பறைபட வாழா அசுணமா – நான்மணிக்கடிகை 2
நேரிசை வெண்பா
பறைபட வாழா அசுணமா உள்ளங்
குறைபட வாழார் உரவோர்1 - நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாந் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ்2 சால்பு. 2
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
கேகயப் பறவைகள் பறையின் ஓசை தஞ்செவியிற் பட்டால் உயிர்வாழ மாட்டா;
அறிவுடையோர் தமது பெருநிலை (‘உள்ள' மென்றது ஈண்டு ஊக்கத்தை. ‘தமது ஊக்கங் குறையும்படி ஏதேனும் அலர்மொழி ஏற்படுமானால் உரவோர் உயிர் தாங்காரென்பது கருத்து) குறைபட்டால் உயிர் தாங்கமாட்டார்;
மரங்கள் நிறைந்த காட்டில் மூங்கில்கள் நெல்லுண்டான போதே பட்டுப் போகும்;
நிறையுடைய சான்றோர் தமது நிறைவுக்குக் குறைவான இழிவுரைகள் உண்டானால் உயிர் வாழ மாட்டார்.
கருத்து:
சான்றோர்கள் தமக்கு மானக்கேடு உண்டாகும்படி உயிர்வாழ மாட்டார்.
விளக்கம்:
பறை - ஒருமுகக் கருவி.
‘உள்ள' மென்றது ஈண்டு ஊக்கத்தை. ‘தமது ஊக்கங் குறையும்படி ஏதேனும் அலர்மொழி ஏற்படுமானால் உரவோர் உயிர் தாங்காரென்பது கருத்து.
பெரியோர் செயல் அவரியல்பின் மேலேற்றிச் ‘சால்பு வாழாதாம்' எனப்பட்டது:
இச்செய்யுளிற் கூறப்பட்ட கருத்துக்கள் நான்கும் ஒன்றே யாயினும்; நூன்முறைமை பற்றி நாற்பொருளாய்க் கூறி விளக்கினார்.
1. பெரியோர், 2 சொல்பட்டால் சாவதாம்.