காதல் சொல்லிப் பழகு
சமீப நாட்களாய்…
ஓய்விலுள்ள நீரின் மேல் எறிந்த கல்லாய்
அவனின் அருகாமை தந்த
சலனங்கள் அவளுள்...
பேசிக்கொண்டிருக்கும்போதே
அழகாய் - - என்
முன்நெற்றி விழும் முடி ஒதுக்கும்
அவன் ஒற்றை விரல் தொடுகை
தன்செயலா.. தற்செயலா
ஆனால்
தத்தளித்தது என் மனம்...
ஒற்றை வார்த்தைப் பதிலின்
கேள்விக்கு
ஓராயிரம் முறை
திணறுகிறேன்..
கேட்பவன் அவனெனில்…
புடவை தந்த அழகில் - அனைவரின் பாராட்டை ஏற்ற விழிகள்…
அவன் விழிப்பார்வை தாளாமல்
கன்னக் குழிகளும் சிவப்பேரின...
யுகமாய் தோன்றும் அவனது
ஒரு நாள் விடுப்பு…
மௌன மொழிகளும் வாசிக்கும் மனது…
இன்னபிற
இன்னபிற…
என்னுள் காதலின் அறிகுறிகளாய்…
அத்தனையும் பொய்யாய் போனது
அவனது
அயல்நாட்டு பணி பற்றி
கூறுகையில்…
உதட்டின் புன்னகை தவிர
உடலின் ஏனைய பாகங்கள்
உண்மை உரைக்க..
தலையசைத்து விடை கொடுத்தாள்…
அந்தப் புன்னகை
அளித்த திருப்தியில்…
திரும்பி நடந்தவனின்
எண்ணத்தில் ஏக்கங்களாய்…
சிறு தொடுகையில் சில்லிட்ட தருணங்கள்…
உரையாடலின் போது உண்டான தடுமாற்றங்கள்…
பார்வை சந்திப்பில் பரிமாறிய
வெட்கங்கள்….
ஒரு நாள் பிரிவில் உணர்ந்த
வெறுமைகள்…
இப்படி எதுவுமே
இவள் கருத்தை எட்டவில்லையா?
எண்ணச்சிதறல்களிள்
இணைந்த இருவரும்
எதிரெதிர் பாதையில் நடந்தனர்….
ஆதலால்
காதல் சொல்லிப் பழகு!!!