வெடிகுண்டு
அந்த மருத்துவமனை
அந்தியில்
இருக்கும் உயிர்களையும்
இல்லாமல் போனவர்களையும்
வைத்து அன்றைய
வருமான கணக்கெழுதிக்கொண்டிருந்தது
மரணம் எந்த அறை
திறந்துள்ளதென பார்த்து
நலம் விசாரிக்கும் சாக்கில்
நலிந்து போன இதயங்களை
இன்று இரவு நம்ம வீட்டுக்கு
போய்விடலாம் என்றது
அங்குள்ள
குழந்தைகள் அங்கும் இங்கும்
ஓடிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும்
இருந்தார்கள் அங்கே மாட்டியிருந்த
புகைப்படங்களில்
கழிவறையின்
கதவிடுக்கில்
கடிகாரம் பொருத்தி
நேரம் வைத்து
நகர்ந்தேன்
பிரசவ அறையின் முன்னே
ஏதோ ஒரு தலை பையனின்
தலைமகன் அவரது
தலை பையனுக்காய்
தலைகவிழ்ந்து காத்திருந்தார்
அறுபதிலும் அன்பு
அவள்மேல்
குறையவில்லை அவரிடம்
மூத்திரம் எடுக்கிறார்
பாத்திரத்தில்
கை கால் வராமல் போன
மனைவிக்காக
மருத்துவர்கள்
ஏதோ ஒரு அவசரபிரிவிற்கு
அணைபோட முயன்று
கொண்டிருந்தார்கள்
யாருக்கோ
அவர் அவசியம் என்று
வாடிக்கையாளர் நேரம்
இன்னும்
இருபது நிமிடம் என
இருமிக்கொண்டிருந்தது
ஒலிப்பெருக்கி
கடைசியாக
தீவிரவாதத்தின்
மதம் என்னுள்
பிடிவாதமாய் இருக்க
இரக்கமில்லாமல்
இதயம் இறுக்கி நடந்தேன்
வாயிலை நோக்கி
யாரோ ஒருத்தருக்கு
வேகவைத்த
வாய்க்கரிசியை
வேகமாய் எடுத்து செல்கிறான்
என்னைபோன்ற
இளைஞன்
அவசர ஊர்தி உயிர்வலிக்க
கத்திக்கொண்டு வந்து
உயிர்பலியை தவிர்க்க
ஆசுவாசப்படுத்தி நின்றது
அதில் இருந்த
ஐந்து வயது சிறுவனின்
தலையிலிருந்து ரத்தம்
உடல் பாதுகாப்பிலிருந்து
விரைவாய் தப்பித்து கொண்டிருந்தது
ஊர்தியை கடக்க எத்தனிக்கையில்
யாரோ ஒருவர் என் தோளில் இடிக்க
பின்மண்டை அதன் கதவில் இடிக்க
மரணவலியை ஒத்திகை பார்த்து
மயங்கதுவங்கினேன்.
அருகிலிருந்த மருத்துவர் ஒருவர்
மங்கலாய் நெருங்கினார் விழிகளினருகே
கழிவறையின் மூலையில்
அந்த வெடிகுண்டு
மரணத்தோடு கட்டித்தழுவி
வைத்தவனையே
வெல்லப்போகிறோம் என்று
வாழ்த்து வாங்கிக்கொண்டிருந்தது.
ஒரு அரசியல்வாதியை
கொன்று போட வேளை
கிடைக்காமல் இத்தனை
உயிர்களுக்கு விலை
பேசிவிட்டேன் என்று நினைக்க
கண்களின் ஓரத்தில் நீர்த்துளி
வழிந்தோடிய குருதியோடு கலந்து
அப்பொழுதும் என்னில் உள்ள
தீவிரவாதம் மனிதாபிமானத்தை
தெரிவிக்க அனுமதி மறுத்தது
இனிமேல் நமக்கு நிரந்தர
ஓய்வுதான் என்று இமைகள் இரண்டும்
மூடிக்கொண்டன.
“பத்துமணிக்கு நான்
மீண்டும் வந்து பார்க்கிறேன் “ என்ற
மருத்துவரின் குரல்
நான் இன்னும் மரணிக்கவில்லை என
மூளைக்கு நம்பிக்கை அளிக்க
கண்திறந்து பார்க்கிறேன்
செவிலிப்பெண் ஒருத்தி
ஊசியில் மருந்தேற்றிக்கொண்டிருந்தாள்
அதே வேகத்தோடு வெடிகுண்டு
ஏன் இன்னும் வெடிக்கவில்லை
கேள்வி என்னுள் ஏற
அந்த அறையின் கடிகாரம்
வெடிக்கும் காலத்தை தாண்டி
விடியலைநோக்கி
மெதுவாய் ஓடிக்கொண்டிருந்தது
அவளிடம் சொல்லிவிட்டு
கழிவறையை பார்த்து நடந்தேன்.
அறையுனுள்ளே ஒருவரின்
ஆக்கிரமிப்பு அதனுள்ளிருந்துவரும்
நீர்விழும் ஓசை தெளிவாக்கிற்று
காத்திருந்தேன் கதவுதிறப்பிர்க்காக
இரண்டு நிமிடங்களில் வெளியேறினார்
நடுத்தரவயதுக்காரர்.
உள்ளே நுழைந்தேன்
தூக்கிவாரிப்போட்டது அங்கே எதுவுமில்லை
வெளியில்வந்து தாழிட்டுத்
திரும்பையில் எதிரில் நின்று
புன்சிரிப்புதிர்க்கிறார் மருத்துவர்
அத்தனை உயிர்களோடு
என்னையும் காத்த
மனிதாபிமானத்தை
சிவப்பு கூட்டல் குறியோடு
நெஞ்சில் சேர்த்து நிற்கிறார்
அவரின் வெள்ளை அங்கியின்
பரிசுத்ததில் என் தீவரவாதமும்
நீக்கப்பட்ட அந்த வெடிகுண்டும்
செயலிழந்து போயிருந்தது...