காதலி சொல்லிற் பிறக்கும் உயர்மதம் – நான்மணிக்கடிகை 5

நேரிசை வெண்பா

கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி
சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று1
அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளிற் பிறந்து விடும். 5

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

ஒளியுள்ள மணிகள் மலையில் உண்டாகும்; மிக்க களிப்பு காதலியினது இன்சொல்லினால் தோன்றும்; அறவழிகள் மென்மை பொருந்திய அருளினிடம் உண்டாகும்; அவ்வறத்தோடு ஏனைய இன்பம் முதலியவெல்லாமும் செல்வத்தினால் உண்டாய்விடும்.

கருத்து:

மணிகள் மலையிலும், இன்பம் காதலியின் சொல்லிலும், அறநெறி அருளிலும், அவ்வறமும் இன்பமும் முதலான ஏனைய எல்லாப் பேறுகளுஞ் செல்வத்திலும் உண்டாகும்.

விளக்கம்:

கல் - கருவியாகு பெயராய் மலையையுணர்த்தும்.

கற்புடைய மனைவியின் சொல்லில் இன்பம் பயக்கும் என்பதனை ‘காதலி சொல்லில்' என்றார்.

அறநெறிக்கு அருளெண்ணமே ஏதுவென்பதற்கு ‘அருளிற் பிறக்கும் அறநெறி' எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Nov-19, 8:25 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

மேலே