என் பிரியமுள்ள துரோகிகளுக்கு ===================================

வணக்கம் என் துரோகிகளே..
=
என்னை உங்கள் துரோக
உளிகொண்டு செதுக்கிச் சிலையாக
நிற்க விடும்போது
மலைத்துப்போகிறேன் நான்,
=
உங்கள் துரோக நெருப்பில்
நீங்கள் என்னை புடம்போடுகையில்
தங்கமாய் சொலிக்கின்றன
என் அனுபவ ஆபரணங்கள்
=
என் முதுகுக்குப் பின்னிருந்து
குத்தும் வேளைகளில் உங்களால்
தாமதமாகவேனும்
புரிந்துகொள்ள நேர்கிறது
நட்பு , உறவு இரண்டினதும்
சுயநல சுயரூபம்.
=
நீங்கள் காலைவாறிய
சந்தர்ப்பங்கள் எல்லாம் என்னை

சொந்தக்காலில் நிற்கத்
துணை செய்த தோழர்களாகின.
+
நீங்கள் எனக்குக்
கற்பித்துக் கொடுத்தப் பாடங்கள்
எந்தப் பள்ளிக்கூடமும்
கற்பித்துக் கொடுத்ததில்லை
=
உங்கள் துரோகப் பாறை
என் மீது விழ விழ நசுங்கிப்போகும்
நான் தன்னம்பிக்கை என்ற வேர்களால்
ஒரு கொடியைப்போல பாறைக்குள்ளும்
படர்ந்து வெளியேறி பூக்கிறேன்
=
என் பூவில் தேன்குடித்துச்
சிறகடித்துக் கொடுக்குளால்
கொட்டிவிடக் காத்திருக்கும்
குளவிகளே.. கொட்டுங்கள்
தேள்களின் கொட்டுகளுக்கே
தோள் கொடுத்தவனுக்கு
குளவிகளின் கொட்டுகள்
கொசு கடித்ததற்குச் சமம்
எனவே கொட்டுங்கள்.. நீங்கள் கொட்டுங்கள்.
=
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Jun-19, 2:08 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 365

மேலே