடிலடி (ஐஞ்சீரடி) நான்கு கொண்டது இது. மா, விளம், விளம், விளம், மா என்னும் வாய்பாட்டில் அமைந்த பாடல்.
எனக்கு நல்லையும் அல்லைநீ என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லைஅத் தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லைவந்(து) ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்
(மந்தரை சூழ்ச்சிப் படலம் - 65)
(நல்லை = நல்லவள்; அல்லை = நல்லவளில்லை; மனக்கு = மனத்துக்கு)
என்பது கம்பராமாயணத்துத் தசரதன் கூற்று.
கட்டளைக் கலித்துறை
வெண்சீர் அமைந்த ஐந்து சீர்களையுடையதாய், ஐந்தாம் சீர் விளங்காய் வாய்பாட்டில் அமைந்ததாய், நேரசையில் தொடங்கின் 16 எழுத்தும், நிரையசையில் தொடங்கின் 17 எழுத்தும் என ஒற்று நீக்கி எண்ணத்தக்கதாய் அமைவது கட்டளைக் கலித்துறையாகும். கந்தரலங்காரம், அபிராமி அந்தாதி போன்ற நூல்கள் இவ்வகையில் அமைந்தனவாகும்.
பாவேந்தர் பாரதிதாசனாரின் வள்ளுவர் வழங்கிய முத்துகள் என்னும் தலைப்பிலான பாடல் வருமாறு:
வெல்லாத இல்லை திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே
(புரை = குற்றம்)
வஞ்சித் துறை
குறளடி நான்கு கொண்டது இது. புளிமாங்காய் + கருவிளம் என்னும் வாய்பாட்டிலமைந்த, ஆழிப்பேரலை குறித்த கி.சிவகுமாரின் பாடல் பின்வருமாறு:
பிழைமூன்று பொறுப்பையாம்
பிழைச்சொல்லோ பெருங்கடல்!
அழைக்காமல் நுழைந்தனை!
பிழைக்காமல் விழுங்கினை!
(பிழை = தவறு; பிழைக்காமல் = யாரும் உயிர் பிழைக்காமல், தவறாமல்)
விருத்தம்
அளவொத்த நான்கு அடிகளையுடையது விருத்தம் எனப் பொதுவாகக் கூறலாம். வெளி விருத்தம், ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் என்பன விருத்தப்பா வகைகள். இவற்றுள் வெளிவிருத்தம் தவிர்த்த ஏனையன அறிய வேண்டியனவாகும்.
ஆசிரிய விருத்தம்
கழிநெடிலடி நான்கு உடையது இது. சீர்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர் பெறும்.
1. விளம் மா தேமா - அறுசீர் விருத்தம்
தாயெழில் தமிழை என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியில் காண
இப்புவி அவாவிற் றென்றே
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்த நாளோ?
ஆரிதைப் பகர்வார் இங்கே
(மது = தேன்; பாயுநாள் = பாயும் நாள்)
பாவேந்தரின் பாடல் இது. விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச் சீரும் வரலாம்.
2. மா மா காய் வாய்பாடு - அறுசீர் விருத்தம்
இல்லாப் பொருளுக் கேங்காமல்
இருக்கும் பொருளும் எண்ணாமல்
எல்லாம் வல்ல எம்பெருமான்
இரங்கி அளக்கும் படிவாங்கி
நல்லார் அறிஞர் நட்பையும்நீ
நாளும் நாளும் நாடுவையேல்
நில்லா உலகில் நிலைத்தசுகம்
நீண்டு வளரும் நிச்சயமே
(உமர்கய்யாம் - கவிமணி)
3. விளம் மா விளம் மா, விளம் விளம் மா - எழுசீர் விருத்தம்.
தந்ததுன் தன்னை; கொண்டதென் தன்னை;
சங்கரா ஆர்கொலோ சதுரர்?
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்;
யாதுநீ பெற்றதொன் றென்பால்?
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்!
திருப்பெருந் துறையுறை சிவனே!
எந்தையே! ஈசா! உடலிடம் கொண்டாய்!
யான்இதற்கு இலன்ஓர்கைம் மாறே!
(கோயில் திருப்பதிகம் - 10)
(சங்கரன் = சிவன்; சதுரர் = திறமையுடையவர்; அந்தம் = முடிவு; கைம்மாறு = பதிலுதவி)
என்பது மாணிக்கவாசகரின் திருவாசகம்.
4.காய் காய் மா தேமா - எண்சீர் விருத்தம்.
ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்ந்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுமென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பம் தீண்டக்
கோவேந்தன் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்களோ தட்சணைகள் கொடுவென் றாரே
(ஆவீன = ஆ ஈன, பசுகன்று ஈன; இல்லம் = வீடு; மாவீரம் = பெரிய ஈரம்)
என்பது இராமச்சந்திர கவிராயரின் தனிப்பாடல். காய்ச்சீருக்குப் பதில் சில இடங்களில் விளச்சீர் வருதலும் உண்டு.
கலி விருத்தம்
அளவடி நான்கு கொண்டது இது. விளம், விளம், மா, விளம் என்னும் வாய்ப்பாட்டில் அமைந்த வில்லிபாரதப் பாடல் வருமாறு:
அருமறை முதல்வனை ஆழி மாயனைக்
கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனைத்
திருமகள் கேள்வனைத் தேவ தேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்
(முளரி = தாமரை; பதம் = திருவடி)
வஞ்சி விருத்தம்
சிந்தடி நான்கு கொண்டு அமைவது இது. விளம், விளம், காய் வாய்பாட்டிலான கி.சிவகுமாரின் பாடல் வருமாறு:
என்பது பெண்என எழுச்சியுறும்;
வன்கலும் புணைஎன மிதக்கலுறும்;
முன்சுவை மகவினை முதலைதரும்;
தென்தமிழ்த் திருமுறைச் செயலாலே;
(என்பது = எலும்பானது; கலும் = கல்லும்; சுவை மகவு = விழுங்கிய குழந்தை)
மரபுக் கவிதை வகைமை குறித்து அறிந்தோம். இனி இசைப்பா வகைமையைக் காண்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.2 இசைப்பா
சங்க காலத்தில் இருந்து மறைந்தனவாகச் சிற்றிசை, பேரிசை, இசை நுணுக்கம் போன்ற இசை நூல்கள் குறித்துப் பெயரளவில் மட்டுமே தெரிந்து கொள்ள முடிகின்றது. பரிபாடல் இசைப்பா வகையைச் சார்ந்ததேயாகும்.
இசைப்பாக்களைச் சந்தப்பாடல், கும்மிப்பாடல், சிந்துப்பாடல் என மூவகைப்படுத்தலாம்.
2.2.1 சந்தப் பாடல்
ஒரு குறிப்பிட்ட ஓசை பயின்று வருவதே சந்தம் எனப்படும். கலி விருத்தம், கழிநெடிலடி, ஆசிரிய விருத்தம் போன்றவற்றின் சீர்கள், குறிப்பிட்ட சந்தங்களே அமையச் சந்த விருத்தங்களாக அமைக்கப் பெறுவதும் உண்டு.
சந்தக் கலித்துறை - மா மா விளம் மா காய்
காலம் போயிற் றஞ்சன மன்ன கடாமீதில்
ஆலம் போல்வெங் காலனும் அந்தோ அணுகுற்றான்
சீலம் கேண்மின் ஒய்யென வேதம் சிவஞானி
கோலம் காணும் கொள்கைக ருத்தில் குறியீரே
(சிவஞானக் கலம்பகம் - 12)
என வரும் சிவப்பிரகாசரின் பாடல் இதற்குச் சான்றாகும்.
தொல்காப்பியச் செய்யுளியல் (நூ.210-231) வண்ணங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கின்றது. பிற்காலத்தில் எழுந்த வண்ணத்தியல்பு, குமாரபூபதியம் போன்றன இது குறித்து விவரிக்க எழுந்த நூல்களாகும்.
எழுத்து, சந்தம், துள்ளல், குழிப்பு, கலை, அடி, பாடல் என முறையே ஒன்றினால் மற்றொன்று அமைய வண்ணப் பாக்கள் உருவாகின்றன. திருப்புகழ்ப் பாக்கள் சில வருமாறு:
1. வல்லோசை - தத்தத்தன தத்தத் தனதன. . . (3) - தனதான
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர - எனவோதும்
2. மெல்லோசை - தந்தனந் தந்தந் தனதான
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம் துஞ்சித் திரியாதே
3. இடையினவோசை - தய்யதன தான .. . (3) - தனதான
அல்லிவிழி யாலும் முல்லைநகை யாலும்
அல்லல்பட ஆசைக் கடலீயும்
இவ்வாறு திருப்புகழில் இடம் பெறுவனவற்றின் குழிப்புகள், தாளம், இராகம், மாத்திரையளவு போன்றவற்றை அறிந்து பாடினால் உள்ளம் உருகும் என்பது உறுதி.
2.2.2 கும்மிப் பாடல்
கும்மி, வெண்பாவின் பாவினத்தைச் சார்ந்தது.
மகளிர் குழுமிக் கைகொட்டி விளையாடும் பொழுது பாடுவதே கும்மி ஆகும். கும்மிப் பாடல் வெண்பா இனத்தைச் சார்ந்தது; வெண்டளை மட்டுமே அமைந்த எழுசீர்க் கழிநெடிலடிகள் ஓர் எதுகை கொண்டு அமைவது; ஈற்றுச் சீர் பெரும்பாலும் விளங்காய்ச் சீராக வரும்.
இயற்கும்மி, ஒயிற் கும்மி, ஓரடிக் கும்மி என்பன கும்மியின் வகைகளாகும்.
இயற்கும்மி
ஓரடியில் ஏழு சீர்கள் அமையும். அது 4 சீர், 3 சீர் என மடக்கி எழுதப்படும். இவ்வாறு 2 அடியும் 4 வரியும் கொண்டதாக அமையும். முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெறும்.
எடுத்துக்காட்டு :
கும்மி யடிதமிழ் நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மைகண் டோமென்று கும்மியடி!
(பாரதியார்)
மூன்றாம் சீரும் ஏழாம் சீரும் இயைபுத் தொடை அமையப் பாடப் பெறுவதும் உண்டு.
எடுத்துக்காட்டு :
நல்லபண் டங்களைக் கண்டறியோம் - ஒரு
நாளும் வயிறார உண்டறியோம்
அல்லும் பகலும் அலைந்திடுவோம் - பசி
யாற வழியின்றி வாடிடுவோம்
(கவிமணி)
அரிச்சந்திரக் கும்மி, ஞானக் கும்மி, வாலைக் கும்மி முதலிய கும்மி நூல்களில் இயற்கும்மிப் பாடல்களைப் படித்தறியலாம்.
ஒயிற் கும்மி
மூன்று அடிகளில் அமையும். முதலடி இருவரிகளிலும், இரண்டாமடி இரு வரிகளிலும், மூன்றாமடி ஒரு வரியிலும் அமையும். இரண்டாமடி முடுகியல் அடியாக வரும்; வெண்டளை பெறவேண்டியதில்லை. ஆனால் முதலடியும் மூன்றாமடியும் வெண்டளை பெற்று வரும். அடிகள் தோறும் மோனை அமைதல் நன்று. முடுகியலடியின் 1, 3 சீர்கள் மோனை பெறும்.
எடுத்துக்காட்டு :
தென்பரங் குன்றினில் மேவும் குருபர
தேசிகன் மேற்கும்மிப் பாட்டுரைக்கச்
சிகரத்திரு மகரக்குழை
திகழுற்றிடும் உமைபெற்றிடு
தில்லை விநாயகன் காப்பாமே
என்பது முருகர் ஒயிற்கும்மிப் பாடல்.
ஓரடிக் கும்மி
கும்மியின் இலக்கணம் அமையப் பெற்ற எழுசீர்க் கழிநெடிலடி ஒன்றே, பொருள் முற்றிவரின் அஃது ஓரடிக் கும்மி எனப்படும்.
முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையோ, எதுகையோ பெற்றுச் சிறந்து வரும்.
எடுத்துக்காட்டு :
1. மோனை
ஆளுடன் ஆளும் உகையாம லேநீங்கள்
ஆளுக் கொருமுழம் தள்ளிநில்லும்
2. எதுகை
பாட்டுக் குகந்த படியிரு கையையும்
ஆட்டியொய் யாரமாய் ஆடிடுவோம்
2.2.3 சிந்துப் பாடல்
சிந்து, அளவொத்த இரண்டடிகளில் அமையும்; நான்கடிகள் ஓரெதுகை பெற்று வருதலும் உண்டு; தளை வரையறை இல்லை; சந்தம் நன்கு அமைய வேண்டும்; மடக்கடி, மோனை பெற வேண்டும்; தனிச்சொல் அடிதோறுமோ, மடக்கடிதோறுமோ வருவதுண்டு. தனிச்சொல் இடம்பெறாத சிந்துப்பாக்களும் உண்டு.
சமநிலைச் சிந்து, வியனிலைச் சிந்து எனச் சிந்துப்பா இரு வகைப்படும்.
சமநிலைச் சிந்து
அளவான சீர்களைக் கொண்டு நடப்பது இது; தனிச் சொல்லின் முன் உள்ள அரையடியும், பின் உள்ள அரையடியும் தம்முள் அளவொத்து விளங்குவது.
எடுத்துக்காட்டு:
1. அரையடிதோறும் இயைபு பெறுவது:
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
(பாரதியார்)
2. அடிதோறும் இயைபு பெறுவது:
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு
(பாரதியார்)
தனிச் சொல்லின் முன்னும் பின்னும் மூன்று சீர்களேயன்றி இருசீர், நாற்சீர், ஐஞ்சீர், அறுசீர் என வரவும் பெறலாம் என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
வியனிலைச் சிந்து
தனிச்சொல்லின் முன் உள்ள அரையடியும், பின் உள்ள அரையடியும் தம்முன் அளவு ஒவ்வாமல் வருவது, ‘வியனிலைச் சிந்து’ எனப்படும்.
எடுத்துக்காட்டு:
1. தனிச்சொற்கு முன்னும் பின்னும் முறையே 3, 4 சீர்கள் அமைதல்:
தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்ஐயன் என்றால் - அதை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்
(பாரதியார்)
2. நான்கடி ஓரெதுகை பெற்று வருதல்:
அத்தின புரமுண்டாம் - இவ்
அவனியி லேஅதற்கு இணையிலையாம்
பத்தியில் வீதிகளாம் - வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகையாம்
முத்தொளிர் மாடங்களாம் - எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைகளாம்
நத்தியல் வாவிகளாம் - அங்கு
நாடும் இரதிநிகர் தேவிகளாம்
(பாரதியார்)
(பத்தி = வரிசை; அளி = வண்டு; நத்து = விருப்பம்; வாவி = குளம்)
சித்தர் பாடல், பள்ளு, குறவஞ்சி, பாரதியார் பாடல் முதலியவற்றில் இவற்றைப் பயின்றுணரலாம். இவ்வாறே அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய காவடிச் சிந்து, பாரதியார் இயற்றிய நொண்டிச் சிந்து போன்றனவும் பயிலத் தக்கனவாகும்.
மரபுக் கவிதைகளோடு தொடர்புடையனவாதலின், இசைப்பாக்கள் இணைத்துச் சிந்திக்கப் பெற்றன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.3 புதுக்கவிதை
கி.பி. இருபதாம் நூற்றாண்டு தொடங்கிப் புதுக்கவிதை, தமிழிலக்கியத்தில் தோன்றிச் சிறக்கலானது. பாரதியார் எழுதிய வசன கவிதைகளே தமிழில் காணும் புதுக்கவிதை முறைக்கு முன்னோடியாக அமைந்தது.
யாப்பிலக்கணத்திற்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் வகையில் உருவானதே புதுக்கவிதை. எதுகை, மோனை, சீர், தளை சிதையாமை முதலான காரணங்களால் மரபுக் கவிதையில் அடைமொழிகளாக வெற்றெனத் (பயனின்றி) தொடுத்தல் அமைவதாக உணரத் தொடங்கியமையின் மடைமாற்ற முயற்சி எனவும் இதனைக் கருதலாம். கவிதை எழுத இனிக் காரிகை (யாப்பருங்கலக் காரிகை) கற்க வேண்டியதில்லை என்ற தெம்புடன் கவியெழுத வந்த புதுக்கவிதையாளர்களும் இங்கு உண்டு. புதுக்கவிதை, உரைவீச்சாகக் கருதத்தக்கது. அது மரபுக்கவிதை, கவிதை வசனக் கலப்பு, வசனம் என எந்த வாகனத்திலும் பயணிக்க வல்லதாக அமைந்தது.
புதுக்கவிதை எனும் போர்வாள்
இலக்கண உறையிலிருந்து
கவனமாகவே
கழற்றப்பட்டிருக்கிறது
(திருத்தி எழுதிய தீர்ப்புகள்)
என்பது கவிஞர் வைரமுத்துவின் புதுக்கவிதை. நறுக்குத் தெறித்தாற்போல் அமைவதே புதுக்கவிதை.
புதுக்கவிதையைப் படித்ததும் புரியும். இயல்பான கவிதைகள், படிமம், குறியீடு, தொன்மம் போன்ற வகையில் அமைந்த உத்திமுறைக் கவிதைகள், எளிதில் புரிந்துகொள்ள முடியாதனவும் பல்வேறு சிந்தனைகளை உண்டாக்குவனவும் ஆகிய இருண்மைக் கவிதைகள் என வகைப்படுத்திக் காணலாம்.
2.3.1 இயல்புநிலைக் கவிதை
அகராதி தேடும் வேலையின்றிப் படித்த அளவில் புரியும் பாங்குடையவை இவை. சில சான்றுகளைக் காண்போம்.
1. காதலும் நட்பும் குறித்த கவிஞர் அறிவுமதியின் கவிதை :
கண்களை வாங்கிக்கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை வாங்கிக்கொண்டு
உன்னைப்போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்
(நட்புக்காலம்)
2. முதிர்ச்சியின் பக்குவம் குறித்த இரா.தமிழரசியின் கவிதை:
காய்கள்கூட
கசப்புத் தன்மையை
முதிர்ச்சிக்குப் பின்
இனிப்பாக்கிக் கொள்கின்றன
மனிதர்களில் சிலர்
மிளகாய்போல் காரத்தன்மை மாறாமல்
காலம் முழுவதும்
வார்த்தை வீச்சில் வல்லவர்களாய்
(ஒளிச்சிறை)
3. காதலியை நலம்பாராட்டும் காதலனின் கூற்றாகப் பா.விஜய்யின் கவிதை:
உன்மீது மோதி
வாசம் பார்த்த தென்றல்
தெருப்பூக்களைப் பார்த்தால்
திரும்பிப் போகிறது
(18-வயசுல)
4. அன்பை அடையாளப்படுத்தும் தமிழன்பனின் கவிதை:
தொப்பையாய்
நனைந்துவிட்ட மகள்
அப்பா
தலையை நல்லாத் துவட்டுங்க
என்றாள்
கிழியாத அன்பும் கிழிந்த துண்டுமாய்
(நடை மறந்த நதியும் திசைமாறிய ஓடையும்)
5. பணிக்குச் செல்லும் பெண்கள் பற்றிய பொன்மணி வைரமுத்துவின் கவிதை:
வீட்டுத் தளைகள்
மாட்டியிருந்த கைகளில்
இப்போது
சம்பளச் சங்கிலிகள்
6. தன்னம்பிக்கையூட்டும் மதியழகன் சுப்பையாவின் கவிதை:
வாய்ப்புகளை
நழுவவிட்டபின்
அழுகிறது மனம்
அடுத்துவரும்
வாய்ப்புகளை
அறியாமலேயே
(மல்லிகைக் காடு)
7. ஐம்பூதங்கள் குறித்த தங்கம் மூர்த்தியின் கவிதை:
குடந்தையில்
நெருப்பால் இழந்தோம்
சுனாமியில்
நீரால் இழந்தோம்
போபாலில்
வாயுவால் இழந்தோம்
ஆந்திராவில்
வான்மழையால் இழந்தோம்
குஜராத்தில்
நிலநடுக்கத்தால் இழந்தோம்
ஐந்தையும்
பூதங்கள் என்றவன்
தீர்க்கதரிசிதான்
8. மதநல்லிணக்கம் குறித்தமைந்த அப்துல் ரகுமான் கவிதை:
எப்படிக் கூடுவது
என்பதிலே பேதங்கள்
எப்படி வாழ்வது
என்பதிலே குத்துவெட்டு
பயணத்தில் சம்மதம்
பாதையிலே தகராறு
9. அரவாணிகள் குறித்த ஆஷாபாரதியின் கவிதை:
என்ன பெயர்
சொல்லிவேண்டுமானாலும்
எங்களைக் கூப்பிடுங்கள்
மனிதநேயம் ம(ை)றந்த
மனிதர்களே
என்னவோ போல் மட்டும்
எங்களைப் பார்க்காதீர்கள்
10. இன்னா செய்யாமை குறித்த கவிதையொன்று:
விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்
(வலியிழந்தவள்)
மேற்கண்ட கவிதைகள் அனைத்தும் எளியன; படித்ததும் புரிவன ஆழ்ந்த கருத்தடங்கியன; கற்போரை நெறிப்படுத்த வல்லன; பல்வேறு கவிஞர்களால் பாடப்பட்டன; பல பொருண்மையில் அமைந்தன.
சமுதாய நிகழ்வில் பாதிப்படைந்த ஒவ்வொருவரும் தாம் அறிந்த சொற்றொடரால் தம் உணர்வைச் சமுதாயத்திற்குக் கவிதைகளாகப் படைத்து வழங்கலாம் என்னும் துணிச்சலை இந்த எளிய கவிதை நடைகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்தக் கருத்து நிலைகளே ஒப்பீட்டுத் திறனாய்வின் கருதுகோள்கள் ஆகும்.
2.3.2 உத்திமுறைக் கவிதை
மரபுக் கவிதைக்கு அணியிலக்கணம் போல, கருத்தை உணர்த்துவதற்குப் புதுக்கவிதையிலும் சில உத்திமுறைகள் கையாளப்படுகின்றன.
படிமக் குறியீடு, தொன்மக் குறியீடு, அங்கதம் என்பன புதுக்கவிதைகளில் காணலாகும் உத்திமுறைகளாகும்.
படிமம்
அறிவாலும் உணர்ச்சியாலும் ஆன ஒரு மன பாவனையை ஒரு நொடிப் பொழுதில் தெரியக் காட்டுவதுதான் படிமம் என்பார் வெ.இராம.சத்தியமூர்த்தி. ஐம்புல உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வகையில் இது அமையும்.
ஆகாயப் பேரேட்டில் பூமி
புதுக்கணக்குப் போட்டது
என்பது மேத்தாவின் கருத்துப் படிமம். மேலும் அவர்,
பூமி உருண்டையைப்
பூசணித் துண்டுகளாக்குவதே
மண்புழு மனிதர்களின்
மனப்போக்கு
எனக் காட்சிப் படிமத்தையும் அமைத்துக் காட்டியுள்ளார்.
தொன்மம்
புராணக் கதைகளைப் புதுநோக்கிலும், முரண்பட்ட விமரிசன நிலையிலும் கையாண்டு கருத்துகளை உணர்த்துவது தொன்மம் ஆகும்.
துஷ்யந்தன் தன் காதலின் சின்னமாகச் சகுந்தலைக்கு மோதிரம் பரிசளிக்கிறான். அந்த மோதிரம் தொலைந்த நிலையில் அவள் பல துன்பங்களை அனுபவிக்கின்றாள். அத்தொன்மத்தை உன்னுடைய பழைய கடிதங்கள் என்னும் கவிதையில் மேத்தா கவிதையாக்குகின்றார்.
நானும்
சகுந்தலைதான்
கிடைத்த மோதிரத்தைத்
தொலைத்தவள் அல்லள்
மோதிரமே
கிடைக்காதவள்
(ஊர்வலம்)
எனக் காதலியின் பரிதாப நிலையைச் சகுந்தலையினும் மோசமான நிலைக்காட்பட்டதாகக் காட்டியுள்ளார் கவிஞர்.
அங்கதம்
அங்கதம் என்பது முட்டாள் தனத்தையும் மூடநம்பிக்கையையும் தீச்செயல்களையும் கேலி பேசுவதாக அமைவதாகும்.
கல்வி இங்கே
இதயத்தில் சுமக்கும்
இனிமையாய் இல்லாமல்
முதுகில் சுமக்கும்
மூட்டையாகிவிட்டது
(ஒரு வானம் இரு சிறகு)
என்பது மேத்தாவின் அங்கதக் கவிதையாகும்.
இவ்வுத்தி முறைகள் குறித்து மேலும் விரிவாக நான்காம் பாடம் விவரிக்கும்.
2.3.3 இருண்மைநிலைக் கவிதை
புரியாத தன்மையைக் கொண்டு விளங்குவது இருண்மைநிலைக் கவிதையாகும். பேசுவோன், பேசப்படுபொருள் ஆகியன சார்ந்த மயக்கங்கள் கவிதையில் இருண்மையை ஏற்படுத்துவதுண்டு. அவ்வகையில் அமைந்த பிரமிளின் கவிதை,
எதிரே
தலைமயிர் விரித்து
நிலவொளி தரித்து
கொலுவீற்றிருந்தாள்
உன் நிழல்
என்பதாகும்.
என்.டி.ராஜ்குமாரின்,
எறும்புகள் வரிசையாக
பள்ளிக்குச் செல்கிறார்கள்
வரும்பொ
வரும்பொழுது கழுதையாக வருகிறது
என்பதும் அவ்வகையினதே யாகும் (திணை, பால் கடந்தது?).
இருண்மைக் கவிதைகளின் நோக்கம், வாசகரிடத்தே கருத்துத் திணிப்பை ஏற்படுத்தலாகாது; அவர்களே சுதந்திரமாகச் சிந்தித்துப் பொருள் உணர வேண்டும் என்பதேயாகும் என்பர்.
இனித் துளிப்பாக் குறித்துக் காணலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.4 குறுங்கவிதை
இயந்திர கதியில் இயங்கும் இன்றைய அறிவியல் உலகில், சுருங்கிய வடிவில் ‘நறுக்’ எனக் கருத்தினைக் தெரிவிக்கும் புதுக்கவிதை வடிவையும் கடந்து, இன்னும் சுருக்கமாக ‘நச்’ என்று கருத்துரைக்கும் குறுங்கவிதை வடிவம் தோன்றலானது. மூன்றடி வடிவக் கவிதையே குறுங்கவிதையாகும். ஜப்பானிய இலக்கிய வடிவத் தாக்கமாக எழுந்ததே இது. தமிழின் ஐங்குறுநூற்றிலும் மூன்றடிப் பாடல்கள் உள்ளன எனினும் அடி எண்ணிக்கையில் தவிரக் குறுங்கவிதைக்கும் அதற்கும் ஒற்றுமை காணுதல் அரிது.
குறுங்கவிதையைத் துளிப்பா (ஐக்கூ), நகைத் துளிப்பா (சென்ரியு), இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) என மூவகைப்படுத்தலாம்.
2.4.1 துளிப்பா (ஐக்கூ)
ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5-7-5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் (Zen) தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. தமிழிலக்கியத்தில் இவ்வடிவத்தில் அமைந்த கவிதைகள் சமூக விமர்சனத்திற்கும் சமூகக் கேடுகளைச் சாடுவதற்கும் பயன்படலானது.
துளிப்பாவானது படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திமுறைகளில் அமைகின்றது.
படிமம்
துளிப்பாவில் பெரிதும் கையாளப் பெறுவது படிம உத்தியேயாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புல உணர்வுகளையும் அனுபவித்தவாறே வெளியிடுகின்ற உணர்ச்சி வெளிப்பாடே படிமம் எனப்படும். வருணனைத் திறன் மிக்கது இது.
எடுத்துக்காட்டு :
1. கட்புலப் படிமம்
சாரல் அடிக்கிறது
ஜன்னலைச் சாத்தும்போது மரக்கிளையில்
நனைந்தபடி குருவி (பரிமள முத்து)
2. விளையாட்டுப் படிமம்
நல்ல கயிறு
எறும்பின் பாதை
பம்பரம் சுற்ற (மித்ரா)
3. அச்சு வடிவக் காட்சிப் படிமம்
அதிக சுமையா?
மெ. .ல் . . .ல நகரும்
நத்தை (மு.முருகேஷ்)
குறியீடு
செறிவான கவிதை வடிவத்திற்குக் குறியீடுகள் பெரிதும் உதவுகின்றன. ‘ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் (object), குறியீடு எனப்படுகிறது. ஒரு குறியீடு மற்றொன்றிற்குப் பதிலாக நிற்கலாம்; சுட்டிக்காட்டுவதோடு மட்டுமேகூட அமைந்துவிடலாம். இயற்கை, சமயம், வாழ்க்கை என்பனவற்றைச் சுட்டுவனவாகவே அமைவதே பெரும்பான்மை எனலாம்.
எடுத்துக்காட்டு :
1. இயற்கைக் குறியீடு
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்
(அமுதபாரதி)
2. சமயக் குறியீடு
இதயத்தில் இறுக்கம்
இதழ்களில் மௌனம் இங்கே
சிலுவையில் நான் (பரிமள முத்து)
3.வாழ்க்கைக் குறியீடு
உழுதுவந்த களைப்பில்
படுக்கும் மாடுகள்
காயம் தேடும் காக்கை (அறிவுமதி)
தொன்மம்
புராண, இதிகாச நிகழ்வுகளை ஒட்டியோ, திரித்தோ, மறுத்தோ இக்கால நிலைக்கேற்பக் குறியீடாக்குதல் தொன்மப் படிமம் ஆகும்.
எடுத்துக்காட்டு :
கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள் (ராஜ.முருகுபாண்டியன்)
என்பது கௌதமரின் சாபத்தால் கல்லான அகலிகை இராமனின் கால்பட்டுச் சாபவிமோசனம் அடைந்து பெண்ணான நிகழ்வை அடியொற்றியது. பெண்ணாக இருப்பதினும் கல்லாக இருப்பதே பாதுகாப்பானது என்றால் இச்சமூகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பது இதன்வழிப் புலப்படுகின்றது.
ஆராய்ச்சிமணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி (அவைநாயகன்)
என்னும் கவிதை, மனுநீதிச் சோழனிடம் முறையிட்ட கன்றை இழந்த பசுவின் கதறலையும், அக்கதறல் கேட்டுத் தன் மகனையே கொன்று முறைசெய்த மன்னனின் நீதிமுறையையும் கொண்டு அமைக்கப்பட்டது. நீதிமன்றங்கள், தக்க தீர்ப்பு வழங்காமல் குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பதையும், முறையிட வந்தவர்களையே தண்டிப்பதுமாகிய நிலையில் இருக்கும் நாட்டுநடப்பினைப் புலப்படுத்துகின்றது.
முரண்
மாறுபடத் தொடுப்பது முரண் எனப்படும். இது சொல் முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண் என வகைப்படுத்தப்படும்.
1. சொல் முரண்
தாழ்வு இல்லை
உயர்வே குறிக்கோள்
விலைவாசி (ல.டில்லிபாபு)
என்பதில் தாழ்வு x உயர்வு எனச் சொல் முரண் அமைந்தது.
2. பொருள் முரண்
அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன் (கழனியூரன்)
என்னும் கவிதையில் அன்புடைமைக்கு முரணாகத் தண்டனை எனும் பொருண்மை இணைத்துக் கூறப்படுகிறது.
3. சொற்பொருள் முரண்
மௌன ஊர்வலம்
முடிந்தது
கலவரத்தில் (பா.உதயகண்ணன்)
என்னும் கவிதையில், மௌனமும் கலவரமும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுகின்றன.
அங்கதம்
சமூகக் கேடுகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நயம்பட எடுத்துரைத்துத் திருத்த முயல்வது அங்கதம் எனப்படும்.
எங்கள் மக்கள்
எப்போதும் நலமே தெருவுக்கு
நான்கு டாக்டர்கள் (பரிமள முத்து)
என்பதில் நலத்திற்குக் காரணம் நோய் வாராமையன்று, நோய் நிலையாமையே எனக் கூறுவதாக அமைகின்றது.
நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள் (தங்கம் மூர்த்தி)
என்னும் கவிதை, கையூட்டு அரசு அலுவலகங்களில் அங்கிங்கெனாதபடி பரவி நிலைபெற்றிருப்பதைப் புலப்படுத்துகின்றது.
விடுகதை
பெரும்பாலான ஐக்கூப் பாடல்கள், விடுகதை நடையில் எது? யார்? ஏன்? எப்படி என்பது போலும் பொருண்மையில் முன்னிரண்டடிகளும், அதற்குரிய விடையாக ஈற்றடியும் கொண்டு திகழ்ந்து சுவைபயப்பதுண்டு.
அழித்து அழித்துப் போட்டாலும்
நேராய் வராத கோடு
மின்னல் (மேகலைவாணன்)
என்னும் கவிதையில், முயன்று தவறிக் கற்றல் என்பதன்படி, ஒரு முறை தவறினும் மறுமுறை திருத்திக் கொள்வது தானே இயல்பு? ஒவ்வொரு முறையும் கோடு நேராகவில்லையென்றால் எப்படி? அப்படிப்பட்ட கோடு எது? என அவ்வினா பல்வேறு சிந்தனைகளைத் தூண்டுகிறது. விடையாக இறுதியடி அமைகின்றது.
இருந்தால் மேடு
இல்லாவிட்டால் பள்ளம்
வயிறு (மேகலைவாணன்)
என்பது எதிர்பாராத விடை கொண்ட கவிதை. உணவு இருந்தால் இல்லாவிட்டால் எனக் கொள்ள வேண்டும். வயிறு உணவு குறையாத நிலையில் இருந்தவன் தான் மோடு என்று வயிற்றிற்குப் பெயரிட்டவனாதல் வேண்டும்.
பழமொழி
பழமொழிகளை நயமுறக் கையாண்டு கருத்தை விளக்குதலும் உண்டு.
கந்தலானாலும் கசக்கிக்கட்டு
கசக்கினான்
கிழிந்து போனது (மலர்வண்ணன்)
என்னும் கவிதையில் தூய்மைக்குச் சொல்லப்பட்ட பழமொழியை, வறுமையைச் சித்திரிக்க எடுத்துக் கொண்டுள்ளார் கவிஞர்.
ஐந்தில் வளைப்பதற்கோ
பிஞ்சு முதுகில்
புத்தக மூட்டைகள் (பாட்டாளி)
என்பதில், ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமோ?’ எனப் பணிவுக்குக் கூறப்பட்ட பழமொழி இன்றைய கல்வி முறையை விமரிசிக்கக் கையாளப்பட்டுள்ளது.
வினாவிடை
கவிதை முழுவதும் வினாவாக அமைந்து, தலைப்பு அதற்குரிய விடையாக அமைவதுண்டு. மூன்றாம் அடியே விடையாவதும் உண்டு.
வெட்ட வெட்ட
வளரும் நீ என்ன
விரல் நகமா? (பரிமள முத்து)
என்னும் கவிதைக்குரிய பதிலாகிய கவலை இதற்கான தலைப்பாக அமைகிறது.
தாகம் தணிக்குமோ
கடல்நீர்
வெட்டிப்பேச்சு (செந்தமிழினியன்)
என்பதில், மூன்றாமடி தணிக்காது எனப் பதில் தருவதோடு, வெட்டிப் பேச்சும் அத்தகையதே என்பதை இணைத்துணர்த்துகின்றது.
உவமை
புதுப்புது உவமைகளைக் கையாளும் உத்தியையும் துளிப்பாவில் காண்கிறோம்.
கவிதைகள் எழுத
நல்ல தாள்
பனிப்புகை (மித்ரா)
என்பதில் பனிப்புகை வெண்தாளாக நிற உவமையாக்கப்பட்டுள்ளது.
நெருப்புதான் பெண்
அம்மாவிற்கு அடிவயிற்றில்
மாமியாருக்கு அடுப்படியில் (அறிவுமதி)
என்னும் கவிதையில், மணமாகும்வரை கவனித்து வளர்க்க வேண்டியிருப்பதால் தாய்க்கு அடிவயிற்றில் கட்டிய நெருப்பாகவும், சமையலறையிலேயே இருத்தப்படுவதாலும், வரதட்சணைக் கொடுமை காரணமாகச் சமையலறை அடுப்பு வெடித்து அழிய நேர்வதாலும் மாமியாருக்கு அடுப்படி நெருப்பாகவும் அமைகிறாள் பெண்.
உருவகம்
பொருளும் உவமையும் வெவ்வேறு அல்ல என்பது உருவகம்.
இடியின் திட்டு
மின்னலின் பிரம்படி
அழுதது வானக்குழந்தை (பல்லவன்)
என்பதில் இடி திட்டாகவும், மின்னல் பிரம்படியாகவும், மழை அழுகையாகவும், மேகம் தண்டிக்கப்படும் குழந்தையாகவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளன.
பள்ளிக்குப் போகாத சிறுமி
செல்லமாய்க் குட்டும்
ஆலங்கட்டி மழை (அறிவுமதி)
என்னும் கவிதையில் ஆலங்கட்டி மழை ஆசிரிய நிலையில் கருதப்பட்டுக் குட்டுவதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
2.4.2 நகைத் துளிப்பா (சென்ரியு)
துளிப்பாவை அடுத்துச் சிறந்திருப்பது நகைத் துளிப்பாவாகும். ஜப்பானின் சென்ரியு என்னும் கவிதை வகையே தமிழில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஐக்கூவின் அங்கத வடிவம் சென்ரியு. ஐக்கூ இயற்கை உலகில் பார்வை செலுத்துகிறது எனில், மக்கள், பொருள், சம்பவங்கள் ஆகியவற்றின் மீதான பார்வையைக் குறிப்பது சென்ரியுவாகும். 5+7+5=17 என்னும் அசைகள் அமைப்போடு ஒழுங்கு வகைப்பட்டு ஒவ்வொரு கவிதையும் இருக்கும். சென்ரியு கவிதைகள் நடுத்தர மக்களின் அனுபவம், உணர்வு போன்றவற்றைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை அலுப்பை அகற்றும் சாதனமாக அமைந்து சுய அறிவுக்கு ஏற்றதாக அமைகின்றன. இவை மறைபொருள் தன்மை உடையனவாய் இருப்பதால் ஒரே சமயத்தில் ஒன்றிரண்டு என்று கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பதே பயனளிப்பதாக அமையும்.
மூன்றடி, தலைப்பு இல்லாமை என்பன ஐக்கூ, சென்ரியு என்னும் இரண்டிற்குமான ஒற்றுமைப் பண்புகள். படிம அழகு, தத்துவச் சார்பு, இயற்கைத் தரிசனம் போன்ற கூறுகள் ஐக்கூவில் சிறப்பிடம் பெறுகின்றன. அன்றாட வாழ்வைப் படம் பிடித்தல்; ஆழமற்றிருத்தல்; வேடிக்கை, விடுகதை, நகைச்சுவை போன்ற தன்மைகளுடன் பொன்மொழி போன்றிருத்தல் ஆகியவை சென்ரியுவின் தனிச்சிறப்பாகும்.
நகைத் துளிப்பாவைத் தமிழுக்கு அறிமுகம் செய்துள்ள ஈரோடு தமிழன்பனின் ‘ஒரு வண்டி சென்ரியு’ என்னும் நூலிலிருந்து சில கவிதைகளை அரசியல், உறவுகள், கடவுள், குழந்தையுள்ளம் என்னும் தலைப்புகளில் இங்குக் காண்போம்.
அரசியல்
அரசியல்வாதி ஆவதற்கென்று தனித்தகுதி தேவையில்லை. எப்படிப்பட்டவர்களும் அதில் சென்று முன்னேறி விடலாம் என்பதை,
அது வராவிட்டால் இது
இது வராவிட்டால் அது
எதுவும் வராவிட்டால் அரசியல் (ப.66)
என்னும் கவிதையில் நையாண்டி செய்கிறார் கவிஞர்.
கட்சிகள்தோறும் காணப்படும் கூட்டங்கள், தானே திரண்டனவல்ல; திரட்டப்பட்டனவேயாகும். இதனை,
ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்
ஐம்பது வாக்குகள் (ப.30)
என்னும் கவிதையில் பட்டவர்த்தனமாக்கியுள்ளார்.
‘மன்னன் எப்படி, மக்கள் அப்படி’ என்பார்கள். பொறுப்பான பதவியில் உள்ள அமைச்சர் பெருமக்களே, தாங்கள் கூடும் பொதுச்சபையில் சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில்லை என்றால், இவர்களால் ஆளப்படும் நாடு என்னாவது?
சட்டம் ஒழுங்கைக்
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில் (ப.31)
என்பது அதைச் சுட்டும் கவிதை.
பதவியிலிருக்கும்வரை அதிகார தோரணையில் தன் விருப்பப்படி நடப்பவராகவும் மக்களைப் பற்றிக் கவலைப்படாதவராயும் இருப்பவர், வீட்டுக்கனுப்பப்பட்டதும் நாட்டைப் பற்றிச் சிந்திக்கிறார்.
பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன் (ப-63)
என்னும் கவிதை அது பற்றியதாகும்.
அரசியல்வாதிகளாகிய கட்சித் தலைவர்கள் சுயநலவாதிகள்; தொண்டர்கள் அப்பாவிகள் என்பதை,
கட்சி தொண்டர்களுக்கு
காசு குடும்பத்துக்கு
தலைவர் மரணமுறி (ப.92)
என்னும் கவிதை புலப்படுத்துகின்றது.
உறவுகள்
இன்றைய வாழ்வில் உறவுகள், பணத்தையே குறியாகக் கொண்டுள்ளன. மனைவியின் எண்ணமும் அதுவாக இருப்பதே வியப்பு; கசப்பான உண்மை.
வழியனுப்ப வந்த மனைவி
கண்ணீரோடு சொன்னாள்
பணம்அனுப்ப மறந்திடாதீங்க (ப.97)
என்பது அது சார்பான கவிதை.
அண்ணன் தம்பி உறவும்கூடப் பொருளாதாரத்தை மையமிட்ட நிலையில் ஐயப்பாட்டிற்கு உரியதே என்பதை,
அயர்ந்த தூக்கத்தில் அண்ணன்
தம்பிவைத்தான் தலைமாட்டில்
ஊதுவத்தி (ப.58)
என்னும் கவிதை உணர்த்தும். ‘ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி’ என்னும் பழமொழிக் கருத்துடையது இது.
கடவுள்
வழிபாட்டிடம், வணிக இடமாகி விட்டது. நல்ல உள்ளம் படைத்தவர்களும் பொருளாசைக்கு அடிமைப்பட்டுப் பண்பு குன்றி விடுகின்றனர் என்பதை,
குருக்களாகி விட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டுநிறைய காணிக்கை (ப.27)
எனக் கடவுள்மேலிட்டுக் குறிப்பிடுகின்றார்.
குழந்தையுள்ளம்
வெளியுலகிற்குச் சென்று விளையாட விரும்பும் குழந்தையை வீட்டில் அடைத்துப் பழைய கதைகளைத் திணித்தல் கூடாது. அனுபவமே தலைசிறந்த கல்வி. கதைகள் கட்டுச்சோறு போன்றன.
கதை வேண்டாம்
கதவைத் திறந்துவிடு
குழந்தை அடம் (ப.77)
என்னும் கவிதை இக்கருத்தை உணர்த்துகின்றது. சொல்புத்தி விடுத்துச் சுயபுத்தியுடன் வாழும் குழந்தையே சாதிக்கவல்லதாகும்.
இனி இயைபுத் துளிப்பாவைக் காணலாம்.
2.4.3 இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ)
அங்கதத்தோடு மூன்றடிக் கவிதையில் முதலடியின் ஈற்றுச் சீரும் மூன்றாமடியின் ஈற்றுச் சீரும் இயைபுத் தொடையமையப் பாடப்படுவது இயைபுத் துளிப்பா. இதன் இரண்டாமடி ஏனைய இரண்டடியையும் விட நீண்டிருத்தல் சிறப்பு.
ஈரோடு தமிழன்பனின் சென்னிமலை கிளியோபாத்ராக்கள் என்னும் நூல் இத்தன்மைத்தாகும். அந்நூற் கவிதைகளில் சிலவற்றை முரண்பாடு, சுயநலம், பொய், தன்பலம் அறியாமை என்னும் தலைப்புகளில் காண்போம்.
முரண்பாடு
சொல்லொன்று, செயலொன்றாய் மனிதன் வாழ்கின்றான். ‘ஊருக்குத்தான் உபதேசம்’ என்பது அவன் கொள்கையாக இருக்கின்றது.
பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடு கோழி
மீன் நண்டு வகையே அதிகம் (ப.28)
என்னும் கவிதை அதனைப் புலப்படுத்துகின்றது.
சொல்லை வைத்து அன்பைப் புரிந்து கொள்ள முடியாத காலமிது. நண்பனைப் போல் பழகும் உட்பகையாளர் பலர் நாட்டில் உள்ளனர். இதனை,
வார்த்தைகள் பாசவெள்ளம்
நண்பர்க்கு நண்பர் தோண்டுவதோ வெட்டிப்
புதைக்க ஆழப் பள்ளம் (ப.41)
என்னும் கவிதை உணர்த்தும்.
சுயநலம்
தம் இன்பத்திற்காகப் பிறர்க்குத் துன்பம் தருதல் தகுதியுடையதாகாது.
புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய் (ப.18)
என்னும் கவிதை. சமுதாயத்திற்குத் தீங்கு தருவதைத் தடைசெய்யாமல், தீங்கு என்று அறிவுறுத்துவதோடு நின்று, அத்தீங்குப் பொருள்களை உற்பத்தி செய்தும் வணிகம் செய்தும் வாழ்வோரைச் சிறப்புறச் செய்வதாய் அரசு விளங்குவதைச் சுட்டிக் காட்டுகின்றது.
பொய்
மனிதர்கள் பலர், இல்லறத்தின் வேராம் மனைவியை விட்டுவிட்டுத் தகாத நெறியொழுகுதலையும் அதற்காகப் பொய் பேசுதலையும் இயல்பாகக் கொண்டு வாழ்கின்றனர். அவர்களை,
மணக்கும் மதுரைமல்லி
வாங்கிப் போனான் காதலிக்கு
மனைவி பேரைச் சொல்லி (ப.56)
என்னும் கவிதை அடையாளம் காட்டுகிறது.
தன்பலம் அறியாமை
‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பார்கள். உலகில் தன் வாழ்வெல்லாம் துன்பம் என்றும், பிறர் வாழ்வெல்லாம் இன்பம் என்றும் கருதி மயங்குவோர் பலர். தரமாகக் கவிதை எழுதியிருந்தும், எதுகைமோனை வரம்போடு எழுதுவதுதான் கவிதை என்று பிறர் கருதுவதை விரும்பியவன், யாப்புக் கற்க முயன்றதாக,
கவிதை எல்லாம் விற்றான்
கைக்கு வந்த காசைக் கொண்டு
தேமா புளிமா கற்றான் (ப.91)
என்னும் கவிதையில் எடுத்துரைக்கின்றார் தமிழன்பன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.5 தொகுப்புரை
கவிதை என்பது சொற்களில் இல்லை; சொற்களுக்கு இடையில் இருக்கிறது. முருகியல் உணர்வு தருவதோடு வாழ்வியலை நெறிப்படுத்துவதும் அதன் பயன்களாகும். மரபுக்கவிதை, இசைப்பா, புதுக்கவிதை, குறுங்கவிதை என்பன கவிதை வகைமைகளாகும்.
மரபுக்கவிதை சந்தமும் தொடையும் செறிந்தது. வெண்பா, ஆசிரியப்பா என்னும் பாவகைகளும், தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களும் மரபுக்கவிதை வகைமையில் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன.
சந்தப்பா, கும்மிப்பாடல், சிந்துப்பா என இசைப்பா மூன்று வகைப்படும். சந்தப்பா வல்லினம் முதலான இசைகளால் சிறந்து விளங்குவது; கும்மிப்பா வெண்டளை யாப்பும் முடுகியல் ஓசையும் கொண்டு சிறப்பது; சிந்துப்பா அடிதோறும் இயைபுத் தொடை கொண்டு திகழ்வது.
புதுக்கவிதை, மரபுக்கவிதையின் வரையறைகள் கடந்தது; சுதந்திரமாக எழுத ஏற்றது. எளியன, பல உத்திமுறைகளில் அமைந்தன, இருண்மை நிலையின என வகைப்படுத்தி உணரத் தக்கன புதுக்கவிதைகள்.
குறுங்கவிதை மூன்றடிகளில் அமைவது. ஜப்பானியக் கவிதைகளின் தாக்கத்தால் தோன்றியது. இது துளிப்பா (ஐக்கூ), அங்கதம் உடையதான நகைத் துளிப்பா (சென்ரியு), முதலடியும் ஈற்றடியும் இறுதியில் இயைந்து அங்கதம் பொருந்த வரும் இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) என மூவகைகளில் அமைவது.
கவிதை வகைமைகளைச் சான்றுகளோடு இப்பாடத்தில் கற்ற நாம், இனி அவற்றை அடையாளம் காணலாம்; உரிய உத்திமுறைகளில் பொருத்தி உணரலாம். இவ்வாறே நாமும் கவிதை படைக்கவும் முற்படலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் இணையக் கல்விக்கழகம் -