கண்ணா லட்டு திங்க ஆசையா

2019 ஆண்டின் தீபாவளி நாள் . பேரரசன் நரகாசுரனை வாழ்த்தியும் , தீபாவளி வாழ்த்து சொல்லியும் whatsup செய்திகள் வந்து கொண்டிருக்க , மதியம் ஒரு மணிக்கு , ஒரு கார்கள் கூட இல்லாத பார்க்கிங் லாட்களை பார்த்தபடி , நான்கு நாட்களுக்கு முன் செய்த "காளிபிளார்" குழம்பை சாப்பிடலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்கையில் , லட்டு சாப்பிட வேண்டும் என்று கட்டுக்கடங்காமல் ஒரு வெறி வந்தது "கார்த்திக்" ஆன எனக்கு , கூடவே வந்தது "கீர்த்தனாவும்" , லட்டு கசந்த காரணமும் .

லட்டு - மனிதன் கண்டுபிடித்த அரும்பெரும் சாதனை , சின்ன சின்ன மாநில பூந்திகள் , வேற்றுமையில் ஒற்றுமை என்ற சர்க்கரைப்பாகினால் ஒன்று சேர்ந்து உருவாகும் கூட்டாட்சி தத்துவம் .

சர்க்கரையை தண்ணீரில் கலந்தால் பாகாகி விடுமா ? ஒற்றுமை உணர்வு மேலோங்க , திணிக்காமல் , இனிப்பாய் கலந்து வர வேண்டும் , பதமாய் வந்த பாகுவை தண்ணிரில் போட்டால் கரையாமலும் , விரல்களில் எடுத்து பிரித்தால் மெல்லிய கயிறாகவும் வருவதை பண்ணி பண்ணி பூரித்துப் போன இளம்பருவ நாட்களில் இருந்து லட்டின் மேல் தீராக்காதல் .

கல்லூரி முடிந்து , தெருவுக்கு நூறு என்ஜினீயர்களும் ,எம்பிஎக்களும் இருக்கும் பெங்களூரு நகரில் , மூன்று நண்பர்களுடன் இருக்கையிலும் காதல் தீராமல் , ஏன் இவ்வளவு பெரிய ஊரில் நல்ல லட்டு விற்கும் கடைகளே இல்லை என்று தேடிக்கொண்டு இருந்த ஒரு வறட்சி காலம் .

அன்றும் ஒரு தீபாவளி முடிந்த ஞாயிறுதான் , வேலை காரணமாக ஊருக்கு போக முடியாமல் நான் இருக்க , நண்பர்கள் போய்விட்டு வந்து , தத்தம் காதலிகளை சந்தித்து , காதலும் , இனிப்புகளும் ,பரிமாறிக்கொண்டு , வீட்டில் இனிப்புகளை போட்டுவிட்டு , காதலை கையுடன் எடுத்து மாலுக்கோ ,சினிமாவுக்கோ சென்று இருந்தார்கள் .

தூங்கிக்கொண்டிருந்த நான் ,கிராம்பும் , கற்பூர மணமும் வர அரக்க பறக்க எழுந்து தேட ஆரம்பித்தேன் ,பலனாக கிடைத்தது , லட்டுகள் அடங்கிய டிபன் பாக்ஸ் . மஞ்சளுடன் , சிவப்பு கலந்த , நல்ல லட்டுகளுக்கே உண்டான நிறத்தில் லட்டுகள் . கவனிக்க வேண்டிய விஷயம் , ஒவ்வொரு லட்டுலயும் இரண்டு முந்திரி , இரண்டு திராட்சைகள் , எண்ணி வைத்திருப்பார்கள் போல .

வா வா என்று கூப்பிட ,விட்டு விட்டு போன உங்களுக்கு லட்டு கிடையாது என்று நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ,அக்கம் பக்கம் யாருமில்லா தனி உலகத்தில் லட்டுகளுடன் இருக்கையில் அருளின் செய்தி வந்தது , "டேய் கார்த்திக் லட்டு கீர்த்தனா கொடுத்தது" , கீர்த்தனா - என் நண்பனின் காதலி .

லட்டு ஏன் பிடித்தது என்றும் தெரிந்தது சிறு வயதில் இருந்து குடித்து வளர்ந்த சிறுவாணி தண்ணீரில் செய்த லட்டு பிடிக்காமல் இருக்குமா ?

அன்று முதல் பாலைவனத்தின் பூஞ்சோலையாக , கீர்த்தனா கோயம்பத்தூர் போய் வரும்போதெல்லாம் லட்டு கிடைத்தது , கீர்த்தனா மறந்தாலும் , அவளின் அம்மாவையும் , அவள் வீட்டில் லட்டு செய்யும் சாந்தம்மாவையும் , அழைத்து பேசி லட்டு செய்து கொடுக்க சொல்லி விடுவேன் .

வசந்த காலம் தொடராது அல்லவா ? ஆறு மாதங்களில் கீர்த்தனா வேலை மாறி , புனே சென்று விட , அருளும் பின் சென்று விட்டான் . நண்பர்களும் காதலிகள் , மனைவிகளாக , "ஒரு அறையில் இருந்த எங்கள் எல்லோருக்கும் காதல் வந்தது உனக்கு ஏன்டா வரவில்லை " என்று போய்விட்டார்கள் . எப்படியும் அவர்கள் தொடர்பில் இருப்பார்கள் என்பதால் அவர்கள் போனதை விட லட்டு போனதில் தான் எனக்கு அதிக வருத்தம் .

"இன்னும் ஆறே மாசம் தான் டா , அமெரிக்காக்கு பறந்துட்டே இருப்பேன் , கார் ஓட்ட கூட கத்துக்க ஆரம்பிச்சுட்டேன் , நீங்க இப்பபடியே பெங்களூரு சுத்திட்டே இருங்கடா என்று வாழ்த்தி விட்டேன்" .(கடைசியில் அனைவரும் வெவ்வேறு நாட்டிற்கு போக நான் மட்டும் பெங்களூரை வலம் வந்தேன் என்பது வேற கதை )

அடுத்த சில மாதங்கள் , எல்லாத்துக்கும் வேலை இருக்க , லட்டு கிடைக்கா மன அழுத்தத்தில் இருந்த எனக்கு , கார் ஓட்ட கத்துக்கொடுக்க வந்த நண்பர் மூலமாக அறிமுகமானது , பெங்களூருவின் இரவு நேர கார் பந்தய உலகம் . வார வாரம் , பந்தயங்களில் வெற்றி பெற்ற கார்களில் அமர்ந்து , போட்டோ எடுத்து ரசித்து ரசித்து பந்தயங்களை எழுதி முகநூலில் போடுவது பிடித்த பொழுதுபோக்கானது . கார் ஓட்டுவது மட்டும் வருவேனா என்றது .

இவ்வாறு சுத்தி விட்டு வந்த ஒரு விடியலில் , அறைக்கு முன் அமர்ந்து கொண்டு இருந்தான் அருள் , கூடவே நண்பர்களும் .

"ஏன்டா போன் பண்ணினா எடுக்க மாட்டியா ? "

"பண்ணுனா எடுக்கனும்டா ? நான் ரேஸில் பிசியா இருந்தேன் . காலங்காத்தால எல்லாரும் வந்திருக்கீங்க ? ஏன்டா அருள் வரேன்னு சொல்லி இருக்கலாமல்ல ?"

"அதுக்குதான்டா போன் பண்ணினேன் , நேத்துல இருந்து நீ எடுக்கல , பிரச்சனை ஆயிடுச்சு மச்சான் , கீர்த்தனா வீட்டுல தெரிஞ்சுடுச்சு , போன வாரம் ஊருக்கு போனவ இன்னும் வரலை , காண்டாக்ட் பண்ணக் கூட முடியலை , கார்த்திக் நீதாண்டா ஹெல்ப் பன்ணனும்."

"என்னை என்னடா பண்ண சொல்லுற ?"

"நீயும் அந்த ஊருதான ? அவ வீட்டிற்கு ஏதாவது கரணம் சொல்லி போய் பார்த்துட்டு வர முடியுமா ?"

"என்னடா விளையாடுறீங்களா ? அவங்க வீட்டிற்கு போயிட்டு எல்லாம் அவ்வளவு ஈஸியா வர முடியாதுடா , அவங்க அப்பாவோட டிரைவர் சேகர் எனக்கு பழக்கம் தான் , பேருக்கு தான் அவர் டிரைவர் , அவருக்கு கீழ 20 பேருக்கு மேல வேலை செய்யுறானுக , எல்லாமே முரட்டு ஆளுக . கீர்த்தனா உங்கிட்ட சொல்லலியா ? "

ஒருவொருக்கொருவர் திகிலுடன் பார்த்துக்கொள்ள , அருள் அழுகையுடன் தொடர்ந்தான் , "பார்த்தியா மச்சான் , எங்க யாருக்குமே , ஏன் கீர்த்தனாக்கே இதெல்லாம் தெரியாது , நீதாண்டா போகணும் . இந்த வாரம் கோயில் நோம்பினு போறப்ப சொன்னா ,அதுக்கு வந்துட்டு பார்க்க வந்தேன்னு சொல்லுடா" .

"அவங்க வீட்டுக்கு நீ பெங்களூர்லதான் இருக்கேனு தெரியும் , இப்ப எல்லாம் லட்டு கொண்டுபோறது இல்லையானு கூட கேட்டுருக்காங்க . அதனால நீ போனா சந்தேகப்பட மாட்டாங்க . "

"நீ என்ன வேணாலும் சொல்லு நான் போக மாட்டேன் , இதோ இவனுக தான் குடும்பஸ்தன் ஆயிட்டானுகளே ? குடும்பமா போக சொல்லு , நான் தனியா போறத விட இது பெட்டர் ."

"கார்த்திக் , சொன்னா கேளுடா , நீ போவேங்குற நம்பிக்கைல, கீர்த்தனா கிட்ட சொல்லி அவங்க வீட்டுல லட்டு கூட செய்ய சொன்னேன்டா , நீ என்னடானா இப்படி பேசுற , பிரண்ட்டாடா நீ ? "

"இப்ப தான் காண்டாக்ட் பண்ண முடியலைன்னு சொன்னா ? இப்ப லட்டு செய்ய சொன்னேன்னு சொல்லுற ? நிஜமாவே செய்ய சொன்னியா ? "

கூட இருந்த மற்ற சதிகாரங்களும் , அவசரம் அவசரமாக தலையாட்டி சொன்னார்கள் , "இவன் சொல்லி இருக்கான் மச்சான் , எங்க கிட்ட கூட சொன்னான்".

லட்டின் ருசியோடு , நட்புன்னா என்னனு தெரியுமா ? என்ற தளபதி வசனமும் நினைவுக்கு வர " சரி போறேண்டா" என்றேன் .

"நண்பேன்டா நீ , இந்த ஊருக்கு போறதுக்கு டிக்கெட் , காலைல பத்து மணிக்கு பஸ் புக் பண்ணியாச்சு , நாளைக்கு காலைல அவங்க வீட்டுக்கு போற , எல்லாமே பிளான் பண்ணிட்டோம் கிளம்பு " . என்றான்
அருள் .

" பெரிய ரேஸ் பிளான் , பஸ் டிக்கெட் முன்னாடி புக் பண்ணுறதெல்லாம் பிளானாடா ? " என்றபடி கிளம்பினேன் .

அடுத்த நாள் கீர்த்தனா வீடு , அருள் உண்மையைத்தான் சொல்லி இருக்கான் , தட்டு நிறைய லட்டு கீர்த்தனா அம்மா கொண்டு வந்து "சாப்பிடு தம்பி , அவங்க அப்பா வந்ததும் பேசிட்டு , மத்தியானம் சாப்பிட்டு போவியமா " என்றார் .

"லட்டு மட்டும் போதுங்க வீட்டுக்கு போகணும் ."

"அட இருப்பா , கோயில் பார்த்துட்டு போவியாமா ", என்றபடி உள்ளே செல்ல .

ரகசிய குரலில் கீர்த்தனா ஆரம்பித்தாள் , "கார்த்திக் எங்க அப்பா வரது உங்கிட்ட விசாரிக்கத்தான் . அதுக்கு முன்னாடி நான் வீட்டை வீடு ஓடிடனும் " என்றாள் .

"கீர்த்தனா , அத நான் சொல்லணும் , நீயும் அருளும் என்னமோ பண்ணுங்க , வந்து பார்த்தாச்சு , நீ குத்து கல்லாட்டம் நல்லா தான் இருக்க , வந்ததுக்கு லட்டை சாப்பிட்டு போயிட்டே இருக்கேன்" .

"விளையாடாத கார்த்திக் , நான் வீட்டை வீட்டு ஓடப்போறேன் , அதுக்குத்தானே நீ வந்திருக்க ,மத்தவங்க எல்லாம் சொன்ன எடத்துல தான இருக்காங்க ? , நாம போய் ஜாயின் பண்ணிக்கலாம் ."

"என்னது வீட்டை விட்டு போறியா ? அடிப்பாவி இதுதான் அவனுக சொன்ன பிளானா , இங்க பாரு எனக்கொண்ணும் தெரியாது , நீ வேணா ஓடிப்போ , நான் நடந்து தான் போவேன் , லட்டு சாப்பிட வந்தது ஒரு குத்தமா ?"

கோவத்துடன் அருளுக்கு போன் பண்ணினேன் , பய புள்ள , ஒரே ரிங்கில் எடுத்தான் , "என்ன விளையாடுறீங்களாடா ? உன் லவ்வுக்கு நீதான் ஓடணும் , நான் எதுக்கு டா ஓடணும் ?"

" மச்சி எல்லாமே பிளான் பண்ணிட்டம்டா , கார் கூட ஏற்பாடு பண்ணியாச்சு , நீ கூட்டிட்டு வந்தது ரயில்வே ஸ்டேஷன்ல விட்டா போதும் , டிரைன் டிக்கெட் கூட புக் பண்ணிட்டம்டா , அவங்க ஏரியால இருந்து , ரயில்வே ஸ்டேஷன்க்கு , மெயின் ரோட்டுல வராம மாத்தி வரதுக்கு உனக்குத்தான் தெரியும் , முன்னாடி சொன்ன ஒத்துக்க மாட்டேன்னுதான் இப்ப சொல்லுறேன் , காப்பாத்துடா" என்று அழ ஆரம்பிக்க , என் முன்னால் கீர்த்தனா அழுக ஆரம்பித்தாள் .

போனை வைத்து விட்டு நிலவரம் கலவரம் ஆவதை உணர்ந்து , பல்லை கடித்துக்கொண்டே கேட்டேன் , "என்ன பிளான் ?

"நீ கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு முன்னாடி பஸ் ஸ்டாப்க்கு போ , அதுக்கு பக்கத்துல இருக்க என் பிரண்ட் வீட்டுல ஏற்கனவே என் பேக் எல்லாம் கொண்டு போய் வெச்சுட்டேன் , அவங்க வீட்டுலயும் எல்லாரும் கோயில்ல இருப்பாங்க , அங்கிருந்து கார் ஏற்பாடு பண்ணி இருக்கு , போயிரலாம்" என்றாள் கீர்த்தனா . எனக்கு உதற ஆரம்பித்தது .

எடுத்த லட்டையும் தட்டில் போட்டு விட்டு , எழுந்து போறதுன்னு நீ தனியா போக வேண்டியதுதானே என்று கேக்க நினைக்கையில் , அவள் அம்மா வந்தார் . நான் பேந்த பேந்த முழிக்க ,

"கோயிலுக்கு போயிட்டு , அப்படியே வீட்டுக்கு போறானாம் அம்மா " என்றாள் கீர்த்தனா .

"அப்படியா தம்பி கோயில்ல தான் அவங்க அப்பா இருக்காரு , நான் கூப்பிட்டு சொல்லுறேன் , லட்டு கொண்டு போவியாமா" என்று ஒரு டிபன் போஸ் நிறைய போட்டு கொடுத்தார் .

"எப்படியும் தர்ம அடி வாங்க போறோம் , லட்டு சாப்பிட்டுட்டே வாங்கலாம் , என்று நினைத்துக்கொண்டு , சீக்கிரம் வா " என்று கீர்த்தனாவிடம் சொல்லிவிட்டு நடுக்கத்துடன் பைக்கில் பஸ் ஸ்டாப் வந்தேன் .

கார் நின்று கொண்டு இருந்தது , இரண்டு தெரு தள்ளி இருக்கும் பள்ளி முன் வண்டியை நிறுத்திவிட்டு ,மறக்காமல் லட்டு பாக்ஸ்ஸை எடுத்துக்கொண்டு கார் பக்கம் வர கீர்த்தனா வந்து சேர்ந்திருக்க வில்லை . கார் சாவி உள்ளே இருந்தது .

சாவிய வைத்து விட்டு டிரைவர் எங்கே போனார் , என்று தேடுகையில் , அவசரம் அவசரமாக பேக் உடன் வந்தால் கீர்த்தனா .

"எல்லாம் பிளான் படி நடந்துருச்சு , எங்கம்மா உள்ள போனதும் ஓடி வந்துட்டேன் , சீக்கிரம் வண்டி எடு" என்றாள் .

எனக்கு இதயம் படாரென்று வெடித்தது , "என்னது வண்டி எடுக்கிறதா ? டிரைவர் எங்க ?"

"டிரைவர் இருந்தா நீ எதுக்கு , டிரைவர் எல்லாம் இல்லை ,அவரு நிறுத்திட்டு எப்பவோ போய்ட்டார் , ரயில்வே ஸ்டேஷன்ல வாங்கிக்குவாங்க , அதுதானே பிளான் ?"

"உங்க பிளான்ல தீய வச்சு எரிக்க , எனக்கு கார் ஓட்ட தெரியாது கீர்த்தனா."

"தெரியாதா ??? எனக்கு அழுகை வருது கார்த்திக் , நீதானே ரேஸ் பத்தி எல்லாம் எழுதி , போட்டோ போட்ட இப்ப தெரியாதுங்குற ? அருள் உன்கிட்ட முன்னாடி சொல்லாதது தப்புதான் , ரிவென்ஜ் எடுக்கணும்னு பார்க்காத , சீக்கிரம் வேண்டிய எடு ".

"கீர்த்தனா, நின்னுட்டு இருக்க வண்டில போட்டோ எடுத்துதானே போட்டேன் , ஓட்டுற மாதிரி வீடியோ போட்டனா ? எனக்கு சத்தியமா கார் ஓட்ட தெரியாது . இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை , நீ வீட்டுக்கு போ , நாளைக்கு இதே பிளான் டிரைவர் வெச்சு பண்ணிக்கலாம்" .

"மாட்டுனோம் கார்த்திக் , நாளைக்கு எல்லாம் போக முடியாது , நான் லெட்டர் எழுதி வெச்சுட்டு வந்துட்டேன் , இந்நேரம் பார்த்திருப்பாங்க . என்ன பண்ணுறது" என்றாள் .

"இப்ப கேளு , இதை முன்னாடி கேட்டிருக்கணும் , இரு பைக்ல மெயின் ரோட்டுக்கு போய் ஒரு டாக்ஸி பிடிச்சுக்கலாம் , இங்கயே இரு , பைக் எடுத்துட்டு வந்துறேன்" .

தெருமுனையை நல்ல வேளை அவசரமாக திரும்பவில்லை , கிட்டத்தட்ட 150 கிலோ இருக்கும் உருவம் , மேல உக்காந்திருக்க பாவமாய் நின்று இருந்தது பைக் . சுத்தி நாலு பேர் , எல்லா பக்கமும் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தார்கள் . லெட்டரை பார்த்து விட்டார்கள் போல .

திரும்பி கார் நோக்கி வர ,"சேகர் அண்ணா ,பாருங்க கார்த்திக் கூட வந்துட்டான்"என்று கேட்டது கீர்த்தனாவின் உற்சாக குரல் .

பயம் கண்ணை கட்ட, "டேய் , மாட்டிகிட்டோம் ஒடுங்கடா என்று செய்தி அனுப்பி , டெலீட் செய்து விட்டு , வியர்வை ஊற்றெடுத்து வழிய , மெதுவாய் அருகில் போனேன் .

"கார்த்திக் , சேகர் அண்ணாவை பார்த்ததும் தான் மூச்சே வந்துச்சு , சின்ன வயசுல இருந்தே அண்ணா , அப்பா வேணான்னு சொன்னாலும் சப்போர்ட் பண்ணி பேசுவார் அண்ணா ரொம்ப சாப்ட் தெரியுமா ?

"லெட்டரை அண்ணாதான் பார்த்தாங்கலாம் , அப்பா பார்க்கலையாம் .கொஞ்ச நாள் போகட்டும் , அப்பா கிட்ட பேசி , புனே அனுப்பி வைக்குறேன் , அதுக்கப்புறம் கல்யாணத்த பத்தி ஒரு முடிவெடுக்கலாம்னு சொல்லிட்டார் . இன்னைக்கு தப்பிச்சோம் , நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் நீயும் எங்க பிளான் தெரியாம சேர்ந்து மாட்டி இருப்ப. "

"அண்ணா சொன்ன மாதிரி நீ அப்பாவை பார்க்காம போனா சந்தேகம் வந்திரும் வா வீட்டுக்கு போயிட்டு போயிரலாம் , அருளுக்கும் , மத்தவங்களுக்கு கூட ஆள் அனுப்பி புனே போக சொல்றேன்னு சொல்லிட்டார் என்று பட படவென்று பேசிக்கொண்டே போனாள் கீர்த்தனா ".

கீர்த்தனா பெரிய பைத்தியமா , இவளையும் லவ் பண்ணின அருள் பெரிய பைத்தியமா , இல்லை இவர்கள் காதலுக்காக லட்டிற்கு ஆசைப்பட்டு தூது வந்த நான் பெரிய பைத்தியமா , நான்தான் என்று நொந்துகொண்டு பார்க்க

"அய்யா வீட்டுல இருந்து குடோனுக்கு போய்ட்டார் , பாப்பாவை வீட்டுல விட்டுட்டு , நம்ம குடோனுக்கு போயிரலாம் என்ன சொல்லறீங்க" என்றார் சேகர் .

ஆகா , கிடாவெட்டுக்கு குடோன்னு முடிவு பண்ணிட்டானுக , சேர்ந்து மாட்டுனம்னா இன்னைக்கு எல்லாத்துக்கும் பொங்கல் தான் என்று எண்ணிய படி கீர்த்தனாவை பார்க்க மரண சாசனம் எழுதி விட்டு பாப்பா பராக்கு பார்த்து கொண்டு இருந்தது .

கீர்த்தனாவை விட்டு விட்டு சிறிது தூரம் திரும்பியதும் "அப்புறம் "என்றார் சேகர் .

"அண்ணா எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கண்ணா , பொண்ணை எல்லாம் தூக்கிட்டு வரலைங்க அண்ணா , நான் தூக்கிட்டு வந்தது லட்டு மட்டும்தான் , அதுவும் அவங்களா தான் கொடுத்தாங்க . நீங்க வேணா லட்டை வச்சுக்கோங்க என்னை விட்டுருங்க" என்று பரிதாபமாக சொன்னேன் .

"பாப்பா பேசுனதுல உங்களுக்கு தெரியலைனு தெரியுது , ஊரை தாண்டி இருந்தா, பாப்பாவை விட்டுட்டு மத்தவங்களை அறுத்து போட்டுருங்கனு அய்யா சொல்லி இருந்தார் , சின்ன பசங்களா இருக்கீங்க , பாப்பா தான் வீட்டுக்கு போயிருச்சே , அவங்க அம்மாக்கு கூட தெரியலை , அதனால் பிழைச்சீங்க. பைக் நிறுத்திய இடம் வந்திருச்சு வீட்டுக்கு போங்க , இந்த பக்கம் வராதீங்க , அந்த
தம்பிககிட்ட ஊரை பார்த்து போக சொல்லிருங்க " என்றார் .

தப்பித்தோம் பிழைத்தோம் ,என்று பைக்கை எடுக்க , சேகர் அண்ணாவின் குரல் கேட்டது , "லட்டை விட்டுட்டு போறீங்க " .

வாங்க வில்லையென்றால் , குடோனுக்கு கூட்டிட்டு போய் விடுவாரோ என்று வாங்கி கொண்டு போகையில் கசக்க ஆரம்பித்தது "லட்டு " .

பின்குறிப்பு : ஐந்து வருட போராட்டத்திற்கு பிறகு , பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து அருளும் , கீர்த்தனாவும் இப்போது அமெரிக்கா - நார்த் கரோலினாவில் .பிறக்கப்போகும் பேத்தியை பார்ப்பதற்கு , கீர்த்தனாவின் அம்மாவும் , அப்பாவும் , வந்திருக்கிறார்களாம் . "லட்டு செய்யலாம்னு அத்தை சொன்னாங்க வரியா" என்று அருள் மெசேஜ் அனுப்பினான் . என்னதான் இருந்தாலும் , "லட்டு ................".

எழுதியவர் : பாவி (4-Nov-19, 8:10 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 1647

மேலே