தாய்மொழி வணங்கு

==========================
மொழிகளி லெல்லாம் முதிர்ந்த மொழிநம்
மொழியென நீயும் மொழிந்தே – விழிகாத்து
நிற்கும் இமைபோல் நிதம்காத்து நாளையுன்
கற்கும் பரம்பரைக் கூட்டு.
**
ஊட்டி வளர்க்கும் உனதன்பு பிள்ளைமேல்
காட்டுமன்பில் சற்றேனும் காட்டியே – நாட்டிவைத்தக்
கன்றுயர நாளும் களையெடுகுந் தோழனாய்
என்றும் தமிழ்வளர்ப்பா யே.
**
வளர்ந்த தமிழாள் வளரா திருக்க
கிளர்ந்த பிறமொழிக் கற்றே – தளர்ந்தார்
நுனிநா கிணற்று நுணலாய்ப் புலம்பல்
இனியாகா தென்றே இயம்பு.
**
இயம்பு முனதித ழின்சுவை பேச்சால்
மயங்கிட வைக்கும் மருந்தைச் – சுயம்பெனத்
தந்து சுகமூட்டும் சுந்தர தாய்மொழி
வந்தனம் செய்யத் தகும்.
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Feb-20, 3:29 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 74

மேலே