இது ஒரு பொன் மாலைப் பொழுது1

இது ஒரு பொன்மாலைப் பொழுது...!!

அந்தி வானம் சந்தனத்தை
அள்ளிப் பூசும்போது
அந்த அழகை கண்டு நிற்க
கொள்ளை போகும் மனது..!!

புல்லினங்கள் சுற்றியலைந்து
கூடு சேரும் நேரம் - அவை
கூடி கொஞ்சும் பாட்டைக் கேட்க
நெஞ்சில் தீரும் பாரம்...!!

வெம்மைதன்னை விரட்டித் தென்றல்
வீசி இன்பம் சேர்க்கும்
வெள்ளி நிலவு இருண்ட வானில்
எட்டிக் கொஞ்சம் பார்க்கும்..!!

கொடியினிலே ஜாதி மல்லி
பூப்பெய்திதானே மணக்கும்
அந்தவாசம் நாசிதொட்டு
சிந்தைதனை மயக்கும்..!!

நாள் முழுதும் உழைத்தவரும்
களைத்திருக்கும் தருணம்
அந்தி மாலை ஓய்வு தந்து
உழைக்கும் வர்க்கம் வருடும்..!!

பாவலர்க்கு கவிதை தரும்
அந்தி மாலை அழகு..
அந்த நேரம் கன்னல் பாக்கள்
தீட்டி நீயும் பழகு..!!

தேனீக்கள் போல கூடியிங்கு
பாவலர்கள் கூட்டம்
திரட்டி வந்த தேனையெல்லாம்
பாவின் வழி கொட்டும்...!!

சுவைத்துதானே மகிழ்ந்திருப்போம்
பொன் மாலைஇந்த பொழுதில்
மழலையாகி களித்திருப்போம்
என்றும் கபடமில்லை மனதில்..!

துன்பம் மறக்க வந்ததிந்த
அந்தி மாலைப் பொழுது
இவ்வின்பம் நித்தம் வேண்டுகிறேன்
இறைவனை நான் தொழுது..!!

#சொ.சாந்தி

++++++++++++++++++++++++++++++++
குறிப்பு :

அருந்தமிழ் கலை இலக்கிய மன்ற துவக்க விழாவில் வாசித்த கவிதை.
++++++++++++++++++++++++++++

எழுதியவர் : சொ.சாந்தி (6-Feb-19, 1:24 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 200

மேலே