புகை வேண்டா

நண்பர்கள் ஒன்றாகக் கூடும் போது
நலக்கேடு விளைவிக்கு மென்ற றிந்தும்
வெண்சுருட்டை யிதழ்களிடைப் பற்ற வைத்து
வேடிக்கை யாய்ப்புகையை உள்ளி ழுத்துக்
கண்டபடி வாயினின்றும் மூக்கி னின்றும்
காற்றினிலே சுருள்சுருளாய் வெளியே விட்டால்
எண்ணற்றோர் பாதிக்கப் படுவா ரும்மால்
இலவசமாய்த் துன்பத்திற் காளா வாரே!!

விளையாட்டாய்ப் பழகியதே வினையாய்ப் போகும்
விடாப்பிடியாய் அப்பழக்கம் தொற்றிக் கொள்ளும்!
களையிழந்தே உதடுகளும் கறுத்துப் போகும் !
காசநோயால் வறட்டிருமல் ஆளைக் கொல்லும்!
இளைப்புவந்து மூச்சுவிடக் கடின மாகும்
இதயத்திற் கும்கேடு வந்து சேரும்!
வளமாக நோயின்றி நலமாய் வாழ
மறந்தேனும் புகைபிடிக்க எண்ண வேண்டா! !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:59 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 11

மேலே