இரண்டாம் கடைநிலை பார்வை - டைரி - அவளும் அர்த்தங்களும்

இரண்டாம் கடைநிலை பார்வை - டைரி
=====================================
(அவளும் அர்த்தங்களும்)

எங்கிருந்தோ வந்தான்
அழகாய் சிரித்தான்
மென்மையாய் பேசினான்
என் கூடவே இருப்பேன் என
சத்தியமும் செய்தான்
எனக்காகவே வாழ்கிறேன் என்றான்
நம்பிக்கை அளித்தான்
அழுதான்
நீதான் வேண்டுமென்றான்
வாசனை மாறாத பூக்களை
எப்போதும்
பரிசாகக் கொடுத்தான்
அவன் வர்ணனையால்
என் இரவுகளை நிறமாக்கினான்
அவன் தாமதங்களுக்கு முன்னால்
மண்டியிடுவான்
கொஞ்சுவான் மசியமறுப்பேன்
அப்றம் கெஞ்சுவான்
நேரம் போவது தெரியாமல் சிரிக்கச் சொல்லிக் கொடுத்தான்,,
இதையெல்லாம், ஏன் செய்கிறாய் என்றேன்....
உன்னை எனதாக்கிக் கொள்ளும்
ஒரு ப்ரயத்தனம் தான்
நம்பு ம்
சுயநலம் என்றே வைத்துக் கொள் என்றான்,
அதுநாள்வரை ,
நஷ்ட்டப்பட்ட எல்லாமே
திரும்பக் கிடைத்துவிட்டதுபோல்
வாழ்க்கையில்
எல்லாம் அர்த்தப்பட்டுப் போனதுபோல்
கருதியிருந்தேன்

பின்பொரு நாள்
சபித்தான்
தொடராதே என்றான்
எறிந்து எறிந்து விழுந்தான்
உன்னால் தான்
என் சுதந்திரம்
நாசமாகிப் போனதென்றான்
உன் கொஞ்சல்களினால்
மேலும் எரிச்சலூட்டாதே என்றான்
உனக்குக் காதலிக்கத் தெரியவில்லை
எனக் கத்தினான்
நீ எதற்குமே இலாயக்கு ஆகமாட்டாய் என்றான்
என்னைவிட்டுப் போனால்
நிம்மதியாக
இருப்பேன் என்றான்
என் முன்பு
சற்றும் பி டிக்காதவர்களுடன்
மணிக்கணக்கில் பேசுகிறான்
குடித்துவிட்டு வந்தவன் மேல்
உதிரிப் பூக்களுடைய
வாடை இருந்தது
""அனைத்தையும்
பழக்கிக் கொடுத்தவனுக்கு
அவனை மறக்கச் சொல்லித் தந்திருந்தால்
எத்தனை நன்றாய் இருந்திருக்கும்
எதிலும் அரைக்குறைதான்
எதையும்,
சரியாகச் செய்யத் தெரியவில்லை
எனக்கும் தெரியவில்லை
நெஞ்செரிச்சல்போல்
இருக்கிறான்
எப்படியாவது மறந்துவிடலாம் என்று
பேசாமலிருந்தால்
வலிய வந்து அன்பு செய்கிறான்
முத்தமிடுகிறான்
இது எத்தனையாவது முறையோ,,
அழுகிறேன் ம்
மரத்துப் போயிருக்கிறேன்""
யார் யாரோ அன்பு செய்கிறார்கள்
ஆறுதல் சொல்கிறார்கள்
ஆதரவுத் தருவதாக சொல்கிறார்கள்
உணர்த்தீயில்
கவிதைக்கோடுக் கிழிக்கிறார்கள்
எதைத் தேடுவேன்
""அறுத்துவிழும் இரத்த ஆடை
அவனை வரைந்து சென்றது
காலத்தின் வழியெங்கும்.. ""
சரி
இனி எதுவும் வேண்டாம்
பிரிந்துவிடலாம்
என முடிவானப் பின்பு
கவனித்திருந்தேன்
எதற்காகவோ
என்னை ஏக்கமாய்ப் பார்க்கிறான்

வந்தது முதல் போனதுவரை
புதிராகவே நின்று மறைந்துவிட்டான்
அதிக நாட்கள்
கண்களுக்கு தென்படவே இல்லை..
ஒருவேளை
மறந்திருக்கலாம்கூட
வீண் நினைவுகளின் கேள்விகளுக்கிடையில்
ஒருநாள் அழைத்தான்
எப்படியெல்லாம் பேசியிருப்பான்
எப்படியெல்லாம் கொஞ்சியிருப்பான்
கண்களில்
இந்த கருவளையம்
அவன் கொடுத்துப் போனதுதான்
அலைப்பேசியில்
ஒரு பெருமூச்சுக்குள் என்னை அடைத்துவிட
அவனுக்கு
இத்தனை இடைவேளை வேண்டுமா ம் ..?
இந்த மெளன நீட்சியும்
அவனிடம்
பிடித்திருந்ததுதான் ம்
அதே வாசனை மாறாதப் பூக்களை
என் கைகளுக்குள் வைத்தான்
எப்படி இருக்கிறாய் என்றான்
பிறந்தநாள் வாழ்த்தினான்
வழக்கமாக சந்திக்கும் கோயிலில்
என் பெயரில்
அர்ச்சனை செய்திருந்தான்
அப்போதுபோல
அதிகமாய்ப் பேசிக் கொள்வதை தவிர்த்துக் கொண்டான்
மீண்டும் பிடிக்கிறதா
எனக் கேட்கத் தோன்றவில்லை
பழையன எதையும்
பேசிக் கொண்டதாகத் தெரியவில்லை
நினைவுப் படுத்தியதாகவும்
தெரியவில்லை ..
நேரில் பார்த்ததும்
கண்களால் தான் ஏறிட்டுப் பேசினான்
நெற்றிச்சுட்டில்
விபூதியிட்டுவிட்டான்
கைகளைக்கூப்பி
புருவத்தின்மேல் வைத்து
பிசிறுகளை ஊதிக் கடத்திவிட்டு
டைம்க்கு சாப்பிடு
உடம்பைப் பார்த்துக்கோ ன்னு சொன்னான்

எல்லாம்
சொல்லித் தீர்ந்திட்டப் பிறகு
அவ்வளவுதானா என்பதற்கில்லை
அப்றம்
"இனி என்ன" போயிட்டு வரவா
என்னும் அவனற்ற வெறுமைக்குள் வாழுகிறேன்

அவனுடைய
எதில்தான் அன்பு இல்லை ம்
இன்றும்
அவன் செய்கைகளினால்
புதிராகவேத் தோன்றி
புதிராகவே மறைந்துவிட்டான்

ஒரு மாயப்பித்தன் போல் ..

ஒரு நிமிடம்
யாரோ அழைப்பதுபோல்
எதையும் சட்டென்றுத் திரும்பிப் பார்க்கும்
என்னையும்
அவனையும் தவிர
அங்கு
எல்லாம் மாறியிருந்தது

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (5-Feb-19, 11:52 am)
பார்வை : 99

மேலே