இலியிச் பாகம் 1 முதல் 6

இது நாவலோ கதையோ அல்ல என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

புரிந்து கொள்வதாலும் அல்லது மறுத்து எதிர்வினை செய்வதாலும் என்னால் எந்த பதிலையும் உடனடியாக சொல்லவும் முடியாது. காரணம் என் பயணம் அப்படிப்பட்டது.

நிற்கும் இடத்தில் இருந்து உடனே புறப்பட்டு தரை வழியாகவும் நீர்நிலை கடந்தும் எங்கெங்கோ செல்வதற்கு நான் ஆயத்தமாகி வருகிறேன்.

நான் இத்தனை வருடங்கள் கழித்து அவனை கேள்விப்பட்டு விட்டேன். இப்போது அவன் இருக்கும் இடம் தெளிவாய் தெரிந்து போயிற்று.


தெளிவாய் தெரிந்தபின் வரும் அதே குழப்பங்கள் எனக்கும் வந்தது.

அவன் இன்னும் அங்குதான் இருப்பானா? அங்கு என்ன செய்கிறான்? எப்படி இருக்கிறான்? யாரோடு இருக்கிறான்?

அவன் பெயர் ராமசேஷன். நண்பர் வட்டாரங்களில் இலியிச் என்றுதான் அழைப்பார்கள்.

எனக்கு அவன் நண்பன். அவனுக்கு நான் நண்பனா என்பது தெரியவில்லை. எதுவும் இல்லாத அவனிடம் துயரமும் மகிழ்ச்சியும் கூட இல்லாமல் இருந்தது.

அவனை பற்றியோ என்னை பற்றியோ பேசிக்கொண்டிருந்தால் அது சட்டென்று முடிந்து விடும். ஆக விஷயம் இனி அதுவாக இருக்க முடியாது.

யாரும் இல்லாத ஒரு தேசத்தில்தான் அவன் பிறந்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்து கொள்வேன். அப்படி அவன் பிறக்கவில்லை. சதா உறுத்தி எடுக்கும் உலகில்தான் பிறந்தான்.


நாங்கள் பால்யத்தில் பழக்கம் இல்லை.
இலியிச்'இன் பற்பல நண்பர்களில் சிலர் என் நண்பர்கள். அவர்கள் அவனைப்பற்றி பேசி கொண்டிருக்கும் போது நான் கேட்டு கொண்டிருப்பேன்.

இலியிச்சை அதிகமாய் போனால் நான்கு முறை பார்த்திருப்பேன். இரண்டு முறை பேசுவதை கேட்டிருக்கிறேன். ஒருமுறை கூட சென்றிருக்கிறேன். இதுதான் எனக்கும் அவனுக்கும் ஆன உறவு.

இலியிச் மதுரை புதூர் டீக்கடையில் தரையில் அமர்ந்து ஒவ்வொரு மாத்திரையாக இருபது மாத்திரைகளை விழுங்கி முடித்தபோது இரண்டு டம்ளர் டீயை குடித்து முடித்திருந்தானாம்.

அந்த தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்தபோது சபிக்கப்பட்ட வாழ்க்கையை மீண்டும் தொடர வேண்டி இருந்தது.

பரிசோதித்த மருத்துவர் அவனுக்கு பரிச்சயமான இன்னும் தொடர் சிகிச்சை அளித்து வரும் மனநல மருத்துவர்.

"நீ சாப்பிட்ட மாத்திரைகள் பக்கவாதத்தை மட்டுமே உண்டாக்கும். இறப்பை அல்ல" என்று சொன்னபோது சிரித்தானாம்.

இப்படி என்னென்னவோ மனதுக்குள் இலியிச் பற்றி செதில் செதிலாக காட்சிகள் எனக்கு படமாய் ஓடும்.

ஒன்றுடன் ஒன்று எந்த தொடர்பும் இல்லாமல் சீர் இன்றி ஓட்டமும் நடையுமாக இரைத்து பாயும் காட்சிகள்.

அவன் நூலகத்துக்கு ஒரு நாள் சென்று கொண்டிருக்கும்போது நான் எதிரில் வந்தேன். என் இரு கைகளையும் பற்றிக்கொண்டான். "வா போகலாம்" ஒரே வார்த்தைதான் சொன்னான்.

இருவரும் நடக்க ஆரம்பித்தோம்.
"பாதைகள், வழிகள், இடங்கள், காட்சிகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. கடக்கிறோம் என்பதுதான் வாழ்க்கை".
இதை அவன் என்னிடம் சொன்னபோது மாலை ஆறு மணி இருக்கும். பதினேழு கிலோமீட்டர் தாண்டி வந்திருந்தோம்.


பூமி சன்னமாய் தகித்து கொண்டிருந்த ஒரு மதியத்தில் "உன்னால் வெயிலை பிடித்து நசுக்க முடியுமா" என்று கேட்டான்.

அவனை அறிவுஜீவி என்றெல்லாம் சொல்ல முடியாது. இருந்தும் இலியிச் ஒரு கடுமையான எதேச்சாதிகாரத்தில் தன்னை குழப்பிக்கொண்டு இருக்கிறான் என்று சொல்லிக்கொண்டனர்.


நான் அவன் பற்றிய எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அது எப்போதும் தேவையற்ற ஒன்று. எதையும் யாரையும் தீர்மானிக்க நான் யார்?

_______________________________

பாகம் 2

இலியிச் தன் மது அருந்தும் நேரத்தை திட்டமிடுவது மிகவும் அழகான ஒன்று. நிச்சயமாக மாலையில்தான் குடிக்க துவங்குவான் என்பதை பைரவேல் சொல்லி இருந்தான். இறக்குமதியாகும் ஸ்வீடிஷ் வோட்கா அவனுக்கு பிரியம்.

"மதுவில் ஒழுகிக்கொண்டிருக்கும் ஆன்மா தன்னை மது மூலமே துலக்கி தூய்மை செய்வதை எந்த வழிபாட்டிலும் காண முடியவில்லை" என்பான்.

இலியிச்சின் கண்ணீரை காண முடியாது என்றாலும் அவன் முன் நான் அடக்க முடியாத துக்கத்துடன் இருப்பேன் என்று பைரவேல் சொன்னபோது எனக்கு கொஞ்சம் துக்கமாக இருந்தது.இலியிச் அப்போது என்னவெல்லாம் பேசுவான் என்று துளைத்து கேட்பேன்.

"யாரிடமும் இருக்கும் தவிர்க்க முடியாத உன்னதமான அந்த ஒன்றுதான் மழுங்கியும் போய் இருக்கிறது. அதை மனிதன் தன்னைத்தவிர எல்லாவற்றிலும் தேடிக்கொண்டே இருக்கிறான்" என்பான். அது அறிவா மனசாட்சியா என்று கேட்க ஆசைப்படுவேன். கடும் போதையில் கேட்டேனா என்பதும் தெரியவில்லை என்றான் பைரவேல்.

நான் கிடைத்தவரையில் யோசித்து பார்ப்பேன். இலியிச் ஒரு கனமான பாத்திரம் அல்ல.

நிறைய விரிசல் விட்ட ஒரு கண்ணாடி. அவன் தன்னை ஒரு புதிர் போல் காட்டி கொள்வதை ரசிக்க மாட்டாதவன்.
"புத்தகங்கள் வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும். ஆனால் வாழவிடாது" என்று சொல்லவே தான் நிறைய படித்து வருவதாகவும் சொல்லி இருக்கிறான்.

'மனசாட்சி ஒரு புராதன குறியீடு. கீழ்த்தரமான நம்பிக்கைகளை உதறிவிட்டு கீழ்த்தரமான ஆசைகளுடன் போராடிக்கொண்டே இருக்கும் பாஷை. நாம் அவைகளின் இவர்கள் மட்டுமே' என்று பைரவேலுக்கு சொல்லி இருக்கிறான்.


ஒருநாள் வாடை காற்றில்  மது அருந்த சென்றேன். அன்று மெல்லிய தூறல். நான் "இலியிச் வாழ்க்கையை பற்றி என்ன நினைக்கிறாய்" என்று கேட்டபோது 'வாழ்க்கை உன்னைப்பற்றி என்ன நினைக்கிறது' என்று கேட்டான்.

நான் மௌனமாகி குடிக்க ஆரம்பித்தேன். எங்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் அன்று அத்துடன் முடிந்தது.

பைரவேல் சென்னையில் ஓர் பேராசிரியர் பணியில் சேர்ந்த பின் இலியிச் ஒரிரு முறை போய்  பார்த்து விட்டு வந்திருக்கிறான் என்பதும் தெரிந்தது.


_______________________________________

பாகம் 3

டார்ஜிலிங் அருகில் சொனடாவில் ஓரிரு மைல்களுக்கு அப்பால் ஒரு கிராமத்தில் தமிழர் ஒருவர் வீட்டில் இலியிச் இருப்பதாக பைரவேல்தான் சொன்னான்.

இதை சொன்னவுடன் நான் அங்கு கிளம்பி செல்ல முடிவு செய்தேன். ஆனால் என் வீட்டின் நிலை அனுமதிக்கவில்லை. போகாது இருக்கவும் மனம் ஏற்கவில்லை.
கொஞ்சம் தனியாக இருக்க விரும்பி தேனி பஸ் ஸ்டாண்ட்க்கு சென்றேன்.
புறப்பட தயார் நிலையில் இருந்த கோட்டயம் பஸ்சை பார்த்ததும் அங்கே செல்வதற்கு மனம் பரபரத்தது.

அப்போதுதான் போடி பஸ்ஸும் வந்தது. அதில் ஏறி அமர்ந்து விட்டேன். அங்கு எனது பேராசிரியர் இருக்கிறார். இலியிச் அவரிடம் முன்னமே தொடர்பு கொண்டவன். கொஞ்ச நேரம் அவரோடு பேசிக்கொண்டிருக்க மனம் இழைந்தது.

போடி. சுப்பராஜ் நகரில் அவர் வீடு. வழக்கம் போல் அவர் மனைவி ஹார்லிக்ஸ் போட்டு கொடுத்தார். நான் மனம் உழலும் போதெல்லாம் இங்கு வந்து விடுவேன். இன்றும் அப்படித்தான்.

"எத்தனை முறை வாழ்ந்தாலும் கோணல் மாணலாய் வாழ்வதற்கு மனிதன் அலுப்பதே இல்லை" என்று இலியிச் சொல்வான்.

பேராசிரியர் வரலாற்றுத்துறை சார்ந்தவர். தி.க வீரமணியின் அதீத ரசிகர். அதே சமயம் இறை நம்பிக்கை கொண்டவர்.
எப்படி சார் இந்த இரண்டு தடத்தில் போக முடிகிறது என்று கேட்கும்போது ஒரு டாக்டர் எப்படி ஏன் கடவுளை நம்புகிறார் என்று கேட்டு இருக்கிறாயா என்று கேட்டார்.

அவரிடம் சொனடா செல்ல விரும்பியதை கூறியதும் சற்று யோசனையில் ஆழ்ந்தார். முதலில் நீ உடுமலைப்பேட்டை செல்ல முடியுமா என்று கேட்டதும் அது எனக்கு முடியும் சார் என்றேன்.

அப்போ சௌமியாவை பார்த்துவிட்டு வா. பிறகு டார்ஜிலிங் செல்லலாம் என்றார்.

சௌமியாவா?...யார் சார் அது?

ராமஷேசனின் காதலி. இப்போது தனியேதான் இருக்கிறாள். சென்றமாதம் அவளோடு பேசினேன். உனக்கு ஏதேனும்  தகவல் கிடைக்கும் என்றார்.

எனக்கு இலியிச்சை உடனே பார்க்க வேண்டும் சார் என்றேன்.

சற்று மௌனமாக இருந்தோம். நேற்று பிரெஞ்ச் புரட்சி பற்றிய சில புத்தகங்கள் வாங்கினேன் பார்க்கிறாயா என்று கேட்டார்.  எட்மெண்ட் பேர்கின் திருந்திய பதிப்புகள்.


இலியிச் வரலாற்றில் ஆர்வம் கொண்டவன். அவன் என்னை வந்து பார்க்கும்போதெல்லாம் ஏதேனும் கேள்விகளுடன் மட்டுமே வருவான்.
ஒருநாள் நாங்கள் சாலையில் செல்லும்போது  "பெரியார் கூடல் அரும்பிய தத்துவஞானி" என்று சொன்னான். இன்று வரை அதை மறக்க முடியாது என்றார்.

ஏன் சார்... இலியிச் எந்த வேலைக்கும் செல்லவில்லை என்று கேட்டேன்.
அவனுக்கு அது சற்றும் பொருந்தி வரவில்லை என்றார்.

சற்று யோசித்து விட்டு "உத்யோகம் புருஷ லட்சணம் என்று சொன்னவனை செருப்பால் அடிக்க வேண்டும் சிவானந்தம். உழைப்பு மானுடத்தை நரகம் நோக்கி நகர்த்தும் செயல். மனிதனுக்காக மனிதன் உழைத்து கொட்டுவதை போல் கரித்து போன செயல் வேறு  ஒன்றும் இல்லை" என்று சொன்னதை நினைவு கூர்ந்தார்.

ராமசேஷன் ஒரு மாணவன் அளவுதான் என்றாலும் எந்த நபரையும் பெயர் சொல்லி மட்டுமே அழைப்பான் என்னை என்றும் சொன்னார்.

சௌமியாவின் அட்ரஸ் தாருங்கள் சார் என்றேன்.

தருகிறேன். இப்போது சாப்பிட்டுவிட்டு போகலாம் நீ என்றதும் எட்மென்டின் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.


__________________

பாகம் 4

இன்று காலையில் பிரான்சில் இருந்து கார்த்தி உசிலம்பட்டிக்கு வந்த செய்தியை தெரிந்து கொண்டதும் அவனை பார்க்க கிளம்பினேன்.

அவனிடம் இலியிச் இன்றைய இருப்பிடம்  பற்றி சொல்ல வேண்டும். நெருங்கிய நண்பனும் கூட. திட்டமிட்டபடி அந்த மதியத்தில் நாங்கள் சந்தித்தோம்.

விசாரிப்புகள் முடிந்த அளவளாவலில் இலியிச் வசிப்பிடம் பற்றி  தெரிவித்த போது சற்று ஸ்தம்பித்தான்.

பதினைந்து வருடம் கூட இருக்கலாம். அப்போது கோரிப்பாளையத்தில் நான் இருந்தேன் என்றான்.

"எந்த மதிப்பீட்டிலும் வாழ்க்கையும் அதன் அகங்காரமும் தன் தொன்மங்களை விட்டு கொடுப்பதே இல்லை. இதை மறுக்கும் மதங்களே அதை அரவணைக்கும் சர்வாதிகாரியாக இருக்கிறது" என்று இலியிச் சொன்னதை மீண்டும் தனக்குள் சொல்லி கொண்டான் கார்த்திக்.

இலியிச் ஒரு கொலையை போல் தன் தற்கொலை முயற்சியை வடிவமைத்த நாளில்தான் நாங்கள் யானைக்கல் அருகே சந்தையை வேடிக்கை பார்த்தபடி பேசிக்கொண்டு இருந்தோம். மல்லேஷ் கல்லூரியில் இருந்தான். அன்று மூவரும் சந்தித்தது கூட ஆச்சர்யத்தில் ஒன்று.

இலியிச் இன்று இரவு நான் என்னை கொல்ல வேண்டும் என்று சொன்னபோது அத்தனை விபரீதமான வார்த்தைகள் அல்ல என்றுதான் தோன்றியது.

அவன் எதையும் நோக்கத்துடன் தொடர்பவன் அல்ல என்பதும் விளைவுகள் மீதான கவனங்களை சரிப்பது மட்டுமே என் வேலை என்றும் சொல்லி கொண்டு இருந்தவன் எப்படி ஆத்மாநாம் மூலம் பாதிக்கப்பட்டான் என்பதை இன்றளவும் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கார்த்தி சொன்ன போது என் மனம் துயரில் தாழ்ந்தது.

ஆத்மாநாமின் கவிதைகளுக்கு அப்பால் அவர் வாழ்க்கை பதட்டத்தின் நுனியில் சற்றும் பின் வாங்காது இருந்தது.

இலியிச் 'இருப்பவர்களே என் அனாதைத்தன்மையை உணர்த்தினர்' என்று சொன்னதாக கார்த்தி சொன்ன போது சௌமியாவின் நினைவு வந்தது.

கார்த்தி..இலியிச்சின் மணம்..?காதல்? என்று ஏதாவது தெரியுமா?

அதுபற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் அவன் தங்கையின் மண வாழ்க்கை இலியிச்சை வெகுவாக பாதித்தது உண்மை என்றும் கூறினான்.

கார்த்தி...அவனை சந்திக்க நான் டார்ஜிலிங் செல்ல இருக்கிறேன் என்றேன்.

ஒருபுறம் மகிழ்ச்சி எனினும் அவன் தனிமை பாதிக்குமோ என்ற அச்சம் எனக்கு. சிலர் நம்மிடமிருந்து விலகி இருப்பது நமக்காக மட்டுமே அன்றி அவர்களுக்காக அல்ல. நீ சந்திக்கத்தான் வேண்டுமா என்று கேட்டான்.

எனக்கு தோணியதால் மட்டுமே அவனை சந்திக்க செல்லவில்லை. அவனை பார்ப்பது மூலம் மீண்டும் என்னை நான் பார்க்க முடியுமா என்று ஆசையில்தான் என்றேன்.

கார்த்தி மௌனமாக இருந்தான்.


____________________________

பாகம் 5

உடுமலைப்பேட்டையில் இறங்கி சௌமியாவை அடைவதில் சிக்கல் இல்லை.

பேராசிரியர் முன்பே தகவல் கொடுத்து விட்டதால் அந்த தனியார் வங்கிக்கு சென்று அவளை பார்த்து விட்டேன்.

சௌமியா வீட்டுக்கு சென்றதும் அந்த உபசரிப்பு மேன்மையாக இருந்தது.

பேராசிரியர்..?

அவரிடம்தான் நானும் படித்தேன். அப்போது அடிக்கடி அங்கு பேராசிரியரை சந்திக்க வரும் இலியிச் என் பிரியத்திற்கு உரிய ஒருவராய் இருந்தார்.

இப்போது அவர் டார்ஜிலிங்கில் இருக்கிறார் தெரியுமா என்றபோது ஆச்சரியப்பட்டாள்.

கேரளா என்றல்லவா நினைத்தேன்.

ஏன்? உங்கள் தொடர்பு முற்றிலும் முடிந்த ஒன்றா...என்று கேட்டபோது சௌமியா பதில் தரவில்லை. மாறாக யோசிப்பதை என்னால் கணிக்க முடிந்தது.

சற்று கழித்து சௌமியாவே பேசினாள்.

அவருக்கு அப்போது வண்ணங்கள் மீது அப்படி ஒரு கவர்ச்சி. மோதிரத்தில் பதித்து இருக்கும் கற்களின் நிறங்கள் கூட பிடிக்கும். அவர் ரசனைகள் எப்போதும் இருந்த இடத்தில் இருந்து பிறந்து மடிந்து போகும் ஒன்றல்ல. அது காலத்தையும் தூரத்தையும் இழைத்து பின்னியது போல் விகாஸிக்கும்.

புன்னகையை போல் ஒன்று இல்லை. அது கலவரங்களை ஒழிக்கும். வரலாற்றில் இன்றளவும் அதுதான் குருதியை ஒற்றி எடுக்கிறது என்பார்.

வாழ்நாளில் ஒருநாள் கூட அறியாத யாருக்காகவும் நாம் காத்திருக்க மாட்டோம். ஆனால் அப்போதும் நம்மை கடந்து செல்லும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

முட்டாள்தனம்தான் உண்மையான ஹைக்கூ. அதை யாராலும் எழுதமுடியாது. இப்படியெல்லாம் அவர் சொல்லிக்கொண்டே போவார் என்றாள்.

ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை? சொல்ல முடியாததா?

அப்படி அல்ல. அவர் தங்கையின் மண வாழ்க்கை இவரையும் பாதித்தது. நான் வற்புறுத்தவில்லை. நீங்கள் அவர் தங்கையை சந்தித்தால் இன்னும் தெரியும் என்றாள்.

முகவரி தரவா என்றபோது மறுக்காது வாங்கி கொண்டேன்.

நான் இலியிச்சை சந்திக்கும்போது என்ன சொல்ல வேண்டும் உங்கள் சார்பில் என்று கேட்டபோது சிரித்து கொண்டாள்.

உங்களுக்கு தெரியுமா? சுவராஸ்யங்கள் என்பது அவருக்கு இல்லை. பதட்டத்தை கூட்டும் எதிர்பார்ப்பை மனமிழந்து கொஞ்சி கொண்டிருக்கும் மனிதனிடம் இருந்து விலகி கிடப்பதுதான் முதல் வேலை என்பார்.

ஒருவேளை அவர் அங்கிருந்தால் நான் இப்போது இங்கிருப்பதில் குற்றம் என்று ஒன்றுமில்லையே என்றாள்.

இலியிச் போலவே உங்கள் வார்த்தைகள் இருக்கிறது. சௌமியாவை சந்தித்தது எனக்கும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றேன்.

அவருக்கு பிடித்தது என்றும் நினைவுப்பொருள் என்றும் ஒன்றும்  என்னிடம் இல்லை. என்னை சந்தித்ததை கூட அவரிடம் நீங்கள் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாள்.

நான் சௌமியாவிடம் விடைபெற்று ஊருக்கு திரும்பினேன்.


___________________

பாகம் 6

ஒரு சாதாரண மனிதனுக்கு இன்னொரு சாதாரண மனிதன் அப்படி தெரிவது இல்லை. இதனிலும் கூட பறவைகளும் விலங்குகளும் விலக்கு.

இதை இலியிச் சொன்னபோது  நாகமலை புதுக்கோட்டை சமணர் குகையில் இருந்தோம் நாங்கள் என்றான் கணபதி. பீர் பாட்டில்களை, உதிரி நிரோத் பாக்கெட்டுகளை கடந்த பின்தான்  ஒரு வரலாற்று சுவடை காண முடிகிறது.

கணபதிக்கு நிறைய நாட்களாக இலியிச்சை தெரியும். வீட்டில் தொந்தரவு மிகுந்த நாட்கள் பெருகும்போது கணபதியுடன் வந்து தங்கி விடுவான்.
செக்கானுரணியில் கணபதி இருந்தான்.


இலியிச் பஸ்ஸில் செல்லும் தூரத்துக்கு பணம் இருந்தால் போதும். ஏதேனும் வீடுகள் அவனுக்காகவே காத்திருக்கும்.
"புறப்படும்போது மீண்டும் எப்போது சந்திக்கலாம்" என்று கேட்பது  அவனுக்கு ஒவ்வாத பிடிக்காத ஒன்று.

"மீண்டும் என்பதே நாசூக்கான அவமானம். தகராறு மிகுந்த கடமை உணர்ச்சி" என்பான்.

அவனுக்கான அறையில் அவன் ஆடைகள் இல்லையென்றால் அவன் கிளம்பி போய் விட்டான் என்று கொள்ள வேண்டும். சொல்லிக்கொண்டு செல்வது என்பதெல்லாம் எப்போதாவதுதான்.

கணபதிக்கு என்னை இப்போது நினைவு இருக்குமா என்பது தெரியவில்லை. அமெரிக்காவில் பொறியாளர் ஆனபின் இங்கு வருவது அடியோடு நின்று போயிற்று. அப்படியே வந்தாலும் வந்து போவதும் தெரிவது இல்லை.

இலியிச் பற்றிய நினைவு வரும்போது கணபதியை மட்டும் மறக்க முடியாது.

கொஞ்சகாலம் அவன் இலியிச்சோடு பழகி வந்திருக்கிறான். நிறைய பேசி இருக்கிறான்.


சித்தன்னவாசல் சென்ற போது "யாரோ இன்னும் இங்கே இருப்பதை என்னால் உணர முடிகிறது" என்றவன் அமைதியாக அங்கேயே அமர்ந்து விட்டான். அது தியானமோ தவமோ கிடையாது.

நேரங்கள் கழித்து இலியிச் தன் உணர்வை அடையும்போது "புத்தகங்கள் ஓவியங்களை கொன்று விட்டன. வாசிப்பதுதான் நரகத்தின் சாவிகளை கண்டறிய உதவுகிறது" என்றானாம்.

கணபதி இன்று எதிர்பாராது தொலைபேசியில் அழைத்த பொழுதில் இலியிச் பற்றி நான் சொன்னபோது இத்தனையும் அவன்தான் சொன்னான்.

"நீ இலியிச்சை சந்திக்கும்போது என்னை பற்றி அவசியம் அவன் என்ன நினைக்கிறான் என்பதை கேட்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டான்.

"டெரகோட்டா பொம்மைகள் யாரை எப்படி ஈர்க்கும் என்று சொல்ல முடியாது. அதன் மீது நாணயங்களை ஒட்ட முடியாது.

நீ குனியும் போதெல்லாம் உன் சட்டை பையில் இருந்து பணமும் நாணயங்களும் உதிர்கிறது. டெரகோட்டா நின்ற இடத்தில் கரைக்கும் வாழ்வை நீ அலைந்தலைந்து கரைக்கிறாய்". என்று ஒரு முறை சொன்னான்.

அப்படித்தான் இன்று நான் இருக்கிறேன். இதை அவனிடம் மறக்காது சொல்லு என்று கணபதி சொன்ன கணத்தில் அவன் அழுகையை கேட்க முடிந்தது.

_____________________________

எழுதியவர் : ஸ்பரிசன் (10-Jul-19, 11:59 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 28

மேலே