திருவள்ளுவர் துதிஅவரிடம் நாம் கேட்கும் வரம்

கட்டுடல் மேனியும் காங்கயம் காளைபோல்
கண்கவர் எழில்த் தோற்றமும்
சிட்டினைப் போலவே சிறகடித்துலா வரும்
சிந்தனைச் செயலாக்கமும்
பட்டினை ஒப்பவே மென்மையுள் இதயமும் பாறைபோல் மனவலிமையும்
கற்றவர் அரங்கினில் முன்னிலை பெற்றிட--உன்
கடைக்கண் அருள்ப் பார்வையும்
நோய் நொடி மூப்பிலா நூறாண்டு அகவையும்
நுண்மான் நுழை புலமும்
தாய் தந்தை மார்களைத் தாங்கி வணஙகிடத்
தடந்தோளும்,அன்பு நெஞ்சும்
நிறைவுடை வாழ்கையும் நேர்மை மிகு நண்பரும்
நேசம் நிறை சொந்த பந்தம்
கறைபடா வழ்க்கையும், கடமையில் உறுதியும்
கரையிலாத் தமிழ் ஞானமும்
பார்வையில் கருணையும் பழகுதற்கு எளிமையும்
பண்புசேர் நல்லொழுக்கமும்
நேர்மையும் ,தூய்மையும்,நிம்மதி உறக்கமும்
நினைவாற்றல் நிறைந்த மனமும்--உமை
மதமென்ற போர்வையில் மறைத்திடா உள்ளமும்
மனிதனாய் எண்ணும் உயர்வும்
சதமென்று வாழ்க்கையை யெண்ணாத நெஞ்சும்
சான்றோரை மதிக்கும் பண்பும்
புத்தி கூர்மையும், சத்தியசீலமும்
புகழ்வளர்த் தொண்டுள்ளமும்
புன்னகை வதனமும்,பொறுமையும்,அடக்கமும்
புலிநிகர்ப் போர்க்குணங்களும்
பழிகண்டஞ்சலும், பயமிலா வீரமும்
பகுத்தறிவுச் சித்தாந்தமும்
விழிப்போடு எப்போதும் வேண்டாத மடமையை
விரட்டிடும் துணிவாற்றலும்
அன்பான துணைவியும்,அறிவான மக்களும்
அறவழியில் வந்த தனமும்
பண்பு நிறை பாசமும்,பகைவர்க்கு அஞ்சாத
பனையளவு தன்மானமும்
ஏழைகளின் துயரத்தை இல்லாமல் செய்கின்ற
இளகிய கொடையுள்ளமும்
அலைகடல் மத்தியில்க் குமரியின் கோடியில்
சிலையாக நிற்கும் --அய்யன் திருவள்ளுவன்
அடியவன் கேட்பதைச் சடுதியில் ஏற்று நீ
பிடி எனக் கொடுத்தருள்கவே !

எழுதியவர் : நா.வேலுசாமி த.ஆ(ஓய்வு) (13-Nov-19, 4:14 pm)
சேர்த்தது : velusamy48
பார்வை : 89

மேலே