கிழவனல்ல எங்களின் கீழ்வானம் பெரியார்

ஆகப் போகிறது
அவன் இறந்து
அரை நூற்றாண்டு !

ஆரியம் ஏனின்றும்
அலறித் துடிக்கிறது
அவன் பெயர் சொன்னால் !

தீமையைத் தீயினால்
சுட்டுவிடத் திட்டமிடாமல்
நாத்திகத்தை கையிலெடுத்து
நயவஞ்சகத்தை - அவன் தன்
நாவினால் சுட்டு வைத்தான் !

நா சுட்ட வடுவன்றோ
அது தான் இன்றும்
ஆரியத்தின் மேனியெங்கும்
ஆறாமல் கிடக்கிறது !

இச்சைகள் இறைந்துகிடந்த
கொச்சைக் கதைகளையே
இறைக் கதைகளென்று
ஆரியம் சொன்ன - பல
பச்சைப் பொய்கள் நம்பி
மூட நம்பிக்கையில்
முடங்கிக் கிடந்தோரை
இடித்துரைத்து திருத்தி வைத்த
#இந்தியாவின்_இங்கர்சால் !

சிம்மக் கூட்டத்தை
சிறு முயலாய்
மருளச் செய்துவிட்டு
ஓநாய்கள் ஒய்யாரமாய்
ஆள்வதைப் போல
சாத்திரக் கதைபேசி நமக்கு
சூத்திரப் பட்டம் சூட்டி
ஆட்டுவித்த ஆரியத்தின்
சூட்சுமத் தடையுடைத்து
சாதியத் திரைகிழித்து
சமதர்ம வானில் எம்மை
பறக்கச் செய்த
#பகுத்தறிவுப்_பகலவன் !

வேதமெனும் பேரைச் சொல்லி
நம் மேல் ஆரியம் பூசிய
பேத அழுக்குகளை
வெளுத்து வெளுத்து
விரட்டியடித்த
#வெண்தாடி_வேங்கை அவன் !

சாத்திரப் புளுகுகள் எல்லாம்
சந்தி சிரித்து விட்டதனால்
ஆத்திர ஏணியிலேறி
இல்லாத அறிவும் வீரமும்
இருப்பதாய் நினைத்து
இன்றும் நம்மை
அடக்கியாளத் துடிக்கிறது ஆரியம் !

அதிகம் போனால்
ஆரியத்தின் வீரம்
என்ன தெரியுமா?
விளக்குகள் அணைந்த பின்னே
முகத்தினை மூடிக்கொண்டு
வீதிகளில் நிற்கின்ற
சிலைகளில் அவன்
தலை உடைப்பதுவே !

உயிரோடிருக்கும் வரை அவன்
மயிர் தொட முடியாத ஆரியம்
வேறென்ன செய்திடும் பாவம் !

பற்றி எரிகிற
பெரியாரெனும்
பெருநெருப்பை
அவ்வப்போது
அணைத்துவிட முயல்கிறது
ஆரியம்!

அவன்
பற்ற வைத்துப் போனது
சிறு பொறியல்ல..
தன்மானம்
சுயமரியாதையெனும்
காட்டுத் தீ !

ஆயிரம் ஆண்டுகள்
ஆனாலும் அணைப்பதற்கு
ஆரியத்தால் ஆகாது !

அவன்
கிழவனல்ல....
எங்களின் கீழ்வானம் !
சீண்டும் போதெல்லாம்
அந்தக் கிழக்கு
சிவந்து கொண்டேயிருக்கும் !

#பெரியார்
#திராவிடப்_பெருநெருப்பு

எழுதியவர் : மனோ கௌதம் (5-Feb-20, 1:25 am)
சேர்த்தது : மனோ கெளதம்
பார்வை : 500

மேலே