தேவை
=======
தேவையற்றதென ஒதுக்கி வைக்கும்
எதிலும் ஒரு தேவை
பதுக்கி வைக்கப்படுகிறது
=
தேவையற்றவர் என்று
ஓரங்கட்டப்படும் எவரையும்
ஒரு தேவைகருதி
தேட வேண்டியதாகிவிடுகிறது
=
தேவைகருதி ஒருவரிடத்தில்
காத்துக்கிடக்கும் தருணங்களில்
தேவையானவரிடத்தே
தேவையில்லாததெல்லாம்
பேசிகொண்டிருப்பவர்கள்
தேவையற்றவர்களாகிரார்கள்
=
தேவையில்லாதவைகளிடம் இருந்து
தேவையின் தேவையைத்
தேடல் என்பது தேவையாகிறது
=
மரணித்த சிலரின் வாழ்வு
நீண்டிருக்கலாம் என்ற
தேவையாகவும்
மரணித்த பலரின் வாழ்வு
நீண்டுவிட்டதே என்ற
தேவையற்றதாகவும்
தேவையாகி விடுகிறது தேவை
=
தேவையான தேவை என்று
தெளிவாக வரையறுக்க
முடியாததொன்றாகவும்,
தேவையற்றத் தேவை என்று
ஒதுக்கிவைக்க முடியாததொன்றாகவும்
மதில்மேல் பூனையைபோல்
எல்லோர் மனதிலும் ஒரு
தேவை அமர்ந்திருக்கிறது.
=
நாகரீகம் தேவையை
அதிகரிக்க,
அநாகரீகம் தேவையை
புறக்கணிக்க, காலநதியில்
திசைதெரியா படகைப்போல்
பயணிக்கும் தேவைகள்
கரையைத் தொடா அலைகளென
தோன்றவும் மறையவுமென
நீர்க்குமிழிகளாய் உடைகின்றன.
=
மெய்யன் நடராஜ்