எல்லையறியாப் போட்டி

விழி காணும் தொலைவு வரை
விசாலமாய் விரிந்த கடலே!
நொடிக்கு ஒரு நிறம் மாறி
பொழுதுக்கு ஒரு ஒப்பனை செய்யும்
விசித்திர வானத்துடன் போட்டியோ உனக்கு?
விநாடிக்கு விநாடி விதவிதமாய்
அலையெழுப்பி அலங்கரித்துக் கொள்கிறாயே!
பௌர்ணமி நிலவை கொள்ளையடிக்க திட்டமோ?
இல்லை முத்தமிடும் எண்ணமோ?
இருளடர்ந்த வானத்தில் சிதறிக்கிடக்கும்
விண்மீன்களுக்கு இணையோ
உன் கரையில் கொட்டிக்கிடக்கும் சிப்பிக்கள்!
அகண்ட ஆகாயத்தின் விந்தைகளுக்குச் சவாலோ
ஆழ்கடலின் விநோதங்கள்!
இந்த எல்லையறியாப் போட்டியில்
தோற்று நிற்பது என்னவோ
தீர்ப்பு காண இயலா மனிதனே!!

எழுதியவர் : சுவாதி (20-May-19, 7:53 pm)
சேர்த்தது : சுவாதி
பார்வை : 122

மேலே