உயிராகி ஒன்றாகி வாழ்ந்திடலாம் வா வா
உயிராகி ஒன்றாகி வாழ்ந்திடலாம் வா! வா!
வண்ண மடிகனத்த மேகங்கள்
வழி நெடுக தூவும் பனிமலர்கள்
விண்ணில் பறக்கும் வண்ண வாசமலர்கள்
பண்ணில் திளைத்த துளைவிழுந்த மூங்கில்கள்
தேன்சுவை தெளிந்த நீர் தடாகம்
தங்க மீன்களோடு தண்டாமரைக் குளம்
பொன்னிலவு இடை விழிக்கும் கானகம்
இன்மொழி உடன் கதைக்கும் புள்ளினம்
கற்பனைக்கு அப்பால் ஓர் தனியுலகில்
விண்மீன்கள் உருக்கி பொன் நூலாக்கி
கீழ்வனச் சிவப்பை பவளமாய் உருட்டி
மங்களநாண் கோர்த்துனக்குச் சூட்டிடுவேன்
கள்ளம் இல்லா உன்விழி காணும் கனவுகளை
தெள்ளத் தெளிவாய் செப்பிடுவாய் பெண்ணே
உள்ளம் உவப்ப அதை மெய்ப்பிப்பேன் முன்னே
அள்ளக் குறையா அதரச்சுவை தருவாய் கண்ணே
ஆப்பிளை உண்ட ஆதாம் ஏவாளாய்
அறியாத புதிரனைத்தும் முதல் உணர்ந்து
எனக்கான உறவாய் நீ மட்டும்
உனக்கான உடைமையாய் நான் மட்டும்
உயிராகி ஒன்றாகி வாழ்ந்திடலாம் வா! வா!
கவிதாயினி அமுதா பொற்கொடி

