உணவாக்கி உயிர் காக்கும் உழவர் கூட்டம்

உணவாக்கி உயிர் காக்கும் உழவர் கூட்டம் !!

உலகை அதனில் உறையும் உயிரை,
உணர்ந்தே உணவைத் தருவார் உழவர்!
தனதே என்னும் எண்ணம் இன்றித்
தாய்போல் பிறரைக் காப்பார் உழவர்!

மாட்டைப் பூட்டி ஓட்டும் போதும்,
மண்ணைப் புழுதி ஆக்கும் போதும்,
வாய்க்கால் வரப்பு அமைக்கும் போதும் ,
வயலில் நீரைப் பாய்ச்சும் போதும்,
விதையை மண்ணில் வீசும் போதும்,
வீசிய விதைகள் முளைக்கும் போதும்,

விண்ணின் மழையை வேண்டும் போதும்,
வேண்டாக் களைகள் நீக்கும் போதும்,
பச்சைப் பயிர்கள் வளரும் போதும்,
பருவம் தன்னில் கதிர் விடும் போதும்,

பாலும் மணியில் ஏறும் போதும்,
பார்த்துப் பார்த்து வளர்க்கும் போதும்,
கதிர்கள் முற்றிக் கனியும் போதும்,
காக்கை குருவி உண்ணும் போதும்,
அறுத்துக் களத்தில் அடிக்கும் போதும்,
அடித்துக் குவித்து அளக்கும் போதும்,

காப்பது தனது உயிரை அல்ல;
கறுத்துக் களைக்கும் உடலை அல்ல;
அருகில் உழைக்கும் மனையை அல்ல;
அணையில் துயிலும் மகவை அல்ல;
துணையாம் தந்தை தாயை அல்ல;
தூணாய் நிற்கும் உறவை அல்ல;
உலகை! அதனுள் உறையும் உயிரை!!
உணர்ந்து உணவைத் தருவார் உழவர்!!

- செல்வப் ப்ரியா - சந்திர மௌலீஸ்வரன் ம கி.
- 20 டிசம்பர் 2019 - வெள்ளிக் கிழமை.

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (20-Dec-19, 5:53 pm)
பார்வை : 147

மேலே