செல்லையா ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள பதிற்றுப்பத்து நூலுக்கான கபூரணசந்திரனின் மதிப்புரை-----ஊன்றல்களும் சறுக்கல்களும்

பழந்தமிழ் இலக்கியங்களான சங்கச்செய்யுட்களில் பத்துப்பாட்டு என்னும் தலைப்பில் பத்து நீண்ட பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அயல் நாட்டினர் குறுந்தொகை நற்றிணை போன்றவற்றின் செய்யுட்களை மொழி பெயர்ப்பதில் காட்டிய ஆர்வத்தைப் பத்துப் பாட்டுச் செய்யுட்களை மொழி பெயர்ப்பதில் காட்டவில்லை. இதற்கு அகக்காரணங்களும் இருக்கலாம், புறக்காரணங்களும் இருக்கக்கூடும், புறக்காரணம் என்பது பாட்டின் நீளம், தனது இயலாமை போன்றவற்றை ஆசிரியன் கருதுவதாகும். அகக்காரணம் என்பது நூலின் இலக்கியத் தன்மை குறித்த கருத்துகளாகும். இலக்கியாசிரியர் பலர், பத்துப்பாட்டின் நீண்ட பாக்களை விடக் குறுந்தொகை, நற்றிணை போன்ற தொகைநூல்களின் சிறுபாக்களே சுவை நிறைந்தவை என்று கருதுகின்றனர்.

oondralgalum sarukkalgalum2எட்டுத்தொகையில் பரிபாடல்கள்தான் நீளமானவை. அவையும் குறைவாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்புத் திறன் வாய்த்திருந்த ஏ.கே. ராமானுஜன் போன்ற மொழிபெயர்ப்பாளர்களும் ஏனோ பத்துப் பாட்டில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை (The Poems of Love and War என்னும் அவர் நூலில் திருமுருகாற்றுப்படையிலிருந்து மட்டுமே சில பகுதிகள் மொழிபெயர்த்துச் சேர்க்கப்பட்டுள்ளன). ராமானுஜன்கூட, பத்துப்பாட்டின் பிற பகுதிகளை விட்டு திருமுருகாற்றுப் படையின் பகுதிகளைத் தேர்ந்தெடுத்ததற்கு அதன் இலக்கியச் சிறப்பு மட்டுமே காரணமன்று. முருகன் குறித்த அதன் பொருண்மையும் இன்னொரு காரணம்.

தமிழறிஞர்கள், குறிப்பாகச் சைவசித்தாந்த மரபில்வந்த தமிழறிஞர்கள்தான் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்பில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இவர்களுள் ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை, ஜே.எம். சோமசுந்தரம்பிள்ளை போன்றோர் அடங்குவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.வி. செல்லையாவும் இப்பட்டியலில் சேர்வார். ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை பத்துப்பாட்டில் ஐந்தினை மட்டுமே மொழிபெயர்த்தார். ஜே.வி.செல்லையா, பத்துப்பாட்டுகளையுமே The Ten Tamil Idylls என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இன்று கிடைக்கும் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புகளில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது யாழ்ப்பாணம் ஜே.வி. செல்லையாவின் மொழி பெயர்ப்பைத்தான். எளிய நடையும், தக்க நிகரன்களை (பொருத்தமான சொற்களை)க் கையாளலும், தொடரமைப்பு சிதையாமல் ஆற்றொழுக்காக மொழிபெயர்த்துச் செல்லுதலும், ஆங்கிலத்தின் எளியகவிதை (blank verse) யாப்பினைத் திறம்படக் கையாளலும் அவரது சிறப்புகள். செல்லையாவின் மொழிபெயர்ப்பு எளியதாகவும், கவிநலம் கொண்டதாகவும் அமைந்திருப்பது அதன் முக்கியச் சிறப்பு. சங்க இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் ராமானுஜனுக்கு நல்ல முன்னோடி என்னும் சிறப்பினைப் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்பைக் கொண்டு செல்லையாவுக்குத் தரலாம்.

செல்லையா மிகக் கடினமான வார்த்தைகளையோ தொடரமைப்புகளையோ தேடுவதில்லை. அது மட்டுமல்ல, சிறுசிறு வாக்கியங்களாக மூலப்பகுதியைப் பிரித்துக்கொண்டு தமது மொழிபெயர்ப்பை அமைக்கிறார். சான்றாக, இங்கு பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையின் மொழிபெயர்ப்பை நோக்கலாம். அதில், அரசியின் மாளிகைக்குக் கதவுகளை எவ்விதம் அமைக்கிறார்கள் என்பதை விளக்கவரும் பகுதிகளை எவ்விதம் மொழிபெயர்க்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

பருஇரும்பு பிணித்துச்

They make huge folding doors with bolts secure,

And rivet them with massive, strong iron bands.

செவ்வரக்குரீஇத்

They paint these doors with bright red lac.

துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு

நாளடு பெயரிய கோளமை விழுமரத்துப்

They cross/ The door-posts tall with beams that bear the name/ Of a star.

போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்

தாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற்

Upon it water lillies fresh/ Are carved, and joined with these on either

side / Are female elephants.

கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து

This is the work/ Of men well skilled who could make gapless joints.

ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை

The posts are smeared with ghee and mustard white.

இப்படிப் பிரித்து மொழிபெயர்ப்பது பலசமயங்களில் மூலத்தைவிட நீளமாகச் செல்வதாகவும், கவிச்சுவையின்றியும் தோன்றினாலும், முக்கியமான இடங்களில் உயிரோட்டத்துடன் அமைந்து கவிதையைக் காப்பாற்றுகிறது என்று சொல்லலாம்.

தக்க சொற்களை மொழிபெயர்ப்பில் கையாளுவது மிகமுக்கியம். நைடா போன்ற இலக்கண, மொழிபெயர்ப்பு அறிஞர்கள் நிகர்மையைக் குறித்தே மிகவும் கவலைப் பட்டனர். (மூலமொழியின் ஒரு சொல்லுக்குத் தகுந்த சரியான இலக்கு மொழிச் சொல்லை அமைப்பது நிகர்மை-ஈக்வலன்ஸ் எனப்படும்.) செல்லையா தக்க நிகரன்களைத் தேடிக் கையாள்வது சிறப்பாக இருக்கிறது. சான்றாக, மதலைப்பள்ளி என்ற சொல்லை cornice என மொழிபெயர்ப்பதைக் காட்டலாம்.

யாவற்றினும் மேலாக, blank verse அமைப்பை மிக நன்றாகக் கையாண் டிருக்கிறார் செல்லையா. இவையெல்லாம் மொழிபெயர்ப்பில் ஊன்றியவர்கள் மட்டுமே செய்யத்தக்கவை. பாராட்டுக்குரியவை.

ஆனால், சிக்கலற்ற மொழிபெயர்ப்பு என்று எதுவும் கிடையாது. கவிதையை மொழிபெயர்க்க இயலாது என்றும் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். கவிதையின் பொருள் ஏறத்தாழ இலக்குமொழியில் விளங்கித்தோன்றுமாறு மொழிபெயர்க்கலாமே தவிர, அப்படியே அதன் வடிவத்தைச் செய்துதர இயலாது. பொதுவாக நீண்ட கவிதையை மொழிபெயர்க்கும்போது எதிர்கொள்ளவேண்டிய நான்குவிதச் சிக்கல்களை இங்கு நெடுநல்வாடை கவிதைப்பகுதியை வைத்து எடுத்துக்காட்டலாம்.

oondralgalum4பத்துப்பாட்டின் மொழிபெயர்ப்பில் முதல் சிக்கலாகத் தோன்றுவது பாட்டின் அமைப்பு. பழங்காலத் தமிழ்ப் புலவர்கள், ஓரிரு வாக்கியங்களைப் பல அடிகளாக அமைப்பது வழக்கம். இதற்குத் தமிழின் எச்ச அமைப்பு நன்கு துணைபுரிகிறது. சான்றாக, பத்துப்பாட்டில் சிறுபாட்டாகிய முல்லைப்பாட்டு, 103 அடிகளைக் கொண்டிருந்தாலும், ஒரே ஒரு வாக்கியத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. மொழிபெயர்க்கும்போது ஓரடிக்கு ஓரடி என நேராகச் செய்ய முடியாது. அர்த்த அலகுகளுக்கேற்ப-எச்சத்தொடர் களுக்கேற்பத்தான் மொழிபெயர்க்கமுடியும். எப்படி அர்த்த அலகுகளாகப் பிரிப்பது, எப்படி எச்சத் தொடர்களை மொழிபெயர்ப்பது என்பதுதான் பத்துப்பாட்டின் மொழிபெயர்ப்பில் முதல் சிக்கலாக உணரப்படக்கூடும்.

நெடுநல்வாடை 188 அடிகளைக் கொண்டிருக்கிறது, ஆனால் இரண்டே இரண்டு வாக்கியங்களைக் கொண்டிருக்கிறது.

பத்துப்பாட்டுச்செய்யுட்களின் அமைப்பு தன்னிச்சையானதல்ல. அதாவது அவற்றின் அமைப்பு, பொருளுக்கேற்ப நன்கு சிந்தித்துக் கவிஞர்களால் அமைக்கப் பட்டதாகும். நெடுநல்வாடையிலும் அப்படியே. கூதிர் நின்றற்றாற் போதே என முதல்வாக்கியத்தையும், பாசறைத் தொழில் இன்னே முடிகதில் அம்ம என இரண்டாவது வாக்கியத்தையும் கொண்டு இதனை இரு பகுதிகளாக நக்கீரர் பிரித்துவிடுகிறார். முதல் வாக்கியம் முழுவதும் நெடிய வாடையின் இயல்புகளை எடுத்துரைப்பது. பனிக்கால நிகழ்வுகளையெல்லாம் வருணிப்பதாக, ‘வையகம் பனிப்ப வலனேர்பு’ என்ற தொடங்கி, ‘கூதிர் நின்றன்றாற் போதே’ என்று முடிவது முதல் வாக்கியம் (முதல் 72 அடிகள், 72ஆம் அடியின் மூன்றாம் சீர்வரை). இதன் எழுவாயும் பயனிலையும் சேர்ந்தே உள்ளன. ‘போது கூதிர் நின்றற்றால்’ என்று கூட்டவேண்டும். பிற யாவும் இவ்வாக்கியத்திற்கு இணைப்பாக வரும் அடைகள்.

இன்னொரு வாக்கியம், 72ஆம் அடியின் நான்காம் சீராகிய ‘மாதிரம்’ என்பது தொடங்கி, இறுதியடியின் ‘பாசறைத் தொழிலே’ என முடிகிறது. இவ்வாக்கியத்தின் எழுவாய் தனியாகவும், பயனிலை தனியாகவும் பிரிந்து நிற்கின்றன. ‘பாசறைத் தொழிலே’ (அடி 188) – ‘இன்னே முடிகதில் அம்ம’ (அடி 165) எனக் கொண்டுகூட்ட வேண்டும். இரண்டாவது வாக்கியம் முழுவதும் நல்வாடை-என்பதற்கான காரணத்தை முன் வைக்கிறது.

இன்னும் தெளிவாகச் சொன்னால், முதல் வாக்கியம் கூதிர்காலப் பின்னணியைத் தருகிறது (முதல், கருப் பொருள்கள்). இரண்டாவது வாக்கியம் தலைவி தலைவனின் செயல்களைச் சொல்கிறது (உரிப்பொருள்). இந்த அமைப்பைச் சிதைக்காமல் மொழிபெயர்ப்பது இயலாது என்பது மொழிபெயர்ப்பின் முதற்குறை.

பொதுவாக, தமிழில் எச்சங்கள் அமையுமிடங்களில் வாக்கியங்களைப் பிரித்து, ஆங்கில மொழிபெயர்ப்பை உருவாக்குவதுதான் எவரும் எளிதில் இங்கு செய்யக் கூடியது. எச்சப்பகுதிகளைத் தனிவாக்கியங்களாகவோ, relative clause என்னும் தொடர்களாகவோ அமைக்கலாம். நெடுநல்வாடையில் முதல் வாக்கியத்தில் பன்னிரண்டு எச்சப்பகுதிகளும், இரண்டாவது வாக்கியத்தில் பதினான்கு எச்சப்பகுதிகளும் உள்ளன. அவையும் நீண்டு அமைவதால் அவற்றையும் நேராக மொழிபெயர்ப்பது கடினமாக உள்ளது. எனவே இன்னும் சிறு சிறு தொடர்களாகப் பிரித்துக்கொள்கிறார் செல்லையா. அவரது நெடுநல்வாடை ஆங்கில மொழிபெயர்ப்பில் 92 வாக்கியங்கள் உள்ளன.

இரண்டாவது சிக்கல், பாட்டின் கூற்று அல்லது நோக்குநிலை பற்றியது. ஒரு பாட்டு-குறிப்பாக நெடும்பாட்டு, எந்த நோக்குநிலையில் சொல்லப்படுகிறது என்ற நினைவு முக்கியமாக மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கவேண்டும். ‘‘வானம் மழை பொழிய, போது கூதிர் நின்றது; புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு இன்னா அரும்படர் தீர விறல்தந்து வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழில் இன்னே முடிக’‘ என்பது பாட்டின் செய்தி. (அதாவது, கடுமையாக மழைபொழிந்ததால், எங்கும் குளிர் மிகுந்து நின்றது. அதனால், போருக்குச் சென்றிருக்கும் பாண்டிய அரசனின் மனைவி துக்கத்துடன் இருக்கிறாள். அவளுடைய துயரம் தீரும்படியாக, வேந்தன் பல அரசர்களோடு முனைந்து செய்கின்ற பாசறைத் தொழிலாகிய போர், நல்லபடியாக முடிவதாக என்பது நெடுநல்வாடையின் செய்தி.)

இதனை யார் கூறுவதாகக் கொள்ளலாம்? யாவற்றையும் நோக்குகின்ற ஒரு அந்நியன் (an omnipotent voyeur) கூறுவதாகவே கொள்ளஇயலும். அவன் எங்கும் குளிர்காலம் பரவிக்கிடப்பதையும் காண்கிறான், வேந்தன் பாசறையில் உறங்காமல் தொழிற்படுவதையும் காண்கிறான், அரசி அரண்மனையில் தன் கட்டிலுக்கு மேல் தீட்டப்பட்டுள்ள உரோகிணி நட்சத்திரத்தை நோக்கியவண்ணம் பெருமூச்செறிந்தவாறு இருப்பதையும் அவளைச் செவிலியர் தேற்றுவதையும் காண்கிறான். அவன் நோக்கிலேயே பாட்டு சொல்லப்படுகிறது. ஆனால் ஜே.வி. செல்லையா, நோக்குநிலையைப் பற்றிக் கவலைப் படவில்லை. பாட்டைக் கிடந்தவாறே மொழிபெயர்த்துச் செல்கிறார்.

புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு

இன்னா அரும்படர் தீர விறல்தந்து

இன்னே முடிகதில் அம்ம

என்ற சொற்களை மட்டும் ஒரு செவிலியின் வேண்டுகோளாகக் கூறிவிடுகிறார்.

Her maid prays: “Mother, grant him victory great,

And end the war, and thus remove the thoughts

That greatly pain the loving, lonely wife.”

என்று அமைக்கிறார். உண்மையில் இது செவிலி வேண்டுவது அல்ல. பார்வை யாளனாகிய கவிசொல்லியின் கூற்றுதான். செவிலிகள் வேண்டுகின்ற செய்தி, கவிக்கூற்றாக முன்னாலேயே சொல்லப்பட்டுவிடுகிறது.

நரைவிராவுற்ற நறுமென் கூந்தல்

செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்

குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி

இன்னே வருகுவர் இன்துணையோர் என

உகத்தவை மொழியவும் ஒல்லாள்

என வரும் பகுதியைக் காண்க.

மூன்றாவது சிக்கல், பாட்டின் முக்கிய உள்ளுறை அர்த்தங்கள் காணாமற் போய்விடுவது. இது ஆசிரியரின் குறையல்ல. பொதுவாக மொழிபெயர்ப்பினால் ஏற்படுவது. இதில் மொழிபெயர்ப்பாளரின் பங்கேற்பு ஓரளவுதான் இருக்கிறது.

சான்றாக, நெடுநல்வாடையில் பெருமழைபொழிவது நின்று, சிறுதூறல்கள் மட்டும் காணப்படும் நிலையும், அத்துடன் குளிர் நிலவுவதும் வருணிக்கப்படுகின்றன. இந்தப் புறவருணனை, பாட்டின் அக அமைப்போடு தொடர்புடையது. தலைவன் பெரிய (முக்கியமான) போரினை முடித்துவிட்டான், இப்போது இறுதியாகச் சில சில்லறைச் சண்டைகள் மட்டுமே இருந்துகொண்டிருக்கின்றன, அவற்றின் விளைவான குளிர் (வெறுப்பு) நிலவுகிறது என்பது கருத்து. வாடைக்காற்றும், சிறுதூறலும் நிற்கும்போது, போரும் முடிந்துவிடும், தலைவன் தலைவி இணைவும் ஏற்படும். யாவும் ஒருங்கிசைவில் (harmony) முடியும் என்பது பாட்டின் கருத்து.

அதேசமயம், புதல்கள் (புதர்கள்-சிறுசெடிகள்) மலர்ந்திருப்பது போன்ற இயற்கையின் சிறுசெயல்கள் இடையறாமல் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. பெரும் அளவில் எங்கும் நிகழும் இயற்கையின் சிறுசிறு பணிகள் என்றும் தடைப்படாமல் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்பதன் அடையாளம் இது. இம்மாதிரி விஷயங்களை ஆசிரியர் தமது குறிப்பில் எடுத்துரைக்கவேண்டும். ஏ.கே. ராமானுஜன் சங்கப் பாக்களில் கவனிக்கவேண்டிய சில அடிப்படை விஷயங்களைத் தமது நூலின் பின்னுரையில் குறிப்பிடுகிறார். அதுபோல ஜே.வி. செல்லையாவும் செய்திருக்கலாம். ஆனால் அவர் தமது முன்னுரையில் அடிப்படையான பின்னணிச் செய்திகளையும் உள்ளடக்கத்தையும் மட்டுமே எழுதிச் செல்கிறார், பொருள்கோள் பற்றி அல்ல.

நான்காவது, சிறிய கவிதைகளை மொழிபெயர்க்கும்போதும் உண்டாகக்கூடிய சில்லறைக் குறைகளின் தொகுதி எனலாம்.

சில இடங்களில் தேவைக்கும் மிகுதியாக விரித்துரைத்தல்,

சில இடங்களில் குன்றக்கூறல்,

சில இடங்களில் தவறான மொழிபெயர்ப்புகள்,

சில இடங்களில் போதாத மொழிபெயர்ப்பு

-இவை எந்த மொழிபெயர்ப்பாளருக்கும் ஏற்படக்கூடிய சறுக்கல்கள். இவை செல்லை யாவிடமும் உள்ளன. குறிப்பாக ஒரே சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் வருமிடங்களில் தவறான அர்த்தத்தைக் கொள்ளுதல் போன்ற குறைகள் எவர்க்கும் நேரும். ஆனால் கவித்துவம் இவற்றையெல்லாம் ஓரளவு ஈடு செய்துவிடவல்லது.

தவறான மொழிபெயர்ப்புக்கு ஓர் உதாரணத்தைக் காண்போம்.

தசநான்கெய்திய பணைமருள் நோன்றாள்

இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்

பொருதொழி நாகம் ஒழியெயிறு அருகெறிந்து

சீருஞ்செம்மையும் ஒப்ப வல்லோன்

கூருளிக் குயின்ற ஈரிலை இடையிடுபு

என்ற பகுதியை ஆசிரியர் மொழிபெயர்க்கும்போது,

There is a forty years’ old rounded bed

Constructed with smooth-chiselled tusks that once

Belonged to tuskers huge with mighty legs

Resembling drums and shapely foreheads grey,

Renowned in war, which were in battle killed.

எனச் செய்கிறார். மேலே எடுத்துக்காட்டப்பட்ட செய்யுட்பகுதிக்கு, ‘‘சிறந்தஅழகையும், புள்ளிகள் நிறைந்த நெற்றியையும், தனது கால்களை முரசென்று நினைத்துப் பிறர் மருளும் தன்மையையும் கொண்ட, நாற்பதாண்டு நிரம்பிய யானை போரில் ஈடுபட்டுத் தனது கொம்புகளை இழந்தபோது, அக்கொம்புகளைக் கொண்டு கட்டிலின் பக்கங்களை இணைத்தனர்’‘ என்பது பொருள். ஆனால் ஆசிரியர், நாற்பதாண்டு பழமையான, வட்டமான கட்டில் என்று மொழி பெயர்த்துவிடுகிறார்.

ஓர் ஆசிரியர் தமது யூகங்களை எவ்வளவுதூரம் மொழிபெயர்ப்பில் பயன்படுத்த இயலும்? அர்த்தப்பெயர்ப்புக்கு இடைஞ்சல் செய்யாத அளவிற்குப் பயன்படுத்தலாம். அது சுதந்திரமான மொழிபெயர்ப்பு என்பதிலிருந்து தழுவல் என்ற அளவுக்குச் செல்லக் கூடாது என்பதை ஆசிரியர் மனத்திற்கொண்டால் சரி.

நான் பார்த்தவரை இம்மாதிரிச் செயல்கள் எந்த மொழிபெயர்ப்பிலும் குறைவற உள்ளன. சான்றாக, ‘புலம்பெயர் புலம்பொடு கலங்கி’ என மூலத்தில் வருகிறது.‘Distressed, These lonely-feel in leaving wonted fields’என்பது எங்கே பாட்டில் நேராக இருக்கிறது? அரசன் புலம் பெயர்வதால், அரசி புலம்பினாள் என்பதற்கு அவளது தனிமை காரணம் என்பது ஆசிரியரின் உட்கோள். ‘மாடமோங்கிய மல்லல் மூதூர்’ என்பதற்கு, ‘ÔIn an ancient town that’s rich in mansions high ‘ என்பது பெயர்ப்பு. ancient town என்பது ஆசிரியரின் சேர்க்கைதான். எந்த மொழிபெயர்ப்பிலும் விடுபட முடியாத ஒரு குறை இது என நினைக்கிறேன்.

இன்னொரு விஷயம், ஒரு சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கும்போது பெயர்ப்பாளர் எதைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது. இரண்டு சிறு சான்றுகளைக் காணலாம்.

மூலப்பிரதியில் ‘கொடுங்கோற்கோவலர்’ என்று ஒரு தொடர். கொடும்- என்பதற்கு கொடிய, வளைந்த என இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ‘வளைந்த தடியை உடைய கோவலர்கள்’ (இடையர்கள்) எனப்பொருள் கொள்வது சிறப்பாக அமையும். ஆனால் ஆசிரியர், ‘herdsmen (who) wield their cruel wands ‘ என மொழிபெயர்க்கிறார்.

இதேபோல, ‘பைங்காற்கொக்கு’ என்ற தொடர் வருகிறது. பை(ம்)-(பச்சை) என்ற அடைக்குத் தமிழில் பசுமையான(green) என்ற அர்த்தமும், இளமையான, முதிராத, பக்குவம் பெறாத என்ற அர்த்தங்களும் உள்ளன. பச்சைக்குழந்தை என்பதை யாரும் green child எனப் பெயர்ப்பதில்லை. எனவே பைங்காற்கொக்கு என்பதற்கு முதிராத, இளம் கால்களையுடைய கொக்கு என்றும் பொருள் கொள்வது சிறப்பு, பச்சைநிறக் கால்களை உடைய கொக்கு என்றும் பொருள்கொள்ளலாம். செங்காற்புறவு என்பதற்கு வேறுவிதப் பொருள் சொல்லமுடியாது. சிவந்த கால்களை உடைய புறா என்றுதான் கூறமுடியும். செங்காற் புறா என்று பின்னர் வருவதை நினைத்தோ என்னவோ, ஆசிரியர் பைங்காற்கொக்கு என்பதற்கும் பச்சைநிறமான கால்களை உடைய கொக்கு என்று மொழிபெயர்க்கிறார்.

மேலே அவரது மொழிபெயர்ப்புத்தன்மையை எடுத்துக்காட்டிய பகுதியிலும்,

ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை

என்ற அடி,

The posts are smeared with ghee and mustard white.

என்றாகிறது. நெய் என்றால் ஆநெய் (ghee), oil (இன்றைய பேச்சுமொழியில் எண்ணெய்) என்ற இரு அர்த்தங்களும் உண்டு. இங்கு oil என்ற மொழிபெயர்ப்புதான் பொருத்த மானது.

போதா(த) மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு குறை. உதாரணமாக, நெடுநல்வாடையின் முக்கியப்பொருள் வாடைக்காற்று. ‘கடியவீசிக் குன்று குளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்’ என்ற தொடர், ‘The midnight chill is like the cold on hills’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்பில் வாடைக்காற்று பற்றிய குறிப்பே இல்லை. பொதுவாக நள்ளிரவுப்பனி என்று குறிப்பிடப்பட்டு விடுகிறது. இம்மாதிரிப் பெயர்ப்புகளைப் போதா மொழிபெயர்ப்பு எனலாம்.

இதுவன்றிச் சரியில்லாத மொழிபெயர்ப்பு என்பதும் உண்டு. சான்றாக,

மாதிரம், விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்

இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்

பொருதிறஞ்சாரா அரைநாள் அமயத்து

என்ற பகுதி,

The broad sun travelling in its western course

Its widespread rays diffuses everywhere,

And shadows cast by two poles planted straight

Do not incline at noon tide either way.

என்று பெயர்க்கப்படுகிறது. இந்த நெடுநல்வாடைப் பகுதியில் equinox என்பதைக் கண்டறியும் முறை சொல்லப்படுகிறது. (ஈக்வினாக்ஸ் என்பது, இரவும் பகலும் மிகச் சரியாக, சமமான நேரத்தைக் கொண்ட நாள்). மொழிபெயர்ப்பு, When the shadows do not incline என்று இருக்கவேண்டும். அப்படிப்பட்ட நாளை நூலறிபுலவர்கள் கண்டறி கிறார்கள். ஆனால் இங்கு அந்நிகழ்ச்சி ஏதோ தினசரி நடப்பதுபோலக் கூறப்படுகிறது.

செல்லையா மொழிபெயர்த்த பத்துப்பாட்டு தொகுதியிலுள்ள நெடுநல்வாடையின் மொழிபெயர்ப்பினை ஆராய்ந்து ஓரளவு அதன் நிறைகுறைகளை இக்கட்டுரை கூறி யுள்ளது. சறுக்கல்கள் சில இருந்தாலும் பொதுநோக்கில் செல்லையாவின் மொழி பெயர்ப்பு வாசிக்கத்தக்க, இடறாத, பெரும்பாலும் சலிப்பூட்டாத மொழிபெயர்ப்பாக அமைந்திருக்கிறது. அவ்வளவாகச் சறுக்கல்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எனவே தமிழின் நல்ல மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் என்று அவர் தமது பெயரை ஊன்றிக்கொள்கிறார். ஊன்றல் என்ற சொல் இங்கு பொருத்தமற்றதாகச் சிலருக்குத் தோன்றக்கூடும். சமாளித்தல் என்பது இச்சொல்லுக்குரிய பலபொருள்களில் ஒன்று. மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே ஏதோ ஒருவிதத்தில் மொழிபெயர்ப்பாளன் தன் ஆக்கத் திறனை வைத்துச் சமாளிக்கும் செயலாகத்தானே இருக்கிறது?

While you will recognise these to be absurdities, you might be tempted to say that what is intended is quite clear


Share

ஆச்சாரி

============================
சிறகு

எழுதியவர் : ஆச்சாரி (2-Jul-19, 5:59 am)
பார்வை : 41

மேலே