எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது

நேரிசை வெண்பா
(’ன்’ ‘ம்’ மெல்லின எதுகை)

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்(று) எளிது.

- ஔவையார்

தூக்கணாங் குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும்.

அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக என்கிறார் ஔவையார்.

ஒளவையார் பாடிய,

நேரிசை வெண்பா

விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

பாடலும் பேசிய பேச்சும் சோழனைப் பெரிதும் வருத்தின. கம்பரிடத்தே அளவற்ற அன்பு கொண்டிருந்தவன் அவன். தன் அவையிலேயே, ஒருவர் கம்பரைப் பழிப்பதைக் கண்டு கலங்கினான்.

பழித்துக் கூறியவரோ நாடனைத்தும் கொண்டாடும் ஒளவையார், அதனால் அவரைச் சினந்து கொள்ளவும் முடியவில்லை. அவரைத் தெளிவுபடுத்தவே அவன் விரும்பினான்.

கம்பர் எனக்கு வேண்டியவர்; இதில் ஐயமில்லை. ஆனால், அவரைப் பாராட்டியது அவருடைய புலமை நுணுக்கத்தை அறிந்து உரைத்ததே ஆகும்.

மற்றுத் தாங்கள் கருதுவது போல அவருடைய ஆடம்பரங்களை நினைத்து அன்று. அவரைப் போலப் பெரிதான காவிய நூலைச் செய்து சிறப்புற்றவர் வேறு யார்தாம் இருக்கிறார்கள்? என்றான் அவன்.

கம்பருக்கு ஆதரவாகவும் அதேசமயம் ஒளவையார் பாரகாவியம் எதுவும் பாடவில்லை என்பதைச் சுட்டியதாகவும் அவன் பேச்சு அமைந்தது.

அதனைக் கேட்ட ஒளவையார்,

"சோழனே! தூக்கணாங் குருவியின் கூட்டினைக் கண்டிருப்பாய். அதனைப் போல எவராலாவது ஒரு கூடு கட்ட முடியுமா?

குளவிகள் கட்டும் வலிய அரக்குக் கூட்டினைப் போல எவராலாவது செய்வதற்கு இயலுமா?

பழமையான கரையானின் புற்று எவ்வளவு அழகுடனும் நுட்பமுடனும் அமைந்திருக்கிறது!
தேனிக்கள். கட்டும் கூடுகளிலேதான் எத்தனை அமைப்பு நுட்பம் விளங்குகிறது!

சிலந்தியின் வலையைப் போல எவராலாவது ஒரு வலை பின்னிவிட முடியுமோ?

இவற்றை யாராலுமே செய்யவியலாதுதான். அதனால், அவற்றையே தொழில்நுட்பத்தில் தலைசிறந்தவை என்று பாராட்டலாமோ? அதற்கு அதனதன் கூட்டினைக் கட்டுதல் எளிது; அஃதன்றி, வேறு எதுவுமே அவற்றுக்குத் தெரியாது.

அதனைப்போலவேதான் கவிதையும். ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாயிருக்கும்.

கம்பர் விருத்தப் பாவில் வல்லவரானால்,

வெண்பாவில் புகழேந்தியார் இருக்கிறார்.

உலாவில் நம் ஒட்டக்கூத்தர் வல்லவர்.

இப்படி ஒவ்வொரு துறையிலும் வல்லவர் உளர்.

அந்தந்த வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும்! அதுதான் சிறப்பு.

"அஃதல்லாமல், ஒரு துறையிற் சிறந்தவரையே எல்லாம் அறிந்தவராகக் கொண்டு, அளவுக்கு மீறிப் பாராட்டுதல் கூடாது.

அவரும் அனைவரினும் பெரியவர் என்று செருக்குறுதலும் தவறு.

ஒவ்வொருவருக்கும் பிறராற் செய்யவியலாத ஒன்றை எளிதாகச் செய்வதற்கு இயலும்.

இதனை உணர்ந்து அடங்கியிருப்பதுதான் புலமை உடையவரின் பண்பு” என்றனர்.

ஒளவையாரின் பாடற் கருத்தினை அந்த அவையாலும், கம்பர், சோழன் ஆகியோராலும் மறுக்க முடியவில்லை.

எப்படியோ தன்பால் வளர்ந்து விட்ட கம்பர் மீதுள்ள அளவற்ற அன்புதான், அவரை அளவுக்கு மீறிப் போற்றுமாறு செய்தது என்பதனைச் சோழனும் உணர்ந்தான்,

அதனால் புலவர்கள் பலர் புண்பட்டிருப்பர் என்பதனையும், தன்மீதுள்ள அச்சத்தாலேயே அதுவரை ஏதும் கூறாதிருந்திருக்க வேண்டும் என்பதையும், அதன் பின் அவன் தெரிந்து கொண்டான்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-20, 11:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 866

மேலே