எனது வேண்டுதல்

மனிதர்களிடம் பேசி மனிதர்களோடு மகிழ்ச்சியாக வாழ விரும்பினேன் நான்.
சிறு சிறு தவறுகளுக்கெல்லாம் கொதித்து எரிமலையாய் வெடித்த கோபம் மனிதர்களுக்கும் எனக்கும் மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தியது.
பிளவு அதிகமாக அதிகமாக ஒரு சிலரை தவிர வேறு எவருடனும் பேசுவதைத் தவிர்த்தேன்.
துரியோதனன் பயன்படுத்திக் கொண்ட கர்ணனைப் போல் இந்த உலகம் என்னைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் துடிப்பதைக் கண்டு அதனுடைய சீரணிக்க முடியாத ஏமாற்றுவேலைகளில் எத்தனாகாமலிருக்க,
எனக்குள் ஒரு சித்தன் என்னை எச்சரிக்க,
சமயம் நோக்கிக் காத்திருக்கேன்.
காற்றில் கரைந்து ஆன்மா போக,
நெருப்பில் இவ்வுடல் ஆகுதியாக,
நீ முன்னேற பிறரை மூடமாக்காதிரு நெஞ்சே, என்று சகல உலகும் அதிர சகலமானோர் காதுகளிலும் இசையாய் நற்பண்புகளை எடுத்துரைக்க ஒப்பற்ற ஓதுவதற்கரிய பரம்பொருள் நிச்சயம் வழிகாட்டுமென்ற நம்பிக்கையில் கரைகின்ற ஒவ்வொரு நாளும், உலகத்தோடு ஒத்துப் போ, எங்களோடு சேர்ந்திடு, தனியாளாய் உன் என்ன செய்ய முடியுமென்று கற்களாய் சொற்களை ஆயுதமாக்கி என் மீது வெறுப்பை உமிழ்கின்றன.
ஆயினும் பொறுமையால் வென்றிட பொறாமை ஒழிந்திட இறையிடத்து மனதால் இறைஞ்சி நிற்கிறேன் அருள் வேண்டி.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-May-19, 9:58 am)
Tanglish : enathu venduthal
பார்வை : 637

மேலே