உன்னால் நான்
என்னை மலர் என்றாய்
உனக்குள் வாசமானேன்
என்னை தென்றல் என்றாய்
உனக்குள் ஸ்வாசமானேன்
என்னை நிலவு என்றாய்
இரவெல்லாம் உலா வந்தேன்
என்னை கதிரவன் என்றாய்
உன் பகல்களுக்கு தொடக்கப்புள்ளியானேன்
என்னை முகிலினம் என்றாய்
உன்னையே சூழ்ந்து கொண்டேன்
என்னை மயிலினம் என்றாய்
உன்னை என்வானின் மழையாக்கினேன்
என்னை சேய் என்றாய்
உன் பாறைமார்பில் துயில்கொண்டேன்
என்னை தாய் என்றாய்
உன்னை மடிமீது கிடத்தி கொண்டேன்
என்னை மொழி என்றாய்
உன் நாவிலூறி தமிழாகினேன்
என்னை இசை என்றாய்
உன் விரல்களின் அசைவில் ஜென்மமெடுத்தேன்
என்னை புத்தகம் என்றாய்
உன்னை ஒவ்வொரு பக்கத்திலும் பதித்து வைத்தேன்
என்னை குரு என்றாய்
உன் புத்தி கூர்மைக்கு உரிமம் பெற்றுக்கொண்டேன்
என்னை மாயை என்றாய்
உன் கள்ளத்தனங்கள் தானம் பெற்றேன்
என்னை ரசிகனின்ரசிகை என்றாய்
உன்னை பார்வையாக்கி பூமியை பார்த்தேன்