காளியம்மா

காளி யம்மா உன்னைக் காணக்
கண்கள் ரெண்டும் ஏங்குது !
தோளை யழுத்துஞ் சுமையால் நெஞ்சம்
சோக ராகம் பாடுது !
தாளை யிறுகப் பற்றிக் கொண்டு
தாயு னருளை நாடுது !
நாளை விடியும் வாழ்வு மென்ற
நம்பிக் கையுங் கூடுது !!

காயப் பட்ட உள்ளந் தன்னைக்
கனிவாய்த் தேற்ற யாருளர் ?
தாயை விட்டால் யார ணைப்பர்
தயவு செய்ய வேண்டுமே !
வாயி லுன்றன் நாமம் தவிர
வார்த்தை யேது மில்லையே !
காயம் பொய்த்துப் போகும் முன்னம்
கருணை காட்ட வோடிவா!!

உருவம் கண்டு பயந்த தில்லை
உன்னைத் தாயாய்க் கருதினேன் !
பெருகு மன்பில் விழிநீர் சிந்தப்
பிள்ளை நானும் பாடினேன் !
வருந்தி வருந்தி அழைத்த போதும்
வாரா விட்டால் வாடுவேன்!
அருகில் வந்துன் கைக ளாலே
அணைத்தால் மகிழ்வி லாடுவேன் !!

பட்ட துன்பம் போது மென்று
பாசத் தோடு நீவுவாய் !
மொட்டை முட்டும் தென்றல் போலும்
முத்தத் தால்ம யக்கு வாய் !
அட்டி யின்றி அரை நொடிக்குள்
அச்சந் தன்னை நீக்குவாய் !
தட்டித் தட்டி மாச கற்றித்
தங்கம் போலும் மாற்றுவாய் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 2:15 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 5

மேலே