மைனா

மைனா பார்த்து இருக்கிறீர்களா?
படம் அல்ல. பறவை.

கறுப்பு நிற கொண்டையும் பழுப்பு கிளை விரித்த சின்ன கால்களும் மஞ்சள் அலகுடனும் இருக்கும். அதன் குரல் இதன் குரலா என்று வியக்கும்படி இருக்கும்.

ஆம். அந்த பறவைதான்.

இன்று காலை அந்த பேருந்தில் பயணித்து நான் அருகில் இருந்த கிராமத்துக்கு சென்றேன். விஷயம் ஒன்றும் இல்லை. சனிக்கிழமை ஆயிற்றே. வேலைகள் எதுவுமில்லை.
இப்படி போவேன். அடுத்த பஸ் வரும்போது அடுத்த கிராமம்.


இப்படியே மாலை வரை சுற்றி விட்டு பின் ஆள் அதிகம் இல்லாத அந்த பாருக்கு சென்று கொஞ்சம் குடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வர நள்ளிரவு வந்து விடும்.

ஒன்பது மணி இருக்கும் அங்கு நான் இறங்கியபோது. என்னுடன் மூன்று பேர் இறங்கினர். உள்ளூர் மக்கள். என்னை பார்த்துக்கொண்டே கடந்து போயினர்.

இலக்கு இல்லாததால் எதிரில் இருக்கும்
டீக்கடை நோக்கி நடந்தேன்.

அப்போதுதான்....

அந்த புளிய மரத்தில் இருந்து சட்டென்று அதி வேகமாக ஒரு மைனா பறவை கிளம்பி என் தலை மீது உட்கார்ந்து விட்டது.

அதிர்ச்சியில் சற்று ஓடி பின் நின்று கொண்டேன்.அது சிறகுகளை சற்று படபடத்து பின் அங்கேயே உட்கார்ந்து கொண்டது. இரு கைகளாலும் அதை பிடுங்கி எறிவதற்கு முயற்சிக்க அது பறந்தது. சற்று உயரத்தில் சுற்றி பறந்தது.

டீக்கடை மனிதர்கள் சற்று ஆச்சர்யமாக என்னை பார்த்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்றும் எனக்கு என்ன சொல்வதென்றும் புரியாமல் இருக்கும் போது மீண்டும் மைனா வந்து அமர்ந்து விட்டது. இம்முறை நான் அமைதியாக இருந்தேன்.

சரி...என்ன ஆகிறது என்று பார்ப்போம். எல்லை மீறினால் பிய்த்து எறிந்து விடலாம் என்ற கோபத்தை வலுக்கட்டாயமாக மறைத்து கொண்டு டீக்கடைக்குள் சென்றேன்.

அங்கிருந்தவர் ஒருவர் அதை விரட்ட ஒரு சட்டுவத்தை உயர தூக்க எனக்கே சற்று பயம் வந்து விட்டது.

பொறுங்கள்...ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்லி கொண்டே ஒரு ஓரமாய் அமர்ந்தேன்.

டீ தாருங்கள் என்று கேட்டபோது மாஸ்டர் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே போட ஆரம்பித்தார். டீயை தவிர என்னவெல்லாமோ இருந்த அந்த திரவத்தை விழுங்கி விட்டு மாஸ்டரிடம்
மைனா என்ன விரும்பி சாப்பிடும் என்று கேட்டேன். வடை என்றார். அது சத்தியமாக வடை சாப்பிடாது என்று எனக்கு தெரியும்.

வாங்கி கொண்டேன். கரகாட்டகாரன் கலசத்தை சரி செய்வது போல ஒரு வில்லல் வடையை பிய்த்து குத்துமதிப்பாக தா...தா...ட்ச்..டீச்.. என்று ஒலி எழுப்பி மைனா முகத்துக்கு நேரே ஆட்டினேன். அது சீந்தவேயில்லை.

அங்கிருந்தோர் பேப்பரை மடித்து விட்டு என்னையே பார்க்க ஆரம்பித்தனர்.

ரெண்டுக்கும் எவ்ளோ?

பத்து ருவாய் சார்...

இந்தாங்க.

செத்தே இருங்க அதை பிடிச்சா இன்னிக்கி ஆக்கிருவோம் என்று சொன்ன போது சலீம் அலி எழுதிய புத்தகங்கள் நினைவுக்கு வந்தது.

வேண்டாம் என்று மறுத்து விட்டு வந்த பஸ்ஸில் ஏற யத்தனித்தேன். அப்போது என் கையை லாவகமாய் பிடித்து அன்புடன் ஒரு முறுக்கு முறுக்கி எங்க ஊர் மைனாவை விட்டுட்டு போங்க சாரே என்றதும் அனிச்சையாக இன்னொரு பையில் கைவிட்டு ஐம்பது ரூபாயை எடுத்து கொடுத்தேன்.

அவசரமாய் பேருந்துக்குள் நுழைய ஜன்னலோர ஸீட் கிடைத்தது. அமர்ந்தேன்.
நடத்துனர் என் பள்ளி தோழன்.

டேய் எழுத்தாளரே மைனாவா வளர்க்கிறே என்று நெருங்கினான்.
மைனா சட...சட...க்க சற்று பின் வாங்கினான். கொஞ்சம் பெருமையாக இருந்தது அப்போது.

இப்போது இரண்டு லாபங்கள்.

ஒன்று அவன் என்னை எழுத்தாளர் என்று சொன்னது. (யார் இவனுக்கு இப்படி சொல்லி இருப்பார்கள். ஊருக்குள் என் தோரணையும், அலப்பறையும் வேறு.)

இரண்டு. மைனா என் வளர்ப்பு பறவை.

ஜெயமங்கலம் தா என்றேன்.

வீட்ல சௌக்கியமா..பிள்ளைங்க என்ன பண்ணுது.

நான் மர்ம புன்னகையை வீசினேன். அப்போது நான் என் மனதில் சொன்ன வார்த்தைகளை இங்கு எழுதினால் என் அடுத்த கதையை படிக்க மாட்டீர்கள் என்பது தெரியும்.

மேல்மங்களம் விளக்கில் கூட்டம் குவிய டிக்கெட் என்று கத்திக்கொண்டே விரைந்தான்.

பஸ்ஸில் இருந்த அத்தனை பேரும் இப்போது என்னையே பார்க்க ஆரம்பித்தனர். அது என் தலையை ஒரு சிம்மாசனம் போல் ஆக்கி காற்றின் வேகத்தில் சிறகுகளை விரித்து விரித்து மூடியது.

நன்றாக வேண்டும் அதற்கு...எத்தனை திமிர்... நான் பேசாமல் சாலையை பார்த்து கொண்டே இருந்தேன்.

புடிச்சு வச்சிக்கப்பா..பாவத்தை இப்படி பண்றியளே..என்று ஓர் பாட்டி கிளப்பி விட்டதும் ரெண்டு பேர் என்னை முறைத்தனர்.

நான் என்ன செய்வேன்?

கோவிலில் கும்பிடுவது போல ரெண்டு கையையும் தலைக்கு மேல் சென்று கூப்பி வைத்ததும் பரம சாதுவாய் இருந்தது.

அந்த அழகில் மயங்கிய ஒரு பிள்ளைதாய்ச்சி தன் இன்னொரு பிள்ளையை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து மைனா மாமா பாரு மைனா மாமா என்று அழுத்தி சொல்ல அந்த பிள்ளை சிரிக்க பஸ்ஸும் சிரித்தது.

அந்த நாட்டுக்கட்டைக்கு அண்ணன் என்பதை ஏற்கவே முடியவில்லை. பல் கடித்து பொறுத்தேன். கண்டக்டர் வீராசாமி ஒரு விரட்டு விரட்ட அமைதி.

ஜெயமங்கலம்.

இனி இங்கே என்ன செய்ய போகிறேன். என் ஊர் பஸ் வந்தது. ஏறி அமர்ந்து கொண்டு பெரியகுளம் என்றேன்.

மைனாக்கு டிக்கெட் என்றதும் மண் வாசனை மணக்க லேய் நா ஆரூன்னு தெரிமா...யென் அப்பா ஆரூன்னு தெரிமாயென் ஊர் பெரு என்ன என்று அரசியல் மணக்க பேசியதும் நகர்ந்தான்.
என் கண்ணாடியும் பேந்த பேந்த பார்க்கும் விழிகளும் பயமுறுத்தி இருக்குமா என்பதை நம்பவே முடியவில்லை. இருந்தாலும் இதில் ஜெயித்துவிட்டேன்.

வீடு.

தலையில் இப்படி ஒரு மைனாவை கட்டிக்கொண்டு வந்ததை பார்த்து நாய் வளத்தாச்சு. கொல்லையிலே கோழி ரெண்டு...இப்போ மைனா..ரொம்ப நன்னாருக்கு என்று அம்மாவின் புலம்பலை ஒதுக்கி விட்டு மாடிக்குள் புகுந்தேன்.

கண்ணாடியில் பார்த்த போது மைனா மந்தஹாசமாய் புன்னகைத்து பார்ப்பது போல் இருந்தது. என்ன அழகு.

ஹார்லிக்ஸ் பிஸ்கட்டை உடைத்து சரியாக அதன் வாய்க்கு நேர் நீட்டினேன். ரசித்து சாப்பிட்டது. பெருமாள் கோயில் தீர்த்தம் போல் கையில் கொஞ்சம் விட்டு காட்டினேன். ஆசமனம் செய்தது. அப்பாடா... அது சாப்பிட்டு விட்டது.

அதற்கு பிரதியுபகாரமாக பறக்கும் என்று நினைத்து கொண்டிருக்க அலகால் என் தலையில் சற்று கூர் தீட்டிவிட்டு கொஞ்சமாய் ஆய் போனது.

மனம் உடைந்து போனது.
எப்பேர்ப்பட்ட மூளை எனது. ஒரு நாள் விக்டோரியாவின் க்ரீடம் வைக்கப்பட்டு கொண்டாடப்படவேண்டிய தலை... இப்போது ஓபன் லெட்ரின்...


கடுப்பு மிக மொட்டை மாடிக்கு வந்தேன்.
இதற்குள் அண்டை வீட்டார் விஷயம் கேள்விப்பட்டு தத்தம் வீட்டு மாடியில் குவிந்து என்னை பார்க்க ஆரம்பித்தனர்.
ராமுடு மாமா பைனாகுலர் மூலம் பார்த்தது கொஞ்சம் அதிகம்தான்.

மைனா வானத்தை பார்த்து கொண்டிருக்கலாம். நான் கூட்டத்தை பார்த்து சிரிக்காது முகத்தை ரோதான் சிற்பம் போல் வைத்துக்கொண்டேன்.
அதன் பொருள் வாழ்வில் நிகழாத நிச்சயமின்மை மீதான கணக்கற்ற விழிப்புணர்வின் தேடல்கள் குறித்து யோசிக்கிறேன் என்று அர்த்தம்.

போன வாரம் தங்கத்திடம் இந்த வரியை சொல்லி அவள் மெய்மறந்து நின்றபோது
இதுக்கு  ஐங்குறுநூறுல வேற பேர் இருக்கு சொல்லவா என்று சுட்டிக்காட்டிய இடத்தை இன்னும் மறந்து இருக்க மாட்டாள். அவளும் அங்கு நின்று சிரித்தாள்...வன்மத்துடன்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் சிலர் என் காருண்யம் கண்டோ மைனாவைக்கண்டோ  விஸில் அடிக்க
என் கண் கலங்கியது.

தங்கத்துக்கு செய்த பாவம் என்று நினைத்து கொண்டேன். கிராதகி. அப்போதும் அவள் அத்தனை அழகுதான்.
அங்கிருந்தே என்னை பார்த்து அடக்க முடியாது சிரிக்கிறாள்.

சட்டென்று அம்பு போல் அந்த மைனா என் தலையில் இருந்து கிளம்பி மேலே பறந்து கொண்டிருந்த மைனா கூட்டத்துடன் கலந்து மறைந்தது.

ஒரு நொடி...ஒரே நொடிதான்...

மைனாவின் அடையாளம் தெரியவில்லை. அது எங்கே எங்கே என்று மனம் அலைபாய கூட்டம் அதோ அதோ வென கத்த எனக்கோ ஒன்றும் தெரியவில்லை. கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது.

இறந்த காலம் தன்  உணர்வுகளை அழிக்கும்போது சுக்கலான நிகழ்காலத்தில் வாழ்க்கை  தன் தரிசனத்தை தேட ஆரம்பிக்கிறது.

மைனா போயே போய் விட்டது.

கீழே இறங்கியதும் தலைக்கு குளி...கருமாந்திரம் போட்டும் என்று அம்மா திட்டிக்கொண்டே போனாள்.

நான் இன்று குடிக்க மாட்டேன்.

எழுதியவர் : ஸ்பரிசன் (18-May-19, 2:29 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : mainaa
பார்வை : 396

மேலே