காதல் எச்சம்
திரும்பி பார்க்கிறேன்
நீ மென்று துப்பிய எச்சங்களை
வனவாசம் போல் முடிந்து போன
நீ செய்த
என் காதல் சிசுக் கொலையினை
திரும்பி பார்க்கிறேன்....
வாழ்வின் இளமை இன்பமென்று
இனிமையான நாட்களெல்லாம்
மாயமாய் மறைந்து விட..
வனவாசத்தில் தொலைத்த
எத்தனையோ உறவுகளை
திரும்பி பார்க்கிறேன்....
வசந்த காலங்கள் வழி மாறி
இலையுதிர் காலமாய்
பறி கொடுத்த பல நினைவுகள்
உச்சாணிக் கொம்பில்
ஒத்தை இலையாய் இன்னும் உயிர்ப்புடன்..
நீ கடந்து சென்ற இடங்களெல்லாம்
கனவாய் மறைந்து விட
என் கனவெல்லாம்
காலவெள்ளத்தில் கரைந்ததனை அறியாமலே
பகல் கனவில் நான்...
மகிழ்ச்சியான வாழ்வென்று
மனமொத்து நீ சென்றிட
வானம் பார்த்த பூமியாய்
வெப்பத்தின் வெடிப்புகளுடன்
என் வாழ்வு எதிர்பார்ப்புடன்...
மறந்திடத்தான் நினைக்கின்றேன்
பார்க்கும் இடமெல்லாம் உன் சாயல்
உதிரா ஒத்தை இலையாய்
உச்சாணிக் கொம்பில் உதிரத்துடன்...
நினைவெல்லாம் நீயாக
நிகழ்காலம் தொலைத்தேன்
எதிர்காலம் தொலைவது தெரியாமல்
இறந்தகால நினைவுகளுடன்...
உன் நினைவுகள் ஏதும் மிச்சமில்லை
நிகழ்கால வாழ்வில்
மறையா வடுவாக
நீ மென்று துப்பிய
நிகழ்கால எச்சமாக நான்...