தம்பி நீ வந்திடடா
தம்பி நீ வந்திடடா...😞
------------------------
ஒரு நல்ல
நாளதனில்
உறவுகளும்
உறுநட்பும்
உனைவாழ்த்தச்
சிறுதொட்டில்
தனிலிட்டுன்
சின்னஞ்
சிறுகாதில்
தருபெயர்
ஓதுமந்தத்
திருநாளும்
வருமென்றே
காத்திருக்க...
பிஞ்சுமுகங்
காட்டி
அஞ்சுசிறு
விரல் ஆட்டிப்
பஞ்சனைய
காலுதைப்பாய்,
‘குஞ்சு’ ‘ராசா’
எண்டு நாங்கள்
கொஞ்சிக் குலவி,
கொஞ்சம்
இஞ்சை வாவெண்டு
கெஞ்சி மடியேந்தக்
குறுநகை கூட்டிக்
களிசேர்ப்பாய்
என்றுவிழி பூத்திருக்க...
அன்னையர்
தினமதிலுன்
அன்னையையும்
வாழ்த்தாமல்
என்னதான்
அவசரமோ?
எமையெலாம்
அகன்றெங்கே
பறந்தனையென்
சின்ன மருமகனே
உடைந்துருகும்
உந்தைக்கும்,
உனைச் சுமந்த
உந்தியதன்
இன்மையிலே
உலையாய்
உளங்கனலும்
உன்தாய்க்கும்,
என் சொல்லித்
தேற்றுவம் யாம்?
கூற்றுவன் தான்
கொடியனென்றால்
கும்பிட்ட வேலனுக்கும்
கூர்விழிதான்
குருடாச்சோ?
'நம்பினவர்
கைவிடப்படார்'
என்பதெல்லாம் அச்
செம்பவள வாயனுக்கு
இனிப்பொருந்தாப்
புகழுரையாய்த்
தான் போச்சோ?
எங்கு சென்றாய்
எமை விட்டு?
வெம்பியழும்
அவர்விழிநீர்
வெறுஞ்சொல்லால்
துடைக்கேலா
விரும்பி, வரங்கேட்டுத்
திரும்பி இங்கினையே
தாய்தந்தை அகங்குளிரத்
தம்பி! நீ வந்திடடா....😞
~ தமிழ்க்கிழவி.
(நேற்று முன் தினம் தேவதையான உடன் பிறவாச் சகோதரனின் மகனுக்கு எழுதப்பெற்றது)