விதி

எல்லாமே விதிப்படித்தான் நடக்கும் என்று கூறிக்கொண்டே கஷ்டங்களின் நிவர்த்திக்காக இறைவனை நாடுகையில் விதிக் குதிரையின் கடிவாளம் இறைவன் கையில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறானோ! கஷ்டங்களுக்குப் பரிகாரம் தேடி ஆலயங்கள் சுற்றுவதால் தர்மதேவனின் கணக்கேடுகளை மாற்றி எழுத முடியமா?

கீழே இடறி விழுந்தபின் ஊன்றி எழ முயற்சிக்காமல் விதி என்ற ஒன்றை வசைபாடிக்கொண்டு நொந்து கிடப்பவர்களும். தானாய் வலியப் போய் சிக்கலில் மாட்டிக்கொண்டு விதி ஆட்டிப் படைக்கிறது என்று புலம்புபவர்களும் இங்கே அதிகம். எல்லாம் என் தலையெழுத்து என அங்கலாய்ப்பவர்களில் பலர் பிரச்சினையை பேரம் பேசி வாங்கியிருப்பார்கள்.

யோசித்து செயலாற்றவேண்டிய காரியங்களில அவசரகதியில் இறங்கி, அவை கைகூடாத பட்சத்தில், பழியை விதியின்மீது தூக்கிப் போடுவதைப் போன்ற மூர்கக அறியாமை வேறு உண்டா?

ஆசை பேராசையாக வடிவெடுத்து நிராசையாக முடியும்போது விதியை வசவு பாடுகிறான். சந்தர்ப்பவாதியாக காலம கழித்து, எண்ணங்கள் நிறைவேறா துக்கத்தில் விதிக்கு எதிரான தத்துவார்த்த கருத்துகளை சரமாரியாய் அள்ளிவிடுகிறான்

பூனையின் மூடிய கண்களால் இருண்டுபோன பூலோகதில் மனிதன் வாழ்கிறவரை அறியாமை பூதககண்ணாடியால் விதியை.தேடியவண்ணம்தான் இருப்பான்

விந்தையான கனவுகளின் பலாபலன்கள் குறித்த பதில்களுக்கான சந்தேக கேள்விகள் போல்... விதியின் தரவுகள் திகிலான ஆருடங்களால் தகவமைக்கப்பட்டிருக்கின்றன.

செல்வந்தனை பசியெடுக்காதவனாகவும் வறியவனை பசியாற வழியற்றவனாகவும் நடத்தும் முரண்பாட்டுத் தர்மம் கொண்டதுதான் விதி என்றால் நாம் இருப்பது புண்ணிய பூமியிலா?

தேர்வரங்கில் சரிவர ஞாபகத்திற்கு வராத மனப்பாடப் பகுதியால் தடுமாறும் விடைபோல, விதியின் வினாக்கள் நம் வாழ்க்கைப் பரீட்சையை குழ்ப்பிக்கொண்டே இருக்கின்றன.

தடுமாறினாலும் கீழே விழாதவனுக்கும் தடுமாறாமல் சட்டென விழுபவனுக்குமான செயல்பாட்டின் சூதன முறைமைகளை விதியின் சித்தாந்த நியமங்களாக கட்டமைத்துப் போய்விட்டனர் முன்னோர்கள்.

சமைத்தப்பின் சுவைத்துப் பார்த்து கண்டறிய அவசியமின்றி முன்னரே சரியான விகிதத்தில் உப்பிட்டுவது போல் வாழ்க்கையை கையாள தெரிந்துகொண்டால் நம் நிகழ்வுகளின் காரண காரியங்களுக்கு விதியின் முகாந்திரம் தேவைப்படாது

வலிமிக்க தோல்வியின் அனுபவ சுமைகளை தோள்களில் சுமந்தவாறு ஜீவிக்கும் நமக்கு, நம் அயரா உழைப்புகளி்ன் பலாபலன்களின் நம்பிக்கையை மீட்டுத் தராத நம் எதிர்காலத்தையும் விதியையும் எதன் அடிப்படையில் தொடர்பு படுத்துவது?

வாய்ப்புகளை எதிர்பார்த்து நிற்கும்போது, உந்தும் உள்ளுணர்வின் சொல்லுக்கேற்ப ஓரளவுக்காவது சிரத்தையெடுத்து முன்னோக்கி நடந்தால், பாதைகள் பலவற்றை நமக்காக திறந்து காலங்கள் வரவேற்கலாம். முதல் பாதையில் கிட்டாத வெற்றியை அடுத்தடுத்த பாதைகளில் ஆங்காங்கே ஒளித்துவைத்து ஒளிந்து நின்று வேடிக்கை பார்க்கிறது காலம். காலத்தின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில். வெளிப்படையாக நமக்கு புலப்படாத வாய்ப்புகளுக்காக ஒளிந்திருப்பவைப் பற்றி துப்புக் கிடைக்காத கோபத்தில் விதியை கடிந்து கொள்வதால் என்ன பலன்?

கண்கட்டு வித்தையின் கண்கூடான உதாரணமா விதி?

வாழ்க்கை பாடத்தின் பிம்பத்தை எதிர்மறை எழுத்துகளாக கண்ணாடியில் பிரதிபலிக்கும் ஒன்றாக விதியை கருதுகின்றனர்

பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்று தடம்புரளும்போது, கற்பிதமாக்கப்படும் விதியின் கர்மாந்திர ஆருடங்களை யாராலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மன்னிக்கத் தகுதியற்ற குற்றங்களை தவறுகளாக பாவித்து சகித்துக்கொண்டு சிலுவையை சுமக்க இங்கே எவர் தோளிலும் சக்தியில்லை. உயிர்த்தெழும் வரத்தை பெற்றுப் போனவர் ஆண்டவர் ஒருவரே.

ஒருவரது கவனக்குறைவால் காவு வாங்கப்படும் பலரது அகால மரணங்களில் சந்தி சிரிக்கும் விதியின் கர்ணக்கடூரக் கோட்பாடு பரிசோதனைக்குட்படாத வாழ்வியல் சாபமாக கருதப்படவேண்டும். ஈடுசெய்ய முடியா இழப்புகளின் எல்லையற்ற வேதனைகளால் தலை கவிழ்ந்து நிற்பதா விதி?.

உலகத்தை ஒரு சர்க்கஸ் கூடாரமாக்கி, தன் மாயாவி வித்தைகளால் நம் வாழ்க்கைகக்குள் சூட்சுமப் புதிராய் விளையாடிப் போவதாக கருதப்படும் விதியால் நம் நுட்பமான சிக்கல்களள எப்படி நுணுக்கமாய் நிவர்ததிக்க முடியும்?

வேகமாக வந்துகொண்டிருக்கும் வாகனத்தின் வேகத்தை மட்டுப்படுத்தவும் நிற்பதற்கும்தான் முறையே மஞ்சள் மற்றும் சிவப்பு சிகனல்கள் என்பதே [போக்குவரத்து] விதி. மஞ்சள் சிவப்பாக மாறுவதற்கு முன்னும் சிவப்பு விழுந்ததன் பின்னும் நில்லாமல் கடப்பது விதிமீறல்தானே?. அதுபோலவே வாழ்க்கை நியம நிர்ணயிப்புகளை அலட்சியப்படுத்திக் கடப்பவர்கள் அந்த மீறல்களாலேயே பாதிப்புக்குள்ளானால் அதற்கு விதி எப்படி பொறுப்பாகும்?

விதி என்றால் என்ன என்று அறியாத வயதில் ஒரு சின்னஞ்சிறிய குழந்தை காமுகக் கொடூரர்களால் கூட்டு பாலியல் கொடுமைக்காட்டு சித்ரவதைப்பட்டு சாகும் அளவுக்கா விதி பிஞ்சின் தலைவிதியை அருவருப்பாய் எழுதியிரு்க்கும்? சாத்தியமே இல்லை.

பின் வரும் விளைவுகளையும் அதனால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளையும் பற்றி தீர கலந்தாலோசிக்காமல் உருப்படியற்ற திட்டங்களைத் தீட்டி அவசரமாய் அமல்படுத்தி நாட்டை தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் ஒரு சமயோசிதமற்ற தலைவன் மூலமாகவா அந்நாட்டு மக்களின் விதி எழுதப்பட்டிருக்கும்?

சூடுபடுத்தியவனே சுடுகாயத்திற்கான மருந்தை ஒளி்ததுவைத்துக்கொள்கிறான் பேசப்படும் பகிரங்கப் பேரங்களில் அப்பட்டாய் விதி மீறி சம்பாதிக்கிறான். இயலாமையாளர்களின் மரணக் கிடங்குகளில் காந்திக் கணக்கில் குவிக்கப்படுகின்றன சவங்கள். பொறாமையும் பேராசையும் போட்டிப் போட்டுக்கொண்டு மானுடத்தை சின்னபின்னமாக்குகின்றன.

மத துவேஷத்தாலும் இனவெறியாலும் சிக்கி சின்னபின்னமாகி தங்கள் வீடு, உடைமை, உறவுகளை இழந்து இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இடம்பெயரும் நிலைக்கு ஆளாகி அல்லல்படும்படி எப்படி விதியால் கூட்டு நிர்ணயம் செய்யமுடியும?

கொடுங்கோல் சரித்திரத்தின் கரும் பக்கங்களில் அழிக்கமுடியாத ரத்தத் திட்டுகளாக படிந்திருக்கும் நாஜிப் படைகளின் சித்ரவதை கூடங்களில் மரித்த அத்தனை யூதர்களின் அகோர சாவுகளையும் நிர்ணயிக்கும் துர்வல்லமை படைத்ததா விதி?

சாதி வன்முறையால் பச்சிளம் குழந்தைகள் நெருப்புக் கலத்தில் தூக்கி எறியப்பட்டு அகால மரணமடையும்படியா விதி அந்த மழலைகளி்ன் மரண சாசனத்தை மனசாட்சியின்றி எழுதியிருக்கும்?

பெருங் குற்றத்துக்கு மேல்மனது தூண்டபடும்போதே, அதற்கு உடன்படாமல் ஆழ்மனதில் மெல்லிய ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறது. அந்த ஓசையை புறந்தள்ளி பாவக்காரியத்தில் ஈடுபடுபவனின் பாதகக் கணக்குக்கு மாறாக விதியால் எவ்வாறு வரவு வைக்கமுடியும்?

ஆயினும், நியதியற்று திரட்டிய செல்வத்தின் கணிசமான பயன்பாடு எண்ணற்ற மாத்திரைகளின் நுகர்வில் சாவகாசமாய் கரைவதை கண்கூடாய் பார்க்கிறோம்

பொம்மலாட்ட இயக்கத்தின் கட்டளைக்காட்படும் கதாபாத்திரங்களாக பாவித்து இயங்கும் வாழ்க்கைக்கு வித்திட்டவை மனிதானால் தோற்றுவிக்கப்பட்ட சட்டத் திட்டங்களே. வீணாக விதியை களத்தில் இறக்கவேண்டாம்

நேர்கோணமாக காகிகத்தில் வரையப்பட்ட சித்திரத்தின் தீட்டப்படாத பின் பகுதியாக நம் வாழ்க்கையை மறைமுமாக நம் பாவ – புண்ணியத்திற்கேற்ப நிர்ணயிப்பதுதான் விதியா? பம்பரத்தை சுற்றிவிட்ட கயிறே அதை ஏந்தி கையில் நிறுத்துவது போலவே... நம்மை ஆட்டிப்படைப்பதாக கூறப்படும் விதியா நம்மை கைதாங்கி பிடித்து அரவணைக்கும்?

ஒவ்வாத உணவால் உபத்திரத்திற்குள்ளாகும் உடலை உரிய மருந்துகளால் குணப்படுத்திக்கொள்வதுபோல், சாதகமற்ற நிகழ்வுகளால் சஞ்சலமாகும் வாழ்க்கையை வைராக்கியத் திறனால் நிவர்த்தித்துக் கொள்ளவேண்டுமே தவிர, காலாவதியான விதியை எண்ணி கருவிகொண்டிருக்கக்கூடாது

மந்திரக்கோலை தன் கையில் ஏந்தி, மாய்மாலங்களை ஏவிவிட்டு நம்மை அல்லல்படுத்தும் சூன்ய பூதம் அல்ல விதி. அதேவேளை, புழுதி படிந்த குற்றக்கோப்புகளை தூசுத் தட்டியெடுத்து சாவகாசமாய் ஆவணப்படுத்தும் நீதிதேவதையும் அல்ல.

விதி தனது செங்கோல் நீதிகளை அவ்வப்போது சரிவர மேம்படுத்திக் கொண்டிருந்தால்,. உலகில் தொன்னூறு சதவீதத்துக்கும் மேலானோர் ஏன் மறுமையற்ற நிலையை வேண்டி பிரார்த்திக்கின்றனர்?

நடந்தவை கெட்டவையாக இருந்தபோதும் நடக்கவேண்டியவை நல்லவையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு எண்ணி செயல்பட்டால்தான் நடப்பவையோடு நம்மால் உடன்பட்டு வாழமுடியும்
.
ஏதோ ஒரு சக்தி எப்படி இயங்குகிறது என்று தெரியாதவாறு எங்கோ ஓரிடத்தில் எப்போதே ஒருமுறை யாரோ ஒருவருக்கு எதிர்பாராத ஒரு நல்லதை செய்துபோகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மைதான். அதன் பெயர்தான் விதியா என்று அறுதியிட்டுக் கூற இயலாத நிலையில், மறுபெயர் யோசனைக்கு நமக்கு ஆட்படும்வரை, அந்த பெயரே இருந்துவிட்டு போகட்டுமே!

இறுதியாக சொல்ல வருவது இதுதான்...

இல்லாத விலாசத்தின் போலி முகவரிதான் விதி

-----------------------------------------------------

எழுதியவர் : யேசுராஜ் (7-Mar-20, 10:58 am)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : vidhi
பார்வை : 117

மேலே