தைத்திருநாள் வாழ்த்துகள்

விண்ணவர் போற்றும் மண்ணவர் கொண்டாடும்
விடிவெள்ளி காரிகையாய் காலைப் புலர்ந்ததின்று
உழுதோர் உயர்வுதனை சிறப்புடனே விளக்கவிங்கு
நற்பொழுதாய் வந்தாளே வருகவென் தைமகளே!

காரிய தடைகளும் முடிவில்லா பகைகளும்
விலகி நின்றே வழி கொடுக்கும்
தைப் பிறக்கும் நன்னாளாம் இன்னாள்
எண்ணமது ஈடேற்றும் நேரம் நல்கு

ஆதவன் கரம்பார்த்து அசைந்தாடும் பூவினமே
புதுப்பானை பொங்கலிட்டு பச்சரிசி பால்பொங்க
நற்றமிழ் நயம்போல் செங்கரும்புஞ் சேர்ந்தினிக்க
கதிரோங்க செய்தவுன்னை கைகூப்பி வணங்குகிறோம்

சேற்றில் கால்பதித்து வியர்வை உரமுற்றி
சோற்றில் கைவைக்கச் செய்தாயே தோழா
உழவன் கதிரறுக்க பசிமறந்தோர் பலருண்டிங்கு
உன்கீர்த்தி மறந்தோர்க்கும் பயிரறுத்தாய் நீயே

கடுந்துயர் காலமெல்லாம் கரைந்தோடிப் போனதென்று
கார்மேகக் கூட்டங்கள் மண்குளிர வருமென்று
தோகைமயில் விரித்தாடும் கார்க்கோலம் கண்டதென
முகிலினமே முத்தமிட்டு முழக்கத்தோடு தரையிறங்கு

ஆவினம் இளைப்பாற வந்ததொரு பொங்கலின்று
வீட்டிலோர் அங்கமென பொங்கலிலே பங்குண்டு
காளை திமிலடக்கி வீரம் பறைசாற்றி
உழுதுணையாய் உடனிருக்கும் கோவினமே நீடுவாழ்

எழிலொழுகும் திருநாளாம் ஏற்றமிகு பொன்னாளாம்
வளர்ச்சி வான்பொங்க வாழ்நாள் வசந்தமாக
அழகு தமிழ் சொற்கோர்த்து வாழ்த்துரைத்தேன்
நின்வரவால் நாடும் வீடும் செழிக்க

மானுடர் மேன்பூறும் காரிகைத் திருநாளே
தேன முதூறும் தைப்பிறப்பால் ஏற்றதுடன்
உறவும் நட்பும் என்றும் உடனிருக்க
உள்ளம் மகிழ்வித்து வாழ்த்த வருக!

எழுதியவர் : அருண்மொழி (15-Jan-20, 3:30 am)
பார்வை : 257

மேலே