இலியிச் பாகம் 7 முதல் 12

பாகம் 7

குமுளியில் இருந்து நெடும்கண்டம் சென்று சற்று நேர பயணத்தின் முடிவில் மண்குத்திமேடு என்ற இடத்தை அடைந்த போது இருள் வீச ஆரம்பித்தது.

இலியிச்சின் தங்கை பார்வதி தன் கணவனோடு இங்குதான் இருக்கிறாள்.

கண்டுபிடிக்க அத்தனை கஷ்டம் என்பது இல்லை. மிக சிறிய ஊர். கணவன் ஏல தோட்டம் ஒன்றில் பணிபுரிய  அவளோ தன் குழந்தைகளை தாத்தா வீட்டில் வைத்து படிக்க வைத்து வருகின்றனர்.

மிக அன்பான உபசரிப்பு. அன்றைய இரவை நான் அங்குதான் கழித்தேன்.
பயண அசதியில் பேசவும் முடியவில்லை.

     இலியிச் என்று அவள் சொல்லவில்லை.
ராமு என்றே சொல்கிறாள்.சௌமியாவை மிக ஆர்வமாக விசாரித்தாள்.

எப்போதும் அவள் கண்ணீரில்தான் அவள் கண்கள் இருந்தது என்று சொன்னால் சரியாக இருக்கும். புட்டு சமைத்து பரிமாறினாள். ராமு இப்போ எங்கே இருக்கான் என்று கேட்டபோது புட்டு உள்ளே இறங்க மறுத்தது.

டார்ஜிலிங்ல...

ஓ...அவட போயாச்சா...எட்டு வருசமாச்சு பாத்தும் பேசியும்...எல்லாம் விதி...புட்டு மதியோ...

உங்கள் திருமணத்தில் ஏதோ பிரச்சனை...
அதனால்தான் இப்படி என்றும் சொன்னார்கள் என்றேன்.

ராமுக்கு என் மீது ரொம்ப பிரியம். இவர் வீட்டில் கொடுத்ததுக்கு மேலும் நகை கேட்க அப்போ இருந்த நிலத்தையும் விற்க வேண்டி வந்தது.


அப்பா மறுத்தாலும் ராமு விடவில்லை. விற்று விட்டோம். அது இருந்தால் இப்போ ராமுவுக்கும் சௌமியா கிடைத்து இருப்பாள் என்ற போது மீண்டும் அழுதாள்.

நான் உடும்பஞ்சோலையில் இருந்தபோது என்னை ஒரு முறை வந்து பார்த்தான்.

இரண்டு வளையல்கள் வாங்கி தந்தான். அன்று போனவன்தான். இப்போ அவனை தேடி நீங்கள் வந்து இருக்கிறீர்கள்.

இது குடும்ப விஷயம் என்பதால் என்னால் அதிகம் கேட்க முடியவில்லை. அவன் எழுதிய ஒரு கடிதம் அவளிடம் இன்னும் இருந்தது. பொக்கிஷம் எனக்கு இது என்றாள்.

இலியிச் தனக்கு தெரிந்து கொஞ்சம் கடிதங்கள் எழுதி இருக்கிறான். அவை காட்டு வெள்ளம் போல் இருக்கும் என்று பைரவேல் சொன்ன நினைவு.

அதை பார்க்கலாமா என்று கேட்டேன். பார்வதி உள்ளே இருந்து கொண்டு வந்தாள். கடல் நீலத்தில் இருந்த பழைய இன்லேண்ட் லெட்டர் அது.

அன்புள்ள பாருக்கு. ராமு எழுதுவது...

....................................................................................

பாகம் 8

நீ நலமா?

நாளைய வாழ்க்கையின் ஒரே ஒரு கனவு என்னவாக இருக்கும் என்று தேடினால் அது திரும்பவும் கசப்பூட்டும் பழைய நெடியை தேடுவதாக மட்டுமே இருக்கும்.

நான் களைத்து போனவர்களுக்கு பின்னால் இருந்து வாழ ஆரம்பிக்கிறேன்.
அவர்கள் தங்கள் சுமையை தங்களுக்குள் ஒளித்து வைத்துக்கொள்ள முயல்கையில்  நான் கடந்து போய் விடுகிறேன்.

நான் அறிவாளி. நல்லவன். நீதிமான். யோக்கியன். சாது. இப்படி என்னை தீர்மானித்த இந்த உலகம் இதையே என்னையும் நம்ப வற்புறுத்துகிறது.


நான் இறுதியில் நம்பி விட்டால் பின் அடுத்த மனிதனிடம் அது ஓடி விடும்.
நாம் இப்படித்தான் ஒழுக்கத்தையும் பகுத்தறிவையும் கற்க வேண்டுமெனில் இதை விட அவலம் வேறு இல்லை.

கொண்டாடப்பட்டவர்களின் தூசிகளில் இந்த உலகம் சிக்குண்டு தடுமாறுகிறது.
போற்றப்பட்டவர்களின் பிறாண்டலில் இந்த மனங்கள் அரித்து போய் விட்டது.

எந்த தீர்மானமும் தீர்வும் இல்லாத நிர்வாணமான ஆன்மாவுக்கு தரப்பட்ட கடும் தண்டனையே இது வரையிலான கல்வியும், பண்பும்,குணங்களும்.

அப்பாவால் என்னை புரிந்து கொள்ள முடியவில்லை. அப்பா என்னை சுமக்க விரும்புகிறார்.

என்னை நானே வெறுக்க என்ன காரணம் என்று பிறர் கேட்டால் இவர்கள் என்னை நேசிப்பதை மட்டுமே காரணமாக கூறுவேன். உண்மையும் அதுவே.

மனிதம் கட்டுப்பாடற்றது. அது ஒழுக்கத்தின் த்ருப்தியிலிருந்தும் தீமையின் ஆவேசத்திலிருந்தும் கௌரவத்தின் பேதை மதிப்பிலிருந்தும் தன்னை விடுவித்து கொள்ள போராடி வருகிறது. இதை சுற்றிக்கொண்டும் வழிபட்டும் அலைவதை வாழ்க்கை என்று இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

நாம் இனி சந்திப்பதாக இருந்தால் அதுவும் நிகழும்.

ராமு.

படித்துவிட்டு பார்வதியிடம் கொடுத்தேன்.

உங்களுக்கு தும்கூர் கஜேந்திரனை தெரியுமா என்று பார்வதி கேட்ட போது வியப்பு மேலிட்டது.

உங்களுக்கு எப்படி தெரியும் பார்வதி?

ஒருமுறை ராமுவை அவர் தேடி வந்தார். பின் இருவரும் அகும்பே சென்று வந்தனர். நீங்கள் அவரை சந்திக்க முடியுமானால் அண்ணன் பற்றிய அநேக தகவல்களை தருவார் என்றாள்.

கஜேந்திரன் தொழில் முறையில் பூண்டு ஏலம் எடுப்பவர். கமிஷன் வியாபாரம். வடுகப்பட்டி சங்கரபாண்டியை கேட்டால் அனைத்து விபரமும் கிடைத்துவிடும்.

கிளம்ப ஆயத்தமானேன்.

___________________________________

பாகம் 9

சங்கரபாண்டி வீட்டில் இல்லை. கமிஷன் மண்டிக்கு போனேன். இருள் பிடித்த கூரைக்குள் சில கோணிகளும் உள்ளி பூண்டின் கனத்த வாசமும் இருந்தது.

பழைய மஞ்சள் பல்ப் ஒளிர ஒரு சாய்வான சேரில் அமர்ந்தோம். அவனுக்கு கஜேந்திரன் கஸ்டமர் என்பது முன்பே எனக்கு தெரிந்த ஒன்றுதான்.

இருவரும் மலபார் பீடியை பற்ற வைத்து கொண்டு அமைதியாக புகைத்தோம்.

ஒருநா பொழுசாயரச்ச அவங்க  ரெண்டு பேருமே வந்தாங்க. கஜா கிட்டே ஆந்திரா சாராயம் இருந்திச்சு. அன்ன ராவு முலுக்க குடிச்சிட்டு கெடந்தோம். அப்போ எலெக்சன் டைமு. டிஎம்கேகாரவுக ஓட்டுக்கு ரவையா சுத்தி கெடந்தப்போ அந்த ஆளு இளியிச்சு போய் மரிச்சு நின்னிக்கிட்டா. நா பொறத்தாலே பிடிச்சு இழுக்கறேன் இழுக்கறேன் லேசுல வரவே இல்ல...

கஜாக்கு தெகப்பு அடங்கலே. என்ன நடக்குதுன்னு ஊருக்காரவுக சுத்தி நின்னுட்டு...இங்கன ஏடிஎம்கே டிம்கே எல்லாம் ஒரு சாதிக்காரகதான்..மாமேன் மச்சாந்தான்... இருந்தாலும் இளியிச்சு என்ன செய்றாருன்னு புரியாத போச்சு.

அவரு பாட்டுக்கு ஏதோ பாட்டு மாரி பாட ஆரம்பிச்சிட்டாரு. வந்த கூட்டத்து மக்காவுக்கு பொறவு என்ன செய்றதுன்னு தெரில... அவங்களும் பாட ஆரம்பிச்சு பொழுது விடுஞ்சு போச்சு...

காலேல கொஞ்சம் தூங்கி கஞ்சிய குடிச்சாரு. கஜா கூட வரியா போவலாம் னு கூப்பிட்டதும் அங்கன வந்து என்ன செய்ய னு கேட்டாரு...

நல்லா பாடுதீய..நான் ரோட்ல நாடகம் கட்ற ஆளுதான் வருவீயளா னு கேட்டதும் சங்கரா நீ என்ன சொல்றே னு கேட்டுச்சு.


மகராசனா போய் வாரும்னு சொன்னேன்.

அப்பறம் இங்கு வரவே இல்லையா?

வரலை...ஆனா ஒரு விசை அந்தாளை தேடிக்கிட்டு  தெய்வசிகாமணின்னு ஒருத்தர் வந்தார்..

யாரு அவர்?

தெரில...திருச்சி பக்கத்து ஆளு.

சங்கரா...இலியிச் பத்தி என்ன நினைக்கிறே நீ ?

அவரு....சொல்ல தெரில...ம்ம்...ஒரு விதத்தில் ராணுவம் அவர்.

இன்னொரு பீடியை வாங்கி புகைக்க ஆரம்பித்தேன். என் மனம் திடீரென பொங்க ஆரம்பித்தது.

வாழ்க்கை உயிர்களுக்குள் எத்தனை காட்சிகளை கொட்டி வைத்திருக்கிறது. நெருங்கும் முன் உடைந்து போகும் ஒரே சாபம்தான் அதை துரத்துகிறது. ஓடுவதை விரும்பாதபோதும் துரத்துகிறது.

நான் சங்கரனிடம் விடை பெற்று கிளம்பினேன்.

______________________________

பாகம் 10

இன்று என்னால் எங்கும் செல்ல முடியாது என்று தோன்றியதும் ஃபின்னிஷ் கவிஞன் பெண்ட்டி சார்கோஸ்கியின் சில கவிதைகளை படிக்க ஆரம்பித்தேன்.

இலியிச்க்கு கவிதைகள் மீது அத்தனை பிரியம் இல்லை. கட்டுரைகள் விரும்பி படிப்பது தெரியும். அதையும் வாசித்தவுடன் மறந்து விடுவான். "படிப்பதே எதையோ மறக்க மட்டும்தான். நான் படித்ததை மறந்து விடுகிறேன்" என்பான். நினைவின் சுமை நான் அல்ல என்றுதான் நினைத்து கொள்வான்.

இலியிச் பள்ளிக்காலத்தில் சிறந்த மாணவன் அல்ல. அதேபோல் வெளியில் சென்று ஆழக்கற்ற அறிவுஜீவியும் அல்ல.


"புத்தகங்களை பார்க்கும்போது மனம் நடுங்குகிறது. நான் அல்லலுறுகிறேன்.
யாரோ என்னை விரட்டுகிறார்கள். என்னை குழப்புவதன் மூலம் அவர்கள் தெளிவதை வெறுக்கிறேன்" என்று சொல்வான்.

சில கடிதங்கள் ஒரு சில டைரி குறிப்புகள் சில திரைப்பட விமரிசனங்கள் இத்தனைதான் அவன் எழுதியிருக்க கூடும் என்று பைரவேல் சொன்னான்.

இன்னும் அவன் வேறு ஏதேனும் எழுதி இருந்தால் அதை கொளுத்தியிருப்பான் என்றுதான் நினைக்கும்படி இருந்தது அவன் மனநிலை சரியில்லாத காலங்கள்

அப்போது மதுரையில் பிரபலமான அந்த சைகோலோஜிஸ்ட் இருந்தார். அரசு கல்லூரியில் பேராசிரியரும் கூட.

மிக கடினமான நேரம் இலியிச்சுக்கு. தன் சுய உணர்வை முற்றிலும் இழந்து தன்னை முழுக்க மறந்தும் போய் இருந்தான்.

இலியிச் தங்கை பார்வதி அப்போது அவன் உடன் இருந்தாள்.

தந்தையின் மீதான வெறுப்பு ஒன்றே அவன் சீர்கெட போதுமான காரணமாக இருந்தது.

இலியிச் நண்பன் மல்லேஷ். அவன் அருகில் இருந்த நேரம் அது. "மனதை மனம் பிரட்டுகிறது" என்பதை தவிர வேறொன்றும் சொல்ல மாட்டானாம் இலியிச்.

மல்லேஷ் அந்த நாட்கள் பற்றி என்னிடம் ஒருநாள் முழுக்க பேசி இருக்கிறான். நான் அவனை பெங்களூரில் சென்று பார்க்கும்போது இதைப்பற்றி சொல்லி இருக்கிறான்.

மல்லேஷ் மதுரையில் பொறியியல் படிக்கும்போதுதான் இத்தனையும் நிகழ்ந்து போயிருந்தது. ஆறு மாதங்கள் அரை விழிப்பில் இருந்தான்.

ஃபென்தடால் மணம் அவன் மூச்சில் கலந்து இருந்த காலம். காஃபியின் நுரையை வெறிக்க பார்த்து கொண்டே இருப்பான் இலியிச் என்று மல்லேஷ் சொல்ல ஆரம்பித்தான்.

"நம் எதிரியின் மீது வெளிச்சம் படும் போதுதான் நமது மகுடங்கள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன" என்ற வாசகத்தை இலியிச் அங்குதான் சொன்னான்.

____________________________

பாகம் 11

டாக்டர் ரபேசனிடம் அடிக்கடி அவன் கேட்ட கேள்வி "எனக்கு கற்று தரப்பட்டதில் நான் யார்? எங்கிருக்கிறேன்? இதை மட்டும் சொல்லுங்கள் போதும்" என்பான்.

அவர் அவனை வரைவதற்கும், விருப்பம் போல் எழுதுவதற்கும் முடிந்த வரை ஊக்கப்படுத்தி கொண்டே இருந்தார்.
"கால்கள் அலையும்போதுதான் மனதால் நிற்க முடியும் டாக்டர். இப்போது எனக்கு எந்த வெளிச்சமும் வேண்டாம். குரல்கள் போதும்" என்று டாக்டரிடம் இலியிச்  சொன்னபோது எனக்கு விபரீதமாக இருந்தது.

வேண்டுமளவு சிகரெட் வாங்கி கொடுத்தேன். இருவரும் ஒரு பார்க்கில் அமர்ந்து புகைத்து கொண்டே இருந்தோம்.

அவன் கைகள் நடுங்கி கொண்டே இருக்கும். கண்கள் எப்போதும் போலவே மலர்ச்சியுடன் இருக்கும்.

சிகிச்சை தீவிரமாக ஆரம்பிக்கும்போது முழு நேரமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டான். எங்கும் செல்ல முடியாது.

குறைந்த அளவு ஷாக் கொடுக்கப்பட்ட தினத்தில் இலியிச்சை யாரும் சந்திக்க வரக்கூடாது என்பதில்தான் என் கவனம் இருந்தது.

தெருக்களிலும் சந்துக்களிலும் சாலைகளிலும் கோணல் மாணலாய் துரத்த துரத்த ஓடப்பட்ட அந்த புலியை ஒரு கும்பல் குற்றுயிராய் ஆக்கிய காட்சியை இன்றும் மறக்க முடியவில்லை.

நாம்தானே அந்த கும்பல் என்று மல்லேஷ் என்னிடம் கேட்டபோது அப்போதும் பதில் சொல்ல முடியவில்லை என்னால்.

இலியிச் தன்னை யாரும் ஏற்றுக்கொள்ள கூடாது என்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தான். அவன் யாரையும் வணங்கி பழகவில்லை. அவமதித்தும் செல்லவில்லை. வேகமாய் கடந்தான்.

"ஒரு நதியை நீர் என்பதாலோ மணல் என்பதாலோ அது எப்போதும் கடல் அல்ல. என்னை உங்கள் ஞானத்தால் ஊதிப்பெருக்க வேண்டாம் என்றுதான் கேட்கிறேன்" என்று சுவரில் எழுதி வைத்ததை டாக்டர் ரபேசன் மிகவும் ரசித்து வாசிப்பார்.

பார்வதியின் அன்பு ஒரு தாய்மைக்கு நிகராக இருந்ததில் மெல்ல மாற ஆரம்பித்தான். அவன் தங்கையின் அருகாமை அப்போது அவன் தேவையாய் இருந்தது. நீ பிறந்திருக்க கூடாது என்று அடிக்கடி அவளிடம் கூறும்போது அவள் உதடுகளை கடித்து தளும்புவாள்.

ஒவ்வொரு மாலையிலும் இலியிச்சை கூட்டிக்கொண்டு  மாசி வீதிகளில் சுற்றி வருவேன். ரபேசன் மாலையில் இப்படி சற்று தூரம் வாக்கிங் செல்ல அனுமதித்தார்.

அப்போது அவன் மனிதர்களை பார்க்கிறானா அல்லது ஏதேனும் யோசிக்கிறானா என்பதை சட்டென்று புரிந்து கொள்ள முடியாது.


ஒருநாள் அப்படி போகும்போது என் கையை அழுத்தி "மல்லேஷ் நான் பைத்தியம் இல்லை. எப்போதும் என்னிடமிருந்து நான் விடைபெற்றுக்கொள்ள மாட்டேன்" என்றான்.

கல்லூரியில் வேலைகள் எனக்கு அதிகம் இருந்ததால் அவனை சந்திப்பது படிப்படியாய் குறைய ஆரம்பித்தது.

அப்போதுதான் ஒருநாள் கார்த்தியும் நானும் அவனை சந்தித்த மாலைக்கு பின் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான் என்ற செய்தி வந்தது. நான் கல்லூரியில் இருந்து உடனே கிளம்ப முடியாத நிலை.

நான் இலியிச்சுடன் இருக்கும்போது உண்மையில் அவனுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதே எனக்கு தெரியவில்லை என்று மல்லேஷ் முடித்துக்கொண்டு சற்றுகழித்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான்.

மழையில் நனைந்துகொண்டே நாங்கள் கிளம்பினோம்.

___________________________________

பாகம் 12

தும்கூர் கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டபோது தான் இப்போது நாகூரில் இருப்பதாகவும் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து மதுரைக்கு வந்துவிடுவேன் அங்கு பேசலாம். இல்லை யென்றால் சேர்ந்தே தும்கூர் செல்லலாம். யோசித்து சொல்லவும் என்று கூறி போனை வைத்து விட்டார்.

தும்கூர் செல்லவே விருப்பப்பட்டேன்.

சாளுக்கியா எக்ஸ்பிரெஸ் ரயிலில் எங்கள் இருவருக்கும் டிக்கெட் பதிவு செய்து கஜேந்திரனிடம் விஷயத்தை சொல்லி விட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து ஆரப்பாளையத்தில் நாங்கள் சந்தித்து கொண்டோம். அன்றுதான் நேரில் பார்க்கிறோம்.

சங்கரபாண்டியை பற்றி விசாரித்து விட்டு பின் நடைபாதை கடையில் டீ குடித்து கொண்டே பேச ஆரம்பித்தோம்.

இலியிச் டார்ஜிலிங்கில் இருப்பதை கஜாவால் நம்ப முடியவில்லை. இறந்து போய் இருப்பான் என்று நினைத்தாராம்.

காமத்தின் அடுத்த பக்கம்தான் மரணம் என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பான். குழந்தையின் வீறிட்ட அழுகையையும் அப்போது அதன் தந்தையின் முகத்தையும் ஒரே சமயத்தில் தன்னால் பார்க்க முடியாது என்பான்.

எப்போதும் ஒரு குடிகாரனாய் இருப்பது மட்டுமே தனக்கு பிரியம் என்றாலும் அது உடலை பாடாய் படுத்துகிறது என்றான்.

தும்கூர் பஸ் ஸ்டாண்டில்  அலைவதும் மார்க்கெட் வீதியில் திரிவதும் இலியிச் விரும்பிய ஒன்று. இங்கு என்னை யாருக்கும் தெரியாது.

என் முழு நிர்வாணம் ஒன்றே நானும் மனிதன்தான் என்பதை இவர்களுக்கு உறுதிப்படுத்தும் என்று இலியிச் சொன்னபோது அவன்  தனது பேண்ட்டை கழற்றவும் தயாராக இருந்தான்.

ஒருவேளை அப்படி இலியிச் செய்திருந்தால் நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள் என்று கேட்டேன்.

அவன் செய்திருந்தால் நானும் வேட்டியை கழற்றி வீசி இருப்பேன் என்றார்.

இலியிச் உங்கள் கூட இருந்த நாட்கள் பற்றி சொல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டேன்.

அதைத்தான் பேசப்போகிறோம். இப்போது பாண்டியன் ஹோட்டல் 'பாரு'க்கு போகலாம் என்று கிட்டத்தட்ட இழுத்து கொண்டு ஓடினார்.

_________________________________

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Jul-19, 12:07 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 40

மேலே