அவிழும் நறுமுகை

"ஏய்ய்யா பத்திரமா போயிட்டு வந்துருவல


உன்ன தனியா விட மனசு கேக்க மாட்டேங்குது ய்யா


நானும் வேனா உன் கூட வரவா"


"ஆத்தோவ்! என்ன பேசிட்டு இருக்க அவன் போயிட்டு நல்லபடியா வந்துருவான் த்தா


நீ பேயாம இரு


ஏன் போட்டு விசும்பிட்டு கிடக்கவ"


"போ டா பொசகெட்டவனே...


உனக்கென்ன தெரியும் என் ஈர குலையலாம் நடுங்கிட்டு கெடக்கு"


வீரணனுக்கும் பொன்னிக்கும் நிகழ்ந்த அந்த உரையாடலை கூட கண்டு கொள்ளாமல் சுவற்றில் தொங்கி கொண்டிருந்த தன் தந்தையை பார்த்து கொண்டிருந்தான் அவன் பிம்பம் அவன் தந்தையின் மீது விழ கண்கள் மெல்ல முத்துபேச்சி மீது விழுந்தது அவளும் பாவடை சட்டையில் சிரித்த முகத்துடன் மஞ்சள் குங்குமமிட்டு மாலையுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தாள்


பொன்னி வெறித்து பார்த்து


"இந்தாய்யா ராசா ! எம்மா தாயி பேச்சி!


நீ தான் மா என் பிள்ளைக்கு துணையா இருந்து எந்த காத்தும் கருப்பும் அண்டாம பாத்துக்கணும்.


அவன் நல்லபடியா போயிட்டு வந்தா உனக்கு மாவெளக்கு வச்சு பொங்க வைக்கிறேன்..." என மூச்சு விடாமல் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டே திருநீற்றை அவன் நெற்றியில் அள்ளி எடுத்து பூசினாள்.


"ஆத்தா போதும்...


உன் பகுமானம்


காவலா கடைசி பஸ் போயிரும்யா ..


சீக்கிரம் வா உன்ன பஸ் ஏத்தி விட்டு பஞ்சாயத்து யூனியனுக்கு போனும்."


"ஆமாய்யா வெரசா கிளம்பு...


இப்ப போனா தான் இருட்றதுக்குள்ள ஸ்டேசனுக்கு போக முடியும்" என பேச்சி சொல்லி கொண்டிருக்கும்போதே வீரணன் தன் சைக்கிளை தயார் படுத்தினான். சக்கரங்கள் சுழல லாவகமாக ஏறி அமர்ந்து பொன்னியை பார்த்தபடியே கையசைத்தான்.


ஒரு வழியாக மதுரைக்கு செல்லும் கடைசி பஸ் வந்தது. ஊர் எல்லையில் இருக்கும் அன்புடன் வரவேற்கிறது என்கிற பலகையை ஏக்கத்துடன் பார்த்தவாறு பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்தான். அன்புடன் வரவேற்கிறது என்பதற்கு மேல், சக்கரப்பட்டி என்றிருந்தது எவ்வளவு தூரம் சென்றாலும் அவன் மண்ணின் பெயர் அவன் கண்ணை விட்டு அகலவில்லை.


இரவு பதினொன்றை நெருங்கும் போது அவன் மதுரை ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தான். மாமல்லபுர சிற்பங்களை பார்ப்பது போல கண்கள் விரிய இரயில் நிலையத்தை பார்த்தான். அது தான் தன் வாழ்நாளில் முதல் இரயில் பயணம் அதுவும் தன்னந்தனியாக. இரயில்கள் எப்போதுமே நீங்காத அனுபவங்களை இட்டு செல்பவை அவனுக்கும் அந்த பயணம் தான் முதல் இரயில் அனுபவம்.


அந்த இரவு நேரங்களிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது கூடல் நகரம். கார்களும் பைக்குகளும் சரமாரியாக செல்ல தத்தி தாவி ஸ்டேஷன் வாசல் வந்து சேர்ந்தான்.


மக்கள் அங்கும் இங்குமாய் அழைந்தார்கள். பலர் சாவகாசமாக அமர்ந்து வெட்டி கதைகள் பேசியபடி இருந்தார்கள். இன்னும் சிலரோ நாபிக்கமலம் அதிர உறங்கி கொண்டிருந்தார்கள். இவனோ மெள்ள ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்வந்தான். தூரத்தில் ஒருத்தி கையசைத்து கூப்பிட்டு கொண்டு இருந்தாள். எதற்காக கூப்பிடுகிறாள் என்று தெரியவில்லை நெருங்கி முன்னே செல்ல சட்டென்று கையசைத்து தன்னை கடந்து சென்றவனை அழைத்தாள்.


"ஏய் வர்றியா..."


"இல்ல இல்ல"


"இருநூறு ரூபா தான் வர்றியா"


"அடிங்கு டிரைனுக்கே காசில்லாம போயிட்டு இருக்கேன் வர்றியா வா


ச்சி போ அங்குட்டு"


"டேய் வித்தவுட் புறம்போக்கு


அப்டியே போயிரு" சொல்லி கொண்டே சட்டென காவலனை பார்த்து கூப்பிட்டாள்


"வர்றியா"


உடல் வியர்த்து வெளவெளத்தது தொண்டை குழியில் எச்சில் முழுங்க தலையை கிழக்கும் மேற்குமாய் அசைத்த வண்ணம் வேகமாக நடையை கட்டினான்.


அவளும் எக்காள சிரிப்பு கொட்டி அவனை பார்த்து கொண்டிருந்தாள்.


கண்கள் பரபரத்தபடி அங்கும் இங்கும் அல்லாடினான். இரயிலுக்கு டிக்கெட் எடுக்க எங்கே போவது. யாரை கேட்பது என அடுத்தடுத்து மன உளைச்சலுக்கு ஆளானான். திரும்பி தன் ஊருக்கே சென்று தாய் மடியில் படுத்து அவள் சீலையை நனைத்திட கண்களில் கண்ணீர் எத்தனித்தது. இருந்தாலும் போவதாக இல்லை எத்துணை இடையூறு வந்தாலும் கடந்து செல்ல வேண்டும் என்று ஏதோ ஒன்று உந்துதல் படுத்தியது அவனும் மனதை உறுதி படுத்தி கொண்டான்.


ஒரு வழியாக மணி மூன்றை நெருங்கியது.


இரயில் நிலையத்தில் நிசப்தம் நிலவியது. ஆங்காங்கே மக்கள் உறங்கி கொண்டிருந்தார்கள். சிலர் கைப்பேசியை சொடக்கியபடி இருந்தார்கள். இந்திய இரயில் தண்டவாளங்களில் வீசப்படும் பிரத்யேக வாடை வீசியது . அது அவனுக்கு முதல் முறை என்பதால் அவன் அடிவயிற்றை அந்த நறுமணம் என்னவோ செய்தது. தலையை சுழற்றியது மெல்ல கண் அசந்தான்.


நேரம் கடக்க மறுத்தது, இருந்தும் சூரியன் விடுவதாக இல்லை.


சுவிதா எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தை வந்து அடைந்தது. சரியாக மணி ஐந்து ஐந்து. இரயிலை பார்த்தவுடன் தறிகெட்டு ஓடியது மார்வாடி கூட்டம். அந்த மார்வாடி கூட்டத்தில் பதின் பருவ கன்னிகள், யாவரும் அத்துனை அழகு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னும் சில இளைஞர்கள், முதியவர்கள், ஆசாமிகள் என அனைவரும் முண்டியடித்து ஓடினர். காவலனுக்கு ஓன்றும் புரியவில்லை. யாரிடம் கேட்பதென தெரியாமல் தவித்தான்.


அவன் தவிப்பை பார்த்த ஒரு மார்வாடி பெண் "இராஜஸ்தான் ஹா" என்றாள்.


உடனே எந்த தாமதமுமின்றி சமரசமில்லாமல் தலையை அசைத்தான். அவனை பார்த்து கண்ணங்குழி விழுக "பா" என்றாள் அந்த மார்வாடி தமிழச்சி. இடையினம் வல்லினம் ஆனது அவள் மெல்லிய புன்னகையில்.


அவனை தள்ளி விட்டு ஒவ்வொருவரும் இடத்தை பிடித்து கொண்டிருந்தனர். இவனோ பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்று கொண்டிருந்தான். எதிர்த்த பிளாட்பாரத்தில் உள்ள கடையில் இருந்து பாடல் ஒலித்தது "அனுபவம் புதுமை....." அது அவனுக்கு தான் வானோலி கூட கேலி செய்து கொண்டிருந்தது.


அந்த மார்வாடி குடும்பம் ஒரு வழியாக இடத்தை பிடித்து கொண்டது. நெரிசலில் சிக்கி தவித்த காவலனுக்கு சிறிது நேரத்தில் மூச்சையுற்றது. கண்களில் நிழலாடியது. தொண்டை வறண்டு தண்ணீரை வேண்டி அவன் நாக்கை காவு வாங்கியது. இன்னும் சப்தம் அடங்கவில்லை சலசலப்பு ஓயவில்லை. சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. வியர்வை குளியல் குளித்திருந்த அவனுக்கு அது அசௌகரியமாக இருந்தது.


மார்வாடி குடும்பம் மிகப்பெரிய குடும்பம். அண்ணன் தம்பி என மொத்தம் ஐந்து பேரு அவர்கள் மனைவியர் என ஏழு பேர். அது என்ன கணக்கென்று தெரியவில்லை ம்ம் அது எதற்கு நமக்கு. பிள்ளைகள் மொத்தம் பதிமூன்று பேர். கொஞ்சம் பொறுங்கள். ம்ம்ம்ம்ம் நீண்ட நெடு பெரு மூச்சு விட்டபடி அந்த கூட்டத்தை கவனித்தான் காவலன்.


அந்த கூட்டத்தில் பதின் வயதில் மூன்று பேர் அதில் இருவர் நமக்கு தேவையற்றவர்கள் மூன்றாவது ம்ம் அவள் அன்றைய பயணத்தை இனிமையாக்க வந்தவள். எப்போதும் ரயில் பயணங்கள் மணிரத்னத்தின் செல்லுலாய்டுகளை போல காவியாமாக இருப்பதில்லை சில நெரிசல்கள் பல நெருடல்கள் என ஜன்னல்கள் வழியே முன்னே பின் செல்லும் காட்சிகள் தான் ஏராளம். ஆனால் அன்று சில நெரிசல்களையும் தாண்டி அந்த இரயில் பயணம் அன்றைய இரவை காவியமாக்கியது அது காவலனின் செயலா அல்லது காலத்தின் பிழையா என்பது இரயில் தண்டவாளங்களுக்கு தான் தெரியும் ஏனென்றால் அது தானே அன்று அவர்களை கடத்தி சென்றது.


அவளை பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். அவள் நேயர்களாகிய இரயில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் நேயர் விருப்பம் காவ(த)லனுக்கும் தான்.


பசும்பாலில் எடுத்து வைத்த எழுமிச்சை நிறத்தை கொண்டிருந்தாள். அவள் நிறத்தை பற்றி கூறுவதால் நிற வெறியன் என பச்சை குத்துதல் நிகழலாம் ஆனால் அவள் நிறத்தை குறிப்பிடாமல் அவளை குறிப்பிடுவது வரலாற்று பிழையாகிவிடும் என்பதால் கட்டாயமாகிறது. நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் திராட்சையை, கருப்பினை கொண்டு போர்த்தி அழகு பார்ப்பதை போல மாதுளையை சிவப்பு கொண்டு போர்த்துவதே உத்தமம். சரி அது இருக்கட்டும், அவளை பற்றி சிறுக சிறுக சேமித்த சின்னஞ் சிறிய குறிப்புகளை வரைய வேண்டும் அல்லவா!


அவள் மென் பாதங்களை மெல்லிதாக அலங்கரித்து செஞ்சுருட்டி இராகத்தை இசைத்த வண்ணம் இருந்தது தங்க கொலுசு. மயிலாஞ்சிகள் மயில் ஆய்ந்திட்ட உள்ளங்கை. அவள் இடையின் அடர்த்தியை மிஞ்சியது அவள் கார்குழலின் நிறை இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி ஊடல்கள் நிகழ்வதுண்டு அதை ஈடுகட்ட அவள் முன்அழகிற்கு அவ்வப்போது துணையாக்குவாள். கொவ்வை பழ உதடுகள். கண்ணின் குவியத்தின் அளவில் சின்னஞ் சிறிய இடப்பக்க மூக்குத்தி. வலப்பக்க உதட்டின் கீழ் அபூரா பள்ளத்தாக்கை மிஞ்சும் மச்சம். சுருண்டு திரண்டு அவள் காதோரம் மந்தாரை இலை போல மயங்கி விழும் மயிரிழைகள். காதினை அலங்கரிக்க தாஜ்மகாலின் கோபுரத்தை அச்செடுத்தார்போல் சிறிய ஜிம்மிகிகள். மதிகெட்டான் சோலையின் அடர் வன காடுகள் போல மயக்கும் விழிகள். அந்த வனத்திற்கு வனத்துறையினர் போல கூரிய காஜல்கள். ம்ம் கண்முன்னே ஒரு நடமாடும் ஓவியத்தை பார்த்து லயித்து திளைத்து திக்குமுக்காடி தான் போனான் காவலன். அவனும் சராசரி ஆண் தானே. அவளை வெகுவாக கவனித்து கொண்டிருந்தான். அவன் கண்கள் அவளை மெல்ல களவாடியது. அவளும் கண்டும் காணாது இருந்தாள். பெண்களின் பிறவி குணம் அல்லவா.
ஓவியம் பேசியது சிரித்தது சினுங்கியது.


பகல் பதினொன்று இருக்கும் பசியெடுத்தது இரயில் மலைக்கோட்டையை கடந்து புவனுர் சென்று கொண்டிருந்தது. வழக்கம்போல சென்ற இடமெல்லாம் செழிப்புற இருக்கும் அந்த கூட்டம் அங்கேயும் தன் ஆக்கிரமிப்பை தொடங்கியது. ஜாடிக்குள் மூடி வைத்த மிளகாய் ஊறுகாயும் தாமரை இலையில் மூடி வைத்த சப்பாத்தியும் நன்கு கவனிக்க தாமரை இலை சப்பாத்தியும் கொஞ்சம் நாவூறும் ஜாங்கிரி அதோடு இனிப்பு கலந்த மோர். காலை சிற்றுண்டி தடபுடலாக அந்த இரயில் பெட்டியில் நடைப்பெற்றது.


அவனோ இரயில் பெட்டியின் படிகளில் அமர்ந்து இருந்தான். அவ்வப்போது உள்ளே நடப்பதை கவனித்து கொண்டிருந்தான். இரவு தூக்கம் இல்லை இப்போதும் தூக்கம் அழைக்கவில்லை மாறாக பசி அழைத்தது. திருச்சி ஸ்டேசனில் எதாவது வாங்கி சாப்பிட நினைத்தான் ஆனால் முடியவில்லை. அவன் பசி அவன் கண்களில் நிழலாடியது. அவள் அழகை அள்ளி எடுத்து ரசித்தாகிவிட்டது இப்போது அவள் அகத்தை ரசிக்க நேரம் வந்துவிட்டது. முக அழகு இப்போது எங்கிருந்து வந்தது என அவனுக்கு தெரிந்தது. யாருக்கும் தெரியாமல் இரண்டு சப்பாத்திகளை எடுத்து போகிற போக்கில் அவன் கையில் திணித்து விட்டாள். அதை லாவகமாக வாங்கி கொண்டவன் ஏனோ திரு திருவென முழித்தான். பிறகு யாருக்கும் தெரியாமல் கழிவறையின் தாழ்வாரம் அருகே நின்று முழுங்கினான் கொஞ்சம் அருவருப்பு கொஞ்சம் பசி.


இந்த இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவில் சிறந்த காதல் ஜோடி யாரு தெரியுமா இரயிலும் கடிகாரமும் தான். ஐந்து நிமிடம் தாமதம் என்றாலும் பரஸ்பர புரிதலுடன் ஊடல் சல்சாப்பு கொள்ளும் அற்புத ஜோடி.
இரயில் மெல்ல தன் சக்கரங்களை சுழற்றியது சரியாக மணி கால் நான்கு சென்னை சென்ட்ரலில் இளைப்பாற இரயில் எத்தனித்த தருணம். ஆனால் மக்கள் கூட்டம் ஓய்ந்தபாடில்லை. மக்கள் கூட்டம் இங்கும் அங்கும் சலம்பியது. அவித்த கடலையுடன் கொஞ்சம் வெங்காயம் தக்காளி சேர்த்து ஆவி பறக்க விற்று வந்தவனை ஜன்னல் வழியே விரட்டி பிடித்து இறைஞ்சினாள். "பாப்பா கல்ல !!! "
"இங்கலாம் ஹைஜினிக்கா இருக்காது சம்ஜே" சட்டென முகம் வாடியது மறுமுனையில் ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.


இப்போது அவன் முன்னே அதை நீட்டினான் அவனுக்கும் லேசாக பசி எடுத்தது வாங்கி சாப்பிட்டான். அவளுக்கு இதை கொடுக்க வேண்டும் என மனம் பிரியப்பட்டது. மனது பிரியப் பட்டால் தாமதிக்கவே கூடாது. பச்சை கொடியை அசைத்தார் போல கிளம்ப வேண்டியது தான். இரயிலும் தக்க சமயத்தில் கிளம்பியது. வாங்கிய கடலையை எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை . கடலைகள் போட்டு பழக்கமும் இல்லை. யோசித்து கொண்டே இருந்தவன் இரயில் பெட்டியின் கதவோரம் நின்று கதவின் வழியாக ஜன்னலின் நடுவே நீட்டினான். திடுக்கிட்டவள், அவன் தான் என்று அறிந்து வாங்கி தன் கைக்குள் மறைத்தாள். சிரித்து கொண்டே கதவின் ஓரம் வந்தவன் அவள் மறைத்து மறைத்து உண்ணும் காட்சியை வெகுவாக ரசித்தான்.


தென்றலில் கலந்த தேன் தமிழின் வாடை சற்று குறைந்து சுந்தர தெலுங்கின் மணத்தை சுமந்து கொண்டு வந்தது. நேரம் இரவினை நோக்கி பயணித்தது இரயிலோ ஆந்திரத்தின் விஜயவாடாவை நெருங்கியது. மறுபடியும் பசி எடுத்தது இந்த முறை அவள் கொடுப்பாள் என்று அவனுக்கு நம்பிக்கை இல்லை ஏனென்றால் அவளே பழங்களை உண்டு படுத்துறங்குகிறாள். கிடைத்ததை வாங்கி சாப்பிட நினைத்தான்.


இரவு உணவை முடித்து மணியை பார்க்கும் போது அடுத்த நாள் எட்டி பார்த்தது. கதவின் அருகே வேடிக்கை மனிதரைப் பார்த்த வண்ணம் இருந்தான். பல எண்ண ஓட்டங்கள் ஆழ் மனதில் ஓட்ட பந்தயத்தை நிகழ்த்தியது. திடிரென தோள் பையை தேடி உள்ளே இருக்கும் காசு பணத்தையும், தனது முதல் சந்ததி கைப்பேசியையும் எடுத்து பார்த்து பத்திரப்படுத்தி கொண்டு விட்டு புத்தகத்தை எடுத்து படிக்க துவங்கினான்.


நல்ல காலை வேளை சூரியனின் தாக்கம் சற்று கம்மியாக இருந்தது எப்போது அசந்தான் என்று தெரியவில்லை. நன்றாக தூங்கி எழுந்தான். இந்தியின் வெளிச்சம் பரவலாக வீச தொடங்கியிருந்தது. சந்தரபூர் ஸ்டேஷனை தாண்டி நாக்பூருக்கு செல்ல காத்திருந்தது. கண்கள் இன்னும் தூக்கத்தில் இருந்து விடுபடவில்லை தலைமாட்டில் இருந்த புத்தகத்தை பைக்குகள் வைத்து விட்டு கடனை அடைக்க கிளம்பினான். மார்வாடி கூட்டமும் கடன் அடைக்க காத்திருந்தது.


ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்து வந்துவிட்டான். இப்போது பசி கடன் கேட்டது, தொண்டையில் டீ தவித்தது அடுத்த ஸ்டேஷன் வரை காத்திருக்க முடிவு செய்தான். நாக்பூர் ஸ்டேஷன் வந்தடைய சரியாக அரை மணி நேரம் இருந்தது இரயிலில் பல கூட்டங்கள் இறங்க காத்திருந்தது. நெரிசல் இப்போது பன்மடங்கு கூடி இருந்தது.


ஒரு வழியாக மராத்திய மக்களின் பெருமைமிகு நாக்பூரை வந்தடைந்தது. சிற்றுண்டியை முடிக்க சிட்டாக பறந்தவனை சிதறடித்தது. மொத்த இரயில் கூட்டமும் வாசலில் பாராளுமன்ற சபைகளை நிகழ்த்தி கொண்டிருந்தது. உணவு கிடைக்கவில்லை மாறாக இடம் கிடைத்தது. பெருமூச்சு விட்டபடி ஜன்னலோர இருக்கையை பிடித்து கொண்டான். திடிரென கண்கள் அலைப்பாய்ந்தது அவளை தேடி. அவள் எங்கும் செல்லவில்லை தன் தந்தையின் மொபைலை வருடி கொண்டிருந்தாள். அவள் அழகை இரசித்தவனுக்கு உணவு தேவைப்படவில்லை வயிற்றின் தேவைக்கு மூளை அதுவரை கட்டளையிடவில்லை.


தன் ஆத்தாளுக்கு ஒரு அழைப்பு விட எடுத்தான், ஆனால் அது அவனுக்கு தகுதி இல்லை என்று பதிலளித்தது.


மதிய நேரம் நெருங்கியது மல்காபூரையும் கடந்து எவ்விடத்திலும் சோர்ந்து விடாமல் சூரியன் மேற்கே செல்வதற்குள் போபாலை அடைய ஓடி கொண்டிருந்தது. சரியாக சூரியன் அரபிக் கடலை கடக்கையில் போபால் வந்தடைந்தது இரயில். ஐந்து நிமிடங்கள் தான் அப்படி ஒரு களேபரம் மீண்டும் மூச்சையுற்று போனான்.


தண்டவாளங்கள் மெல்ல தனது மெல்லிசையை இசைத்தது. அடுத்து தாம் சிகப்பு நகரத்தில் தான் கண் விழிக்க போகிறோம் என்று அவன் அறிந்திருந்தான். மெதுவாக நகர்ந்தான் அவள் இருந்த இடம் நோக்கி கொஞ்சம் குழப்பமாக தன்னுடன் 'மதுரையில் ஏறிய அவர்கள் எங்கே அவள் எங்கே?' தலை சுற்றியது. முன்னும் பின்னுமாக அலைந்தான் ஓய்ந்து போய் தன் இருப்பிடம் வந்தான். கொஞ்சும் நமட்டு சிரிப்போடு ஜன்னலை பார்த்தான். பல எண்ணில்லா கனவுகளை சுமந்து வரும் தனக்கு இந்த அற்ப சந்தோஷம் தேவைதானா என்று ஏதோ ஒன்று வினவியது. பயணத்தின் நோக்கத்தை மறந்து செல்கிறோமே என அச்சுறுத்தியது மனசாட்சி. அதற்கென்ன தெரியும் மன்னாங்கட்டி மனசாட்சி இளமையில் கொடியது எதுவென்று அது அறிந்திருக்கவா போகிறது. வானத்து தேவதை போல வந்தவள் திடிரென்று மறைந்தாள் என்று அவனுக்கு ஆறுதல் கூற யாருமில்லை யாரும் வரப்போவதுமில்லை.


ஜன்னல்கள் எப்போதும் அழகானவை அவை காட்சி அளிப்பதும் அத்தனை அலாதியானவை. இயற்கையை துணைக்கு அழைத்து தன் சிந்தனையை நேர்மறையாக்கி கொண்டான். ஜெய்ப்பூரில் இறங்கியவுடன் முதல் வேலையாக தாயின் குரலை கேட்க வேண்டும் என்று முடிவு செய்து கண் அசந்தான். பசியின் மயக்கமாக கூட இருக்கலாம். தூக்கம் கண்களை கவ்வி கொண்டது


இரயில் ஜெய்பூர் ஜங்ஷனை வந்தடைய இன்னும் சில மணி நேரங்களே இருந்தன. மணி மூன்றை கடந்திருந்தது. இரயிலில் பரவலாக எல்லோரும் உறங்கி கொண்டிருந்தார்கள். அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் சுரேலியை கடந்து ஓடி கொண்டிருந்தது இரயில். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் காவலன். சட்டென அவன் மேல் யாரோ விழுந்ததை போல உணர்ந்தான். அரைகண்களில் பார்த்தான் நன்கு தடிதடியாக ஆறடி உயரத்தில் ஆறேழு ஆட்கள். அவன் அருகே வந்து அமர்ந்தார்கள்.


எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை தூங்காமல் அங்குமிங்குமாக உலாவி கொண்டிருந்தார்கள். ஜெய்ப்பூரின் எல்லையை தொட்ட மகிழ்ச்சியில் தண்டவாளங்கள் நிமிர்ந்திருந்தன இரயிலும் மெல்ல நோகாமல் தன் கால்களை சுழற்றியது. ஸ்டேஷனை தொட சரியாக பத்து நிமிடங்கள். அந்த பத்து தன் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்களாக மாறும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. தூங்கி கொண்டு இருந்த காவலன் அருகே வந்தவர்கள் நொடி பொழுதில் தலையனையாக வைத்திருந்த அவன் கைப்பையை வெடுக்கென்று பிடுங்கி தலைத்தெறிக்க ஓடினார்கள். சத்தென்று இரயில் இருக்கை அவன் பின்னந்தலையை பலமாக பதம் பார்த்தது. வழி பொறுக்க முடியவில்லை. என்ன நடந்தது என்று அவனுக்கு புரியவில்லை சில விநாடி தாமதத்தின் பிறகே அவனுக்கு விளங்கியது பதறியடித்து கொண்டு அவர்களை பிடிக்க எழுந்து ஓட முயற்ச்சிக்கும் பொழுது இரயில் யாத்திரிகர்கள் அனைவரும் இரயில் கதவின் முன் முன்டியடித்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை தள்ளி விட்டு வேகமாக இறங்க முயன்றான். முன்னே நின்றவரின் கால் இடறி இரயில் தண்டவாள நடைபாதையில் பொத்தென்று விழுந்தான். விழுந்ததில் முகப் பக்கவாட்டில் பலத்த
காயம், இடப்பக்கமாக ரத்தம் வலிந்து ஓடியது. வலது கையில் சட்டை கிழிந்திருந்தது. எதையும் கவனிக்க நேரமில்லை. அவர்களை துரத்தி பிடிக்க ஓடினான்.


"புடிங்க புடிங்க திருடன் திருடன்" என்று அலறினான். அவன் கூக்குரலுக்கு எவரும் செவி சாய்க்கவில்லை.


ஒருவழியாக இரயில் தண்டவாளத்தை வந்தடைந்தது. பையில் இருந்து காசு பணம் மற்றும் அந்த கைபேசி அனைத்தும் எடுத்தாகிவிட்டது. அந்த திருட்டு கூட்டத்தில் கைப்பையை எடுத்து வந்த கடைசி நபரின் சோர்வு அவனை சிக்க செய்தது எகிறி குதித்து தாவி அந்த கைப்பையை வைத்திருந்தவனை லாவகமாக பிடித்தான். அவனுடன் மல்லுக்கு சென்றான். இருவரும் மல்லுகட்டினர், பரஸ்பரம் இருவரது மொழியிலும் சுடுச்சொற்களை பரிமாறினர். காவலன் அவன் மீது வெகுவாக அவன் சட்டையை பிடித்து அவன் முகதாவாகட்டையை இடமாற்றம் செய்தான். வலி தாங்கமுடியாமல் அவனை ஒரே மூச்சாக தள்ளி அவன் முகத்தில் கைப்பையை வீசினான். அந்த கைப்பை அவன் முகத்தில் பட்டு அந்தப் பகுதியில் நடந்த வந்த ஒரு பெண்ணின் காலில் வந்து விழுந்தது. அதை எடுப்பதற்குள். காவலனை அந்த கள்வர் கூட்டம் நாலாப்பக்கமும் சூழ்ந்து அவனை அடித்து உதைத்தார்கள்.


வலித்தாங்க முடியாமல் "அம்மா! அப்பா !" என்று கத்தினான். சற்று நேரத்தில் உயிரை விடவும் முடிவு செய்திருந்தான். கண்களில் தாரை தாரையாக கண்ணீர் உதடுகளில் பொல பொலவென இரத்தம் கொட்டியது.


தன் வாழ்நாளில் இப்படி ஒரு துன்பத்தை அவன் அனுபவித்ததில்லை. வாழ்க்கை எவ்வளவு மோசமானது என்று அவன் அறிந்திருக்கவில்லை, மனிதர்கள் இவ்வளவு இரக்கமற்ற அரக்கர்கள் என்று அவன் எண்ணியதில்லை. உலகம் மிகவும் பெரியது அது தரும் அனுபவங்களும் மிகவும் ஆச்சரியமானது. மனிதர்கள் காசுக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் என்று அவனுக்கு அன்று தான் விளங்கியது. மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் தெருவில் அன்றாடம் அங்கும் இங்கும் சுற்றி திரியும் வெறி நாய்கள் போல.


அந்த கூட்டத்தை இடித்து தள்ளி விலக்கி கொண்டு வந்தாள் அந்த மாது.
வந்தவள் தேமே என நிற்கவில்லை அடித்த அந்த கள்வர் கூட்டத்தின் ஒவ்வொரு நபரையும் முதுகிலும் தன் சத்துக்கு மட்டும் ஓங்கி அடித்தாள். யாரும் எதுவும் பேசவில்லை அனைவரும் அமைதி காத்தனர்.


சட்டென கூட்டத்தின் தலைவன்


"ஐஸே ஆஃப் கே சாத் ஹாஸ்தாப்சேக் கரேன்"


"மேன் அத்யாசாரீ கோ தேக்கார் ஷாந்த் நயின் ரஹூங்கா"


அவன் "அம்மா அம்மா" என வலி தாங்க முடியாமல் முனங்கி கொண்டிருந்தான். அவன் நினைவில் அந்த பேச்சியும் தன் தாயும் தான் இருந்தார்கள். அடிவயிற்றில் ஏற்பட்ட வலியை உணரும் போது தன்னிலை அறியாமல் "பேச்சிமா" என்றான். தாமதிக்காமல் ஒரு கை அவனை வாரி அணைத்து தூக்கிவிட்டது. அள்ளி அணைத்து மடியில் போட்டுக் கொண்டு முந்தானையின் சூட்டினை கொண்டு சிந்திய இரத்தத்தை தடுத்து நிறுத்தியது. தண்ணீர் கொண்டு அவனை ஆசுவாசப்படுத்தியது. அவன் முனங்கல் அடங்க வில்லை "என் காசு என் காசு" என்று ஒலித்து கொண்டே இருந்தது.


"உசாகே பைசா தே தோ"


" நஹின், ஹாம் நஹின் தேங்கே" என சொல்லி கிழே விழுந்து சிதறிய புத்தகத்தை அவன் முகத்தில் எறிந்துவிட்டு சென்றார்கள்.


"பைசா பூத் ஹே! பரதேசி நாய்ங்க"


அவனை கைத்தாங்கலாக மெதுவாக கூட்டி வந்து இரயில் இருக்கையில் அமர வைத்தாள்.


நீண்ட நேரத்திற்கு பிறகு சொருகிய கண்கள் மெல்ல விரிந்தது, அருகில் இருந்த அவளை பார்த்து சற்று திடுக்கிட்டு போனான்.


"டர் நஹின்!! ஒன்னுல்ல பயப்படாத...
தண்ணீ குடி
தமிழா!!"


தொண்டை குழியில் தண்ணீர் இறங்கிய சுகத்தை விட காதில் தமிழ் விழுந்த சுகம் கொஞ்சம் தெம்பு கூட்டியது.


தலையசைத்து கொண்டே "ஆமா" என்றான்.


"கவுனசா...


ச்சீ


ஆஆன் எந்த ஊரு?"


"ம்ம் மதுர"


"ஹரே


என்ன விசயமா வந்த?"


"பரிட்சை எழுத"


"க்யா


பரிட்சை எழுதவா


அப்டி இன்னா பரிட்சை"


அதற்கு பதில் சொல்லும் போது நாடி 'நீட்' டி முழக்கியது. கைகளை கொண்டு நாடியை இறுக்கி பிடித்து கொண்டான்.


"ஹச்சா


கஹான்... கப்....


ச்சீ கருமம் இது வேற நடுல நடுல


எங்க? எப்போ?"


வேகமாக சட்டை பையில் கையை விட்டு அதில் கசங்கி கிடந்த காகிதத்தை பார்த்து


"மயூர் ஸ்கூல், அல்வர் கேட், அஜ்மீர் சிட்டி, இராஜஸ்தான் ஓன்னு


காலைல பத்து மணிக்கு பரிட்சை"


"அஜ்மீரா???


சாலா" ம்ம் கொட்டி இரயில் கடிகாரத்தை பார்த்தாள்.


"மணி ஏழரை ஆச்சே....


இப்ப டிரைன் இல்லியே


ம்ம்


சரி வா உன்ன பஸ் ஏத்தி விடுறேன்" என இருவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.


பஸ் ஸ்டாண்டை வந்தடைவதர்குள் மணி எட்டாகிவிட்டது. ஒவ்வொரு பஸ்ஸாக சென்று அஜ்மீர் என்று இருக்கிறதா என பார்த்தாள். நீண்ட நேர சல்லடைக்கு பின் அஜ்மீர் பஸ் காணக்கிடைத்தது. அவனை பஸ்ஸின் முன் வாசலில் ஏற்றிவிட்டு ஜன்னல் வழியே பார்த்து கொண்டிருந்தாள். அவன் நெஞ்சம் பதைபதைத்தது அவள் உடன் வரச் சொல்ல நா துடித்தது.


அவனை கண்கொட்டாமல் சிறிது நேரம் பார்த்தவள், ஓட்டுநர் வந்தவுடன் தாமாக வந்து அவன் அமர்ந்திருந்த இருக்கையின் அருகே வந்து அமர்ந்தாள். பெருமூச்சு விட்டபடி அவளை பார்த்தான். அவளோ முந்தானையில் முடிந்து வைத்திருந்த சில்லறை காசுகளை எடுத்து எண்ணி கொண்டிருந்தாள். வண்டி கிளம்பியது, வெகுதூரம் சென்றது சரியாக இன்னும் ஒரு மணி நேர பயணம் இருக்கிறது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.


அவன் காயங்கள் மெல்ல கிள்ள தொடங்கியது. உதட்டில் இருந்த இரத்த காயம் தவிர்த்து கை கால் முதுகு மற்றும் அடிவயிற்றில் சில ஊமைக்காயங்கள் அவையாவையும் அவன் வெளிக்காட்டி கொள்ளவில்லை.


"வலிக்குதா"


"இல்ல"


"சும்மா சொல்லு!
அவனுக அடிய பத்தி எனக்கு தெரியும்"


அவளை உற்று பார்த்தவன் எதுவும் பதில் கூறவில்லை.


"சரி விடு! பரிட்சை எழுதிட்டு பார்த்துபோம்"


தூக்கத்தில் கொட்டாவி விட்டபடி சொல்லி விட்டு தலையை சாய்த்தாள்.
வழிநெடுக இராஜபுத்திரர்களின் கலைவண்ணங்கள், மார்வாடி கூட்டத்தின் கைவினைகள் இரசிக்க மனமில்லாமல் பார்த்து கொண்டிருந்தான். அஜ்மீர் வந்தது பஸ், நடத்துநர் 'நீச்சே! நீச்சே' என்று காவலனை பார்த்து கூற அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவளோ நன்றாக உறங்கி கொண்டிருந்தாள். தொண்டை குழியில் எச்சிலை முழுங்கி கொண்டு அவள் தோளை பிடித்து அசைத்தான்.


வெடுக்கென தூக்கம் கலைந்தவள், "நஹின், நஹின் மேன் நஹின் கர் சகாதா"


அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.


"ஒ வந்துருச்சா...


வா இறங்கு போலாம்" வேகமாக எழுந்து சீலையை சரிசெய்து நடையை கட்டினாள். அவளை பின் தொடர்ந்தான் காவலன் ஒரு சின்னஞ்சிறு நாய்க்குட்டியை போல. அங்கும் இங்கும் நின்று சென்றார்கள் ஆனால் நேரம் நிற்கவில்லை மணி பத்தை நெருங்கி கம்பீரமாக நின்றது, அவளுக்கும் அது எங்கே இருக்கிறதென்று தெரியவில்லை. பஸ் ஸ்டாண்டின் வாசலில் பீடா கடை வைத்திருந்த ஒருவனிடம் வழி கேட்டாள்.


"மயூர் ஸ்கூல் கய்சே ஜானா ஹே"


அவளை ஏற இறங்க பார்த்து, ஒரு பீடாவை எடுத்து வாயில் போட்டு மென்றான்.


"அய்சே ஹீ சீதே ஜாவோ..."


"சகுரா"


மென்று கொண்டே இருந்தவன், வெறுப்பாகி வாயில் இருந்த வெற்றிலை சாற்றை பொழிச்சு என்று துப்பினான்.


"சீதே ஜாவோ...


ஒயின் ஷாப் ரஹா ஹே...


வாள் சீதே சாலே கே இரயில் வே பார்க் ரஹா ஹே...


இசாகே பாஸ்...


சலோ சலோ


த்ரீ கிலோமீட்டர் ஒன்லி"


" மூனு கிலோ மீட்டர் ஆஆ


கன்டா..." யோசித்தவள் சட்டேன்று வழியே வந்த ஆட்டோவை மறித்து காவலனையும் ஏற்றிக்கொண்டு சென்றாள்.


மயூர் ஸ்கூல் வந்ததும், காவலன் இதயம் சரமாரியாக அடித்தது. முகம் எல்லாம் வேர்த்தது பள்ளி வெறிச்சோடிக் காணப்பட்டது. ஒன்று இரண்டு பள்ளி நிர்வாகிகள், ஐந்தாறு போலிஸ்காரர்கள், நாலைந்து மாணவர்கள் இன்னும் சில பெற்றோர்கள் என ஸ்கூல் கேம்பஸில் சண்டைப்பிடித்து கொண்டிருந்தனர்.


பின்னால் அவள் வருவதை கூட அவன் கண்டுகொள்ளாமல் பரிட்சை எழுத தன்னை தயார்படுத்திக் கொண்டு முன்னே சென்றான். பரிட்சை எழுத வேகமாக உள்ளே போக முயற்ச்சித்தான். ஒரு போலிஸ் படக்கென்று அவன் கண்ணத்தில் கை வைத்தான் "சலோ சலோ". அதிர்ச்சியில் உறைந்தவன் தன்னை அனுமதிக்குமாறு " என்ன விடுங்க விடுங்க" எனக் கூறி மறுபடியும் முன் சென்றான். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, அது சரி இதுவரை நடந்தது மட்டும் அவனுக்கு விளங்கியதா என்ன.


அவள் வேகமாக முன்னேறி அவன் அருகே வந்தாள்.


"பரிட்சை எழுத போலயா"


"என்ன போக விடமாடறாங்க" போலிஸை பார்த்து கூறினான்.


போலிஸை பார்த்தவுடன் அவளுக்கு என்னவோ பண்ணியது. அதுவரை துடிப்புடன் அவனை அழைத்து வந்தவள் இப்போது கூனிக்குறுகி புழுவை போல் நெளிந்தாள். இருந்தாலும் அவன் முகத்திற்காக தைரியத்தை வரவழைத்து கொண்டு நியாயம் கேட்க சென்றாள்.


"பரிட்ச க்யோன் நஹின் லிக்ஹே"




"சமாய் சமாப் ஹோ ரஹா ஹே...


சலோ சலோ


யஹான் மாட் கடே ரஹோ"


"க்ர்பயா ஷமா கரேன்


முஜே இஸ் பார் லிக்கானே தோ"


"யா சம்பவம் நஹின் ஹே


ச்சோத் டோ"


எவ்வளவோ மன்றாடி பார்த்தாள், தனக்கு தெரிந்த அவர்களின் மொழியில் மிக நீண்ட உரையாடலை நிகழ்த்தினாள். ம்ஹூம் எதற்கும் பயன் இல்லை அந்த போலிஸ் கருனை காட்டுவதாக தெரியவில்லை. அவனை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் குழம்பியவள் மெல்ல திரும்பி பார்த்தாள். அவனை காணவில்லை, தேடினால் அங்கும் இங்கும் அதோ தெரிந்துவிட்டான். அந்த மைதானத்தின் அருகே இருந்து மரத்தின் அடியில் அமர்ந்து கண்களை கசக்கி கொண்டிருந்தான்.


தன் இயலாமையை என்னி வாய்விட்டு அழுதான். அழுகட்டும் இந்த நாள் முழுதும் அழுகட்டும். இதற்கு தான் இத்தனை முயற்சிகள் இத்தனை துன்பங்கள் இத்தனை துயரங்கள். அழுகட்டும் மனம் இலேசாகும் வரை கண்ணீர் வற்றும் வரை. அவன் கண்ட கனவுகள் அனைத்தும் கண்ணீராய் கரைந்து இந்த மண்ணில் போக மட்டும் அழுகட்டும். தன் தாய் தன் வெற்றி செய்தி கேட்க காத்திருப்பாள். அந்த சோகத்தை எங்கனம் கொண்டு கழிப்பான். அழுகட்டும் அழுது தீர்க்கட்டும்.


அவன் கதறலை பார்த்து அவள் அப்போது உறைந்து போய் இருந்தாள். அவனுக்கு ஆறுதல் மொழி கூற அவளுக்கு வார்த்தைகள் அகப்படவில்லை. "அழுகாதே" என்ற ஒற்றை வார்த்தையில் அவன் அழுகையை நிறுத்திவிடமுடியாது என்று அவள் நன்கு அறிந்திருந்தாள்.


அவன் தோளை இறுக பிடித்து அவன் முதுகை தட்டி கொடுத்தாள். அழுகை அடங்கி கண்ணீர் வற்றி, முகம் வீங்கி தேம்பி தேமே என இருந்தான்.


"அழுகாத...


இங்க பாரு அழுகாத..


வா போலாம்"


மூக்கை உறிஞ்சி கொண்டு கைச்சட்டையில் தன் கண்களை தேய்த்து கொண்டு எழுந்தான்.


"ரொம்ப நன்றிங்க" எல்லாம் உணர்ந்து துறந்த ஜென் துறவி போல ஒரு பொன் சிரிப்பை உதிர்த்தான்.


தனிமையின் தாளாத சிரிப்பு அவன் முகத்தில் தெரிந்தது. அதை தனிமை என்று சொல்லி அந்த உணர்வை சுருக்கிட முடியாது அது விரக்தியில் தோய்ந்தெடுத்த வெறுமையின் தனிமை. இப்போது அவன் தன் தாயின் ஸ்பரிசத்திற்காக ஏங்கினான். அவள் நினைவு அவனை ஆட்கொண்டது.


"விடு


எல்லாம் சரியாகிடும்


வா போலாம்"


உரையாடல் நிகழ்த்த அவளுக்கு தயக்கமாக இருந்தது. அவனை மவுனமாக அழைத்து வரவும் சங்கடமாக இருந்தது. எப்படி ஆரம்பிப்பது என்று தவித்தாள். அதற்கு இடம் கொடுக்காமல் அவனே ஆரம்பித்தான்.


"எங்க போறோம்


நான் ஊருக்கு போனும்


என்ன டிரைன் ஏத்தி விடுங்க"


"இப்பவேவா


நீ நினச்சவுன டிரைன் பிடிச்சு போக முடியாது..


இது உங்க ஊரில்ல புரிதா...!!!"


"ம்ம்....


எனக்கு என் ஆத்தாவ பாக்கனும்..."


"பாக்கலாம் பாக்கலாம்


நைட்டு தான் டிரைன் இருக்து


நீ இப்ப வா, என் கூட எனக்கு ரொம்ப பசிக்குது"


அவள் ஆறுதல் மொழிக்கு அவன் செவிசாய்க்க மறுத்தான்.


"இல்ல...


நா போனும்"




"ப்ச் சொல்லிட்டே இருக்கேன்ல


மத் பூச்சே


பேசாமா வா" அதட்டல் தொனியில் அவள் கோவத்தில் சிவக்கும் போது டிராபிக் சிக்னலும் கூட நிறம் மாறியது.


இந்த பயணத்தில் ஆகச்சிறந்த தவறை செய்ய துணிந்தேன் 'ஹே பகவான்' காவலன் மன இறுக்கத்தில் இருப்பதானாலே அன்றி இதை அவன் கூறமறந்திருக்கலாம். ஆம் அவளை பற்றி சொல்ல, நல்ல வட்ட முகம், வில் போன்ற புருவங்கள், வளைய சூரிய கிரகண கண்கள், அந்த கருமையை அள்ளி எடுத்து வைத்த அஞ்சனம், கார்மேக கூந்தல், ஜெய்பூரின் அக்மார்க் சிகப்பு லோலாக்குகள், வைர மூக்குத்தி அணிய ஏதுவான மூக்கு, செர்ரி பழ சாற்றில் ஊறிய உதடு, கொப்புழ் கீழ் இறக்கி கட்டிய நன்கு பச்சை நிறத்தில் சூரியன் ஊடுருவும் ஒளி புகு சீலை, அடர் ஜரிகையில் வண்ண வேலைப்பாடு மான் வேட்டையாடப்படும் முந்தானை அதில் சின்ன முடிச்சு, அதை அவ்வப்போது எடுத்து சுழற்றும் அவள் நகப்பூச்சு விரல்கள், செய்யாற்றில் தேற்றி எடுக்கப்பட்ட தேகம் என அந்த ரதி தேவதையின் ஸ்கேனிங் காப்பி போல அத்தனை வடிவழகு.


அவள் பின்னே, எதையும் பேசாமல் ஓரு நாய்க்குட்டியை போல வந்தான். கடந்து வந்த பாதையை அவன் கடுக்களவும் நோக்கி கொள்ளவில்லை. எங்கு எங்கோ கூட்டிச் சென்றாள் அத்தனைக்கும் செக்கு மாட்டை போல பின் தொடர்ந்தான்.


ஒருவழியாக அவள் இருப்பிடத்தை அடைந்தாள் கத்புத்லி எனும் நெருக்கமான பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட அன்றாடம் காய்ச்சிகள் வாழும் ஒரு குடிசைப்பகுதி. மேற்கூறை தலையை தட்டும் அளவுக்கு சிறிய வீடுகள் ஒருவர் பின் ஒருவராக செல்லும் அளவுக்கு குறுகலான பாதை. ஆங்காங்கே குப்பைகள், கழிவுகள் என அந்த பகுதியே ஜெய்ப்பூரின் நெற்றிப் பொட்டாக காட்சியளித்தது.


"சோஹன் அச்சா பனோ ...


பிந்தியா க்யா கர் ரஹே ஹோ....


பிஞ்சோ பாய் காம் பார் ஜாவோ ..."


வழிநெடுக தன் பாணியில் ஆரவாரமாக வந்தாள்.


அவர்கள் இருவரையும் பார்த்து அங்குள்ளவர்கள் சிலர் இல்லை பலர் முனுமுனுத்தார்கள், பரிகசித்தார்கள், ஏசினார்கள், சிரித்தார்கள் காதுபட சில நற் வார்த்தை கூறினார்கள். வீட்டு சாவியை எடுத்து பூட்டை திறக்கும் போது அருகில் இருந்து அவள் தோழிகள் வந்து அவளை வம்பிழுத்தார்கள்.


"க்யா ஆப்பனே சுபாஹ் கீ ஷ்ருவாத் கீ?"


"கஸ்டமர் ஆப்கோ கான் பசாந்த் ஆயே !!"


"ஆப்னே கித்னா கரீதா"


"ச்சுப்ப் போங்கடி" விரட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.


இந்த கேள்விகளும் ஆச்சரியங்களும் அவனை குழப்பியது. ஆனால் அதை பற்றி குழம்ப அவனுக்கு மனமில்லை. பசியின் மயக்கத்தில் இருந்தவள் எதையாவது சமைக்க வேண்டும் என்று முடிவு செய்து அடுப்பங்கரையை புரட்டினாள். ஒன்றும் அகப்படவில்லை "ப்ச்" கொட்டி வெளியே சென்றாள் அருகில் இருந்த தோழிகளிடம் கொஞ்சம் தக்காளி இரண்டு மூன்று வெங்காயம் மட்டும் வாங்கி வைத்து விட்டு ரொட்டியும் சப்ஜியும் செய்ய தொடங்கினாள். வாசனை கூரையை பிய்த்து கொண்டு சென்றது. சமைத்தாகி விட்டது ஆனால் உடல் கசகசத்தது. குளித்து வர நினைத்து தன் மாற்று சீலையை எடுத்து கொண்டு சென்றாள்.


"இரு! குளிச்சிட்டு வந்துடுறேன்"


அவள் வருவதற்கு தான் தாமதம், அவளை தேடி நான்கு பேர் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு பதில் கூறி முடியவில்லை. அவளின் தேவை அன்று அதிகமாக இருந்தது. அவள் தாமதத்தை கூட பொறுக்க முடியாமல் அருகில் உள்ள அவள் தோழிகளின் வீட்டிற்கு சென்றார்கள். சிலர் அவளுக்காக காத்திருந்து சென்றனர்.


அவள் குளித்து முடித்து தலையை துவட்டியபடி வந்தாள். தினமும் முழுகுகிறாள் என்பதால் அவளுக்கு அவ்வப்போது சளிப்பிடிப்பது உண்டு அதனால் தும்மிக் கொண்டே வந்தாள். வாசலில் நின்று காத்திருந்த ஒருவன்.


"பஸ் ஆப்பகா இந்தாஜார் ஹய்"


"மேன் ஆஜ் நஹின் கர் சகாதா"


"முஜே ஜித்தனா ஹோ சாகே உத்தன கைஷ் தோ"


"நஹின் நஹின் ச்சோடு தோ"


ஏமாற்றத்துடன் சென்றவனை பார்த்து சிரித்துக் கொண்டே உள்ளே வந்தாள்.


வழக்கம்போல தன் அழகை மெருகேற்ற ஆரம்பித்தாள். அவளை இப்போது தான் முழுமையாக கவனிக்கிறான் காவலன்.


"நீங்க இங்கயா இருக்கீங்க"


"தேக்கோ!! கியா ஆப் பாத் கராணா ஜாஹாத ஹேன்...


ஹான் மேரா ஹவிலீ ஹேன்..


ஆமா இதுதான் என்னோட மாளிகை


நான் தான் இங்க பட்டத்து ராணி" என சொல்லி கொண்டே தயிர் கடையும் மத்தை போல தன் கண்களை ஒரு சுழற்று சுழற்றி காட்டினாள். கொஞ்சம் சிரிப்புடன்.


"நீங்க தனியாவா இருக்கீங்க..


இங்க என்ன பண்றீங்க...


என்ன வேல பாக்குறீங்க"


"கியா ஆப் சாவல் பூச்சானா ஜானாதே ஹேன்


ப்ச், பழக்க தோஷத்துல வந்துருது கேள்விலாம் நல்லா கேட்குர இந்த கேள்விலாம் உனக்கு தேவையில்லனு நினைக்கிறேன்


தேவையுல்ல கேள்விகள் உன் புஸ்தகத்துல இருக்கும்" கலுக்கென்று சிரித்தாள்.


"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க"


"ஹரே !! கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா ' தலையசைத்தான் காவலன்' உன் மொழில சொல்லட்டுமா என் மொழில சொல்லட்டுமா


"உன் மொழியில சொன்னா கொஞ்சம் அசிங்கமா இருக்கும்...


என் மொழியில சொல்லவா?"


"என் மொழில அசிங்கமா இருக்குறது உங்க மொழில நல்லா இருக்குமா என்ன?."


"நான் உன்னய என்னமோ நினைச்சேன். பரவால்ல"


"என்ன பத்தி இருக்கட்டும் உங்கள பத்தி சொல்லுங்க"


"விடமாட்ட போலயே"


அவன் உடம்பெல்லாம் ஏதோ ஒரு அசிங்கத்தை எடுத்து பூசியதை போல நெளிந்தான். தப்பான இடத்திற்கு வந்துவிட்டோமோ என மனதை சங்கடப்படுத்தி கொண்டான். இப்படி பட்ட மனிதர்களை அவன் அன்று வரை பார்த்ததும் பழகியதும் இல்லை. அன்று மதுரை இரயில்வே ஸ்டேஷனில் ஒரு முறை இப்போது இங்கு. அவளை ஒரு தீண்டத்தகாத ஒன்றை போல பார்த்தான். வார்த்தைகள் வெளி வர தயங்கியது தடுக்கியது நடுங்கியது.


"நீங்க... நீங்க... அந்த மாறி..."


"ஓ!! கண்டுப்பிடிச்சுட்டியா


ஆமா!


நான் ஒரு ராந்தி...


உன் பாஷைல சொல்லனும்னா தேவடியாள்." புருவத்தை உயர்த்தி நமட்டு சிரிப்பு சிரித்தாள்.


அதை கேட்டவுடன் உடம்பெல்லாம் கூசியது. அங்கிருக்கவே அவனுக்கு அருவருப்பாக இருந்தது.


"எதுக்கு இந்த வேலய செய்றீங்க"


"எதுக்காக செய்வாங்க...


சொல்லு


சுகத்துக்காக வா...


சோத்துக்காக தான்"


"வேனாங்க விட்ருங்க..." கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டான்


"எங்க ஊருக்கு வந்துருங்க


நான் என் ஆத்தா...


நல்லா பாத்துக்குறோம்


உங்கள"


"உன் அன்புக்கு ரொம்ப தாங்க்ஸ்...


என்னால அங்களாம் வர முடியாது..."


"ஏன்...


எதுனால"


"நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி


எல்லாம் என்ன படைச்ச கடவுள சொல்லனும்"


"நீங்க பன்ற தப்புக்கு கடவுள் மேல ஏன் பழி போடுறீங்க."


"க்யாரே சாலா...


நீ டாக்டர் ஆகுறதுக்கு பதிலா அரசியல சேர்ந்துரலாம்


நல்லா பேசுர" நீண்ட நிசப்தம் நிலவியது.


"சரி வா சாப்பிடலாம்..


நான் பரவாலாம தான் சமைப்பேன்...


சொல்லிட்டேன்"


அவனை பார்த்து மறுபடியும் கழுக்கென்று சிரித்தாள். அவனுக்கு என்னமோ பண்ணியது. பசி எடுக்கவில்லை, இருந்தாலும் அவள் சொல்லை தட்ட அவனுக்கு மனம் வரவில்லை. ரொட்டியை பிய்த்து வாயில் வைத்து கொண்டே கேட்டான்


"எப்படி இங்க வந்தீங்க


உங்கள பத்தி சொல்லுங்க"


"என்ன பத்தி என்ன சொல்ல
என்ன பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்லை... "


"சொல்லுங்க...


இங்க எப்படி வந்தீங்க"


"என் அப்பன் குடிகாரன். குடிகிறதுக்காக எல்லாத்தையும் வித்தான். கடைசி என்னையும் வித்தான்.


முதல்ல ஆந்திரா, மும்பை அப்புறம் கொல்கத்தா இப்ப ஜெய்பூர் நாளிக்கு ஹும்.


அவ்ளோதான்" அவள் கூறிய மொழியில் அத்துனை வெகுளித்தனம்.


"கடைசியா உங்க அப்பாவ எப்ப பார்த்தீங்க.."


"ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி...


திருப்பதி பஸ்ல நானும் அவரும் போய்ட்டு இருந்தோம்....


வழியில பஸ் நின்னப்ப பசிக்குதுன்னு கடலை கேட்டேன்...


வாங்கிட்டு வரேனு என்ன ஒருத்தன்கிட்ட விட்டு போனாரு...


அப்ப எனக்கு பதினாறு வயசு...


அப்ப பார்த்தது..."


"அதுக்கப்புறம் பார்க்கவே இல்லயா"


"பார்க்க நேரம் இல்ல"


"என்ன பத்தியே கேக்குறியே


உன்ன பத்தி சொல்லு


"என்ன பத்தி என்ன சொல்ல...


எங்க ஊரு மதுர பக்கத்துல ஒரு சின்ன கிராமம்.


பேரு .... சக்கரப்பட்டி


எங்க வீட்ல நானும் ஆத்தாவும் மட்டும் தான்.


என் ஆத்தா ஊருல கூலி வேலை பாக்குது


எங்க ஐயா விவசாயி, ஒரு பன்னைக்காரர் நிலத்துல வேல செஞ்சாரு நிறைய கடன் வாங்குனதுல நொந்து போய் செத்துட்டாரு....
அப்புறம் எனக்கு ஒரு அக்கா அது சின்ன வயசுல நோய் வந்து செத்துப் போச்சு..."


"ஆமா உன் பேரு என்ன"


"என் பேரா!!


மனக்காவல பெருமாள்"


"மனக்காவல பெருமாளா!!...


பேரு வித்தியாசமா இருக்கு"


"அது எங்க ஆத்தா வச்ச பேரு...


என் ஆத்தா சொந்த ஊரு திருநெல்வேலில நடுக்கல்லூரு, அங்க மணகாவல பெருமாள வேண்டிகிட்டு நான் பிறந்தேனாம்


அதுனால.. அந்த பேரு"


"ஓஹோ..."


சாப்பிட்டு விட்டு சாவகாசமாக இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது அவனுக்கு எந்த அருவருப்பும் இல்லை அவளுடன் சகஜமாக உரையாடினான். தன் தாய் தந்தையின் காதல் கதையை சொல்லி மனம் விட்டு பேசினான். லேசாக உறக்கம் கண்ணை தட்டியது. எப்போது அசந்தார்கள் என்று தெரியவில்லை. இருவரும் சூரியன் உறையும் வரை உறங்கினார்கள்.


மணி ஆறை கடந்து செல்கையில், வேகமாக மனகாவல பெருமாளை எழுப்பினாள் .


"நைட்டு ஒரு டிரைன் இருக்குனு நினைக்கிறேன் வா போலாம்...


சீக்கிரம் கிளம்பு"


திரும்பி ஊருக்கு செல்ல அவனிடம் காசில்லை. நோட்டு புத்தகங்களையும் தன் பையையும் துலாவி கொண்டிருந்தான் ம்ஹூம் காசு பணம் எதுவும் சிக்குவதாக இல்லை. கையை பிசைந்து கொண்டே அங்கும் இங்கும் பார்த்தபடி யோசித்தான்.


"ஏன்பா இன்னும் கிளம்பலயா நீ...


சீக்கிரம் வா அப்புறம் டிரைன் போயிரும்"


வழியில் தவறவிட்ட காசு, திருடர்கள் அபகறித்த காசு என அனைத்தையும் இழந்து நிற்கிறான். எப்போதும் காசுக்காக பெரிதும் சிரமபட்டதில்லை அது வெறும் காகித வெட்டுக்கள் என கடந்து போனவன் இன்று போர்களத்தில் நிராயுதபாணியாக நிற்பதை போல உணர்ந்தான்.


அவன் நடையில் வேகம் குறைந்தது அவளோ தன் முந்தானையை சுழற்றியபடி முன் சென்றாள்.
அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை . என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தான். எப்படி இரயில் ஏறுவது ஊர் செல்வது என்று. வழிநெடுக இதே யோசனை அவனை வாட்டி வதைத்தது. நேரமும் இரவு ஏழை நெருங்கியது. அதுவும் கூட ஏழையாக இருக்கிறது.


அவனது நிலைமையை அவள் அறியாமலா இருப்பாள். ஆனால் அவளிடமும் அவ்வளவு பணம் இல்லை. அவனிடம் அதை காட்டிக் கொள்ளாமல் பேசி கொண்டே வந்தாள்.


"ஊருக்கு போனவுன என்ன மறந்துருவல"


"ம்ம்ம்ம்" என்ற சத்தம் வந்தது.


அதற்கு மறுமொழி என அவள் நினைத்தாள். அவன் குழப்பத்தில் பிதற்றுகிறான் என்பதை பின்னர் உணர்ந்தாள். இரயில் வரும் தண்டவாள பிளாட்பார்மில் பயணியர் இருக்கையில் அவனை அமர வைத்து விட்டு சென்றாள். அதையும் அவன் ஒழுங்காக கவனியாமல் அமர்ந்தான்.


வெகு நேரம் கடந்தது இரயில் கூவும் சப்தம் கேட்டது. அப்போது தான் அவன் அன்னிச்சைகள் அவனை நிகழ் காலத்துக்கு இட்டு சென்றது. அருகில் இருந்த அவளை தேடினான். எங்கேயும் காணவில்லை கண்கள் பரபரத்தது. வியர்வை துளிகள் முகம் நெடுக வழிந்தோடியது. அவளை சொல்லி என்ன பயன் ? என்று நமட்டு சிரிப்பை உதிர்த்து விட்டு மக்கள் கூட்டத்தை பார்த்து கொண்டிருந்தான்.


தூரத்தில் அவள் வரும் வாசனை. ஆம் அவளே தான் இடுப்பில் விலகிய சேலையை எடுத்து சொறுகி மாராப்பினை சரிசெய்து கொண்டே அவனை நோக்கி நடந்து வந்தாள். நிற்க அவள் நடந்து வருகையில் வானத்து தேவதை இறங்கி ஜெய்பூர் இரயில் நிலைய பிளாட்பாரத்தில் நடந்து வருவதை போல இருந்தது. அவள் நடை வைரமுத்துவின் வரிகளில் சின்மயின் குரல் ஒலிப்பது போல ஒரு முரணான நெலிவு கொண்டது.


அவனுக்காக இல்லை என்றாலும் தனக்காக தன்னை அவள் போனி செய்து தான் ஆகவேண்டும். அடுத்த இரண்டு நாள் அவள் தன் வயிற்றை கழுவ வேண்டும் அல்லவா. அதற்காகவும் கூட. சுயநலம் கொண்ட உலகமடா!. ஆனால் அவனுக்காக அவள் இவ்வளவு சிரத்தை எடுத்து கொள்ள வேண்டியதில்லை இருந்தாலும் செய்தாள் ஏதோ ஒன்று அவளை செய்வித்தது.


காசையும் இரயில் டிக்கெட்டையும் அவன் கையில் தினித்துவிட்டாள். அவன் மறுக்கவில்லை. மறுக்க மனம் வரவில்லை.


காசையும் அவளையும் ஏற இறங்க பார்த்தான். வேர்வையில் நனைந்திருந்த அந்த காகிதங்கள் அவள் முந்தானை அசைவின் இடுக்கில் வந்த காற்றில் அசைந்தது. அதை இறுக பிடித்து கொண்டான். காகிதங்கள் இப்போது மோட்சம் பெற்றதை போல அடங்கி ஒடுங்கியது.


"நாய் வித்த காசு குறைக்காது அதே மாறி என்ன வித்த காசு உன ஒன்னும் செய்யாது...


போயிட்டு வா...


அய்யய


வந்துராத


ஹாஹாஹாஹ...."


அவள் அப்படி தான், உள்ளத்தில் எந்த கள்ளமும் கபடமும் இல்லாத ஒரு பாவப்பட்ட மனிதி. அவளை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான். அவன் கண்களுக்கு அவள் எப்படி தெரிந்திருந்தாள் என்று குறிப்பாக தெரியவில்லை. இரயில் படிகளில் ஏறி நின்று அவளை பார்த்த வண்ணம் இருந்தான். அவன் கண்களுக்கு அவள், அவன் குலதெய்வம் பேச்சியின் மறுவுருவமாக தன் தாயின் பிரதிபிம்பமாக அவ்வளவு ஏன் தன் தோளில் இட்டு வளர்த்து தன்னை பிரிந்த தமக்கையின் மறுபிறப்பாக தெரிந்திருக்கலாம் எப்படி தெரிந்தால் என்ன அவள் அவனுக்காக வானத்தில் இருந்து அவிழப்பட்ட நறுமுகை.


கடைசி வரை அவள் பெயரை கேட்கவேயில்லை. பெயரில் என்ன இருக்கிறது


வாழ்க்கை மிகவும் கொடுமையானதல்ல மனிதர்கள் மிகவும் மோசமானவர்கள் அல்ல என்று அவள் அன்று அவனுக்கு புரியவைத்துவிட்டாள். வாழ்க்கையை எதிர்கொள்ளும் பக்குவத்தை அவன் உணர்ந்துவிட்டான்.


இரயில் கிளம்பும் ஓசை கேட்க ஜன்னல் வழியே எட்டி பார்த்தான். தன் சீலையின் கிழிசலில் ஒளிந்திருக்கும் முந்தானையை சொறுகி கொண்டு அவனை பார்த்து சிரித்தாள் அந்த அவிழும் நறுமுகை.


- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

எழுதியவர் : பிரசன்ன ரணதீரன் புகழேந்த (27-Dec-19, 11:10 pm)
Tanglish : avizhum narumugai
பார்வை : 304

மேலே