தொலைந்த தளிர்கள்

படித்துப் பட்டம்
ஏந்த வேண்டிய கைகள்,
பட்ட வெயிலில்
பழம் ஏந்தி நிற்கின்றன!

அறிவுப்பசி தேடவேண்டிய
பருவம்!
வயிற்றுப் பசிக்காய்
வண்டிகளைத் தேடுகின்றன
விழிகள்!

புத்தக சுமை
சுமக்கும் வயது,
கூனாகி
குடும்ப சுமை சுமக்கிறது!

மலர்ந்து
மணக்க வேண்டிய நேரம்,
முட்படுக்கை விரிக்கிறது
வறுமை பாரம்!

யாரோ ஒதுக்கிய
உடல் விருந்தின் எச்சம்,
இன்று உழல்கிறது
பசி விருந்தில்!

மோகம் விதைத்த
போதை விதை,
நஞ்சாய் முளைத்து
நரகம் ஆக்குகிறது
பிஞ்சு வாழ்வை!

யாரோ தேடிய
சிலநேர சுகத்தில்,
தொலைந்து போகின்றன!
சில தளிர்களின்
வாழ்க்கை!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (11-Sep-19, 10:07 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 938

மேலே